சிலர் எப்பொழுதும் பொது தொண்டினையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் பொது சேவை செய்ய துணிவார்கள். அவர்கள் தொண்டு செய்ய முந்துபவர்கள். தலைமைக்கு பிந்துபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவ்வாறு தொண்டு செய்ததன் பயனாக தலைவராகும் பொறுப்பும் வந்து சேரும். அவர்கள் யாரிடமாவது கடன் பட்டு முன்னேறி இருந்தால் அது ஒரு பெரிய நெருடல் ஆகவே இருக்கும். அதை அடைக்கும் வரை ஓய மாட்டார்கள். சமயம் கிடைக்கும் பொழுது எல்லாம் யாருக்கேனும் உதவி செய்ய முன் வருவார்கள்.
இன்னும் சிலருக்கு செய்த செயல் 'விதைத்ததே விளையும்' என்பதற்கு இணங்க தக்க தருணம் பார்த்து எதிர்பாராத நேரத்தில் பதில் உதவியை செய்ய, பெற வாய்ப்பு கிடைக்கும். பின்னர்தான் அந்த செயலுக்கான வெற்றி அது என்பது தெரியவரும்.
சில நேரங்களில் அதிகமாக சாதம் வடித்து விடுவோம். அது எல்லோரும் சாப்பிட்டது போக மீந்து இருக்கும்.
அதை கொட்டுவதற்கு மனது வராது. அதை கட்டுச்சோறாக கட்டி வைப்போம். அந்த சாதம் அடுத்த நாள் பயன்படும். அதை ஒரு பழமொழியாக கூறுவார்கள் ."கட்டி வைத்த சோறு பயன்பட்டது போலவே விட்டு வந்த கடனும் திரும்ப வந்து மகிழ்ச்சி அளிக்கும்" என்பதுதான் அது.
அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு 18 வயது நிரம்பிய மாணவன் பீஸ் கட்ட முடியாமல் அவதிப்பட்டான். காரணம் அவனுக்கு பெற்றோர் இல்லை. ஆதலால் எப்படி பணம் திரட்டி பீஸ் கட்டுவது என்று தவித்த இவனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது. இன்னொரு நண்பனோடு சேர்ந்து கொண்டு ஒரு பியானோ இசைக் கச்சேரி நடத்தி பணம் திரட்டுவது என்று இருவரும் முடிவுக்கு வந்தனர். நேரே பிரபல பியானோ வாசிப்பாளரான இக்னேசி ஜே. பேடரி வாஸ்கி என்பவரிடம் சென்றனர்.
இவர்களைப் பார்த்ததும் அவரது நிர்வாகி, 'பியானோ கச்சேரிக்கு 2000 டாலர் தருகிறோம் என்ற உத்தரவாதத்தினை தர தயாரா?' என்று கேட்டார்.
இந்த மாணவர்களும் ஒப்புக்கொண்டனர். பிரமாதமாக விளம்பரப்படுத்தி எப்படியும் பியானோ கச்சேரி தங்களுக்கு உதவும் என்ற நல்ல நம்பிக்கையுடன் காத்திருந்தனர். காரணம் அவர் ஒரு பிரபலமான பியானோ கச்சேரிக்காரர்.
அவ்வளவு பாடுபட்டும். நிகழ்ச்சியில் எதிர்பார்த்த மாதிரி பணம் வராததால் ஏமாற்றமே மிஞ்சியது. என்றாலும் மொத்தமாக வந்த வசூல் 1600 டாலர் அளவு தான் என்றாலும், மிகவும் வேதனைப்பட்ட இந்த இருவரும் பிரபல பியானோ வாசிப்பாளர் பேட்டரி வாஸ்கி அவர்களை நேரில் சந்தித்து இதனை மறக்காமல் கூறி வசூலான 1600 டாலர் பணத்துடன் 400 டாலருக்கு செக் எழுதி பின் தேதியிட்டு தந்து ஏற்க வேண்டினர்.
ஆனால் பேட்டரி வாஸ்கி தயவு செய்து இதில் நிகழ்ச்சிக்கான செலவு போக, உனது சம்பளத் தொகை போகவும் மீதமிருந்தால் அதை மட்டும் எனக்கு கொடுங்கள் என்று கூறி இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அந்தப் பணம், செக் இரண்டையும் திருப்பி தந்துவிட்டார்.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்தி விடை பெற்றனர்.
இந்த பியானோ பிரபல இசை மேதை பின்னாளில் போலந்து நாட்டின் பிரதமரானார். சிறந்த ஆளுமை உள்ள தலைவர் தான் என்றாலும், முதல் உலக யுத்தம் காரணமாக போலந்து நாட்டு மக்கள் பசி, பட்டினி, பஞ்சத்திற்கு ஆளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தனது நாட்டின் ஒரு கோடி 50 லட்சம் மக்களின் பசி, பிணி போக்க தங்களிடம் பணம் இல்லாததை சுட்டிக்காட்டி அமெரிக்க உணவு நிவாரண நிர்வாகத்திடம் உதவி கோரினார்.
அப்போது அதிபர் ஹோவர் உதவி செய்ய ஒப்புக்கொண்டு உடனே கப்பல் மூலம் பல நூற்றுக்கணக்கில் உணவு வகைகளை அனுப்பி பட்டினியால் பரிதவித்த போலந்து வாசிகளுக்கு உதவினார்.
பிரதமர் பேட்டரி வாஸ்கி அவர்கள் அமெரிக்க அதிபருக்கு நன்றி செலுத்த நேரில் சென்றார். அமெரிக்க அதிபர் ஹோவரை சந்தித்து நன்றி சொன்ன போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
'தயவுசெய்து நீங்கள் எனக்கு நன்றி கூற வேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை நீங்கள் மறந்திருப்பீர்கள். ஸ்டாரண்ட் போர்டு பல்கலைகழக மாணவர்களில் ஒரு மாணவருக்கு சம்பளம் கட்ட உதவினீர்களே அந்த மாணவன் நான்தான்' என்று கூறி அவரையே திகைக்க வைத்தார்.
விதைத்தது விளைந்தது. செய்தது திரும்புவது தானே உலக விசித்திரங்களில் ஒன்று. நாம் அனைவரும் நமது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப உதவினால் அந்த விதை மீண்டும் பூக்கும், காய்க்கும், கனிந்த பலனைத் தரும்!
ஆமாம் ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ என்று தானே நம் வள்ளுவரும் கூறி உள்ளார். பொதுநலம் ஒரு ஊற்று. அது ஊற நாம் வழி காட்டுவோமாக!