யார் என்ன நினைப்பார்கள்? இளைஞர்களின் கனவுகளை முடக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறை!

Sad young man
Sad young manImg credit: AI Image
Published on

இன்றைய வேகமான உலகில், இளைஞர்களாகிய நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய சவால் போட்டி. ஆனால், அந்தப் போட்டியை விட மிகப்பெரிய சவால், நம் மனதில் தோன்றும் ஒரு கேள்விதான். "நான் இதைச் செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்பதுதான் அந்த கேள்வி.

வாழ்க்கை என்பது நமக்காக வாழப்பட வேண்டிய ஒரு அழகான பயணம். ஆனால், நம்மில் பலரும் அந்தப் பயணத்தை நமக்காக பயணிப்பதில்லை. மாறாக, நம்மைச் சுற்றியுள்ள நான்கு பேர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயத்திலேயே நம்முடைய தனித்துவமான விருப்பங்களைக் குழிதோண்டிப் புதைக்கிறோம். இந்த ஒரு கேள்விதான் இன்று பல இளைஞர்களின் திறமைகளை முடக்கி வைத்திருக்கும் உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இந்த சிறைச்சாலையின் சாவி நம்மிடமே உள்ளது.

"பக்கத்து வீட்டுப் பையன் 90% மார்க் வாங்கியிருக்கிறான், நீ ஏன் வாங்கவில்லை?", "உன் நண்பன் செட்டில் ஆகிவிட்டான், நீ இன்னும் என்ன செய்கிறாய்?" போன்ற ஒப்பீடுகள் காரணாமாக இந்த எண்ணம் நம் சிறுவயதிலேயே தோன்றிவிடுகிறது.

இதன் விளைவாக, நம்முடைய மகிழ்ச்சியை விட, மற்றவர்களின் பார்வையில் நாம் வெற்றியாளராகத் தெரிவதே முக்கியம் என ஒரு போலியான திரையை நமக்குள் உருவாக்கி விடுகிறோம்.

இதுபோன்று, மற்றவர்களின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாம் நம்மையே இழக்கிறோம். முடிவெடுக்கும் திறனை இழக்கிறோம். ரிஸ்க் எடுக்க தயங்குகிறோம். இந்த எண்ணம் உங்களை மன ரீதியாகப் பலவீனப்படுத்தும்.

உங்களுக்கு ஏற்படும் தோல்வியைப் பற்றி ஒரு நிமிடம் பேசிவிட்டு, அடுத்த நிமிடம் அவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஆனால், அந்த ஒரு நிமிடப் பேச்சுக்காக நீங்கள் உங்கள் முழு வாழ்நாள் கனவையும் தியாகம் செய்கிறீர்கள் என்பது தான் நிதர்சன உண்மை.

இதையும் படியுங்கள்:
தலைக்கு மேல் பிரச்னையா? குக்கர் தரும் இந்த 2 நிமிட பாடம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!
Sad young man

விமர்சனம் என்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் நன்றாக இருந்தாலும் விமர்சிப்பார்கள்; மோசமாக இருந்தாலும் விமர்சிப்பார்கள். நீங்கள் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தாலும் விமர்சிப்பார்கள். இதுபோன்ற விமர்சனங்கள் வரும்போது, அவர்கள் ஒருபோது உங்களுக்குத் துணையாக வரமாட்டார்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகக்கூட இருக்கலாம். ஆனால், அது உங்களுடைய தவறாக இருக்கட்டும். மற்றவர்கள் சொன்னதைக் கேட்டுச் செய்து தோற்பதை விட, உங்கள் மனதிற்குப் பிடித்ததைச் செய்து தோற்பது மேலானது. அந்தத் தோல்வி உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்.

உலகம் உங்களைப் பற்றி என்ன நினைக்கும் என்பதைத் தீர்மானிப்பது உங்கள் கையில் இல்லை. ஆனால் நீங்கள் யார் என்பதை உலகுக்குக் காட்டுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற மனநிலையை உடைத்து வெளியே வரும் அந்த நிமிடம் தான், உண்மையான சுதந்திரம் பிறக்கிறது.

கூட்டத்தோடு கோவிந்தா போடாமல், உங்களுக்கென ஒரு பாதையை உருவாக்குங்கள். அன்று உங்களை விமர்சித்த அதே வாய், உங்கள் வெற்றியைப் பார்த்துப் புகழும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com