

சின்ன வயதில் இருந்து வீட்டில் நமக்கு ஒரு நல்ல பண்பை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். யாராவது கஷ்டப்பட்டால் ஓடிச் சென்று உதவி செய்ய வேண்டும் என்பதுதான் அது .அப்படி உதவும் போது "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்பதற்கு தகுந்தாற்போல் அவர்களின் உண்மையான நிலையை அறிந்து நாம் உதவுவது, அவர்களுக்கு பயன் தருமா என்று யோசித்து அதன் பிறகு உதவுவதே அவர்களையும் வளர விடும்.
நாமும் அவர்களுக்கு உதவி செய்ததற்கான உண்மையான பலனை பெறலாம் . நாம் ஏமாறவில்லை என்றும் உணரலாம் . மற்றவர்களும் நம் உதவி நல்ல வழியில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற மனநிறைவும் ஏற்படும். அப்படி உதவி செய்தும் அதை சரியாக பயன்படுத்தாத வர்களுக்கு உதவி செய்வதை நிறுத்திக் கொள்வது நல்லது. அப்படி யாராருக்கெல்லாம் உதவி செய்யக்கூடாது என்பதை இப்பதிவில் காண்போம்.
1. நிரந்தர சோம்பேறி:
கஷ்டப்படறவங்களுக்கும் சோம்பேறியாக இருக்கிறவங்களுக்கும் உதவுவதில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உண்மையா கஷ்டப்படுறவர்களுக்கு உதவினால் அவர்கள் ஏணி மாதிரி அதை மேன்மையாக்கி கொண்டு முன்னேறுவார்கள். சோம்பேறிகளுக்கு உதவினால் அதை ஊஞ்சல் மாறி பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
அவர்கள் நாம் பாரத்தை யாராவது சுமந்தால் போதும் என்று தான் நினைப்பார்களே தவிர தன்னம்பிக்கையையும், நம்மால் முடியும் என்கின்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் இது போன்றவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துவது நல்லது. அப்பொழுது தான் அவர்கள் அவர்களை உணர்ந்து முன்னேற முடிவு எடுப்பார்கள்.
2. நன்றி உணர்வே இல்லாதவர்கள்:
சிலருக்கு எவ்வளவு தான் உதவி செய்தாலும் நன்றி உணர்வு என்பது இருக்கவே இருக்காது.நாம் எவ்வளவு பணம், நேரம், சக்தியை நாம் கொடுத்தாலும் நன்றி உணர்வே இருக்காது. இது அவர்களின் தற்செயல் இல்லை. அவர்கள் குணமே அப்படித்தான். உலகம் எனக்கு செய்வதற்கு கடமைப்பட்டிருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்வது என்னுடைய உரிமை என்பது போல் நடந்து கொள்வார்கள்.
"ஆற்றில் வருகிறது மணலில் சேர்கிறது" என்ற எண்ணம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்களே தவிர நன்றி உணர்வு சிறிதும் இருக்காது. மேலும் நாம் எவ்வளவு செய்கிறோமோ அவ்வளவு குறைவாகத்தான் நம்மை அவர்கள் மதிப்பார்கள். இதுபோன்றவர்களுக்கு நாம் உதவி எதுவும் செய்யக் கூடாது. இவர்களுக்கு உதவி செய்வது அடியாழம் இல்லாத பள்ளத்தில் நீரூற்றுவதற்கு சமமானது.
3. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவர்கள் திமிர் பிடித்தவர்கள்:
இவர்களுக்கு தலைக்கனம் கர்வம் அதிகம். மற்றவர்கள் எப்படி அட்வைஸ் செய்தாலும் அதைக் கேட்கவே மாட்டார்கள் .எனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வத்துடன் நடந்து கொள்வார்கள். அவர்கள் எதை சொன்னாலும் நாம் ஆமாம் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் .அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் இதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.
அவர்களுக்கு எப்பொழுது தலை உடைந்து மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது என்று எண்ணுகிறார்களோ அப்பொழுதுதான் திருந்துவார்கள். அதுவரைக்கும் அவர்களிடம் விலகி நிற்பது தான் புத்திசாலித்தனம். இது போன்றவர்களுக்கு உதவி செய்யக்கூடாது.
4. தெரிந்தே தப்பு செய்பவர்கள்:
மனிதர்கள் அனைவரும் தப்பு செய்பவர்கள் தான். ஆனால் திருத்தி கொள்வோம். மீண்டும் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டோம் .இவர்கள் தெரிந்தே தப்பு செய்பவர்கள் . .இவர்கள் பொய், ஏமாற்று, பிறரை காயப்படுத்தும் தீய எண்ணம் உடையவர்கள். இவர்களுக்கு நம் பணத்தை, சக்தியை கொடுத்து உதவினால் அதை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
நான்கு பேருக்கு கெடுதல் செய்வதற்கு தூண்டுவார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்தோமானால் அவர்களின் கூட்டாளி போல் ஆகி விடுவோம். இது திருட்டுக்கு வெளிச்சம் போடுவது போன்று ஆகிவிடும் .அந்த வேலையை நாம் செய்ய கூடாது. ஆதலால் இது போன்றவர்களுக்கு உதவக் கூடாது.
5. எதையும் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள்:
இவர்களை அறிவாளிகள் இல்லை என்று கூற முடியாது. ஆனால் ஒரு தப்பை திரும்பத் திரும்ப செய்யும் பழக்கம் உடையவர்கள். தீ சுடுகிறது என்று தெரிந்தாலும் அதை அடிக்கடி சுட்டுக் கொண்டு சுட்டு விட்டது என்று கூறுபவர்கள். எதையும் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள். ஒரே தப்பை திரும்பத் திரும்ப செய்துவிட்டு ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுவதாகக் கூறிக்கொண்டு ஓடி வருபவர்கள்.
இவர்களுக்கு உதவி கை தூக்கி விட வேண்டும் என்று நினைத்தால் நாமும் சேர்ந்து அவர்களுடன் விழ வேண்டியது தான். அவர்களுடன் சேர்த்து நம்மையும் இழுப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையை அடித்து சொன்னால் தான் புரியும் ஆதலால் இது போன்றவர்களுக்கு உதவி செய்யக்கூடாது.
6. தந்திரமாக பயன்படுத்துபவர்கள்:
இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். மிகவும் ஆபத்தானவர்கள் இவர்கள்தான் .அவர்கள் எதையும் நேரடியாக செய் என்று அதிகாரத்துடன் கேட்க மாட்டார்கள். ஒருவரின் குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டு காரியம் சாதித்து விடுவார்கள். மற்றவர்களின் உணர்ச்சியுடன் விளையாடுவது தான் இவர்களின் வேலை. உதவவில்லை என்றால் உங்களை ஒரு ஹீரோ மாதிரி உணர்வைப்பார்கள்.
நீ செய்யவில்லை என்றால் எனக்கு வேறு யார் செய்வார்கள் என்று உருகி உருகி பேசி காரியம் சாதித்துக் கொள்வார்கள். நீங்களும் உருகி உருகி செய்வீர்கள் .அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் உலகத்திலேயே மிகவும் கெட்டவர்கள் நீங்கள் தான் என்று கூறி உங்களை தூக்கி எறிந்து விட்டு அடுத்த இலக்கை நோக்கி பயணிப்பார்கள். இவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
7. திருந்த மறுப்பவர்கள்:
இவர்கள் நல்லது கெட்டது அனைத்தையும் நன்கு அறிந்தவர்கள். மற்றவர்கள் சொல்லும் அட்வைஸ்க்கு தலையாட்டுவார்கள். ஆனால் முன்பு எதை செய்தார்களோ அதைத்தான் திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருப்பார்கள். உண்மை என்னவென்றால் அவர்கள் மாற வேண்டும் என்று எதை நினைக்கிறார்களோ அதில் அவர்களாகத்தான் மாற வேண்டும்.
அவர்களை மாற்றுவதில் நாம் தலையிடக்கூடாது. அவர்கள் சுதந்திரம் என்று எதை நினைக்கிறார்களோ அவர்களாகவே அந்த சுதந்திரத்தை அடைய விட வேண்டும். இல்லையென்றால் நாம் சொல்லி சொல்லி சோர்ந்து போவோம்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கருணை, அன்பு இல்லாதவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பது அர்த்தமில்லை. இதில் நாம் கஷ்டப்படுகிறவர்களையும் சிக்கிக் கொண்டு தவிப்பவர்களையும் இனம் கண்டு கொள்ள வேண்டும்.