

ஒருமுறை அர்ஜுனனும் கிருஷ்ணரும் தெருவில் உவிக் கொண்டிருந்த போது ஒரு முதியவர் தர்மம் கேட்டார். அர்ஜுனன் 1000 பொற்காசுகள் கொடுத்தான். 'ஆகா இது நம் குடும்பத்துக்கு ஐந்தாறு ஆண்டுகளுக்குப் போதுமே' என்றெண்ண, ஒரு திருடன் அப்பொற்காசுகளை பறித்து சென்று விட்டான். சிலநாட்கள் கழித்து அர்ஜுனன் அவ்வழியே வர, முதியவர் நடந்ததைச் சொன்னார். விலையுயர்ந்த ரத்னக்கல்லை அர்ஜுனன் அவரிடம் கொடுத்து பத்திரமாக எடுத்துச் செல்லக் கூறினார். முதியவரும் கவனமாக எடுத்துச் சென்று ஒரு பானையில் போட்டு வைத்தார்.
இதையறியாத அவரது மனைவி பரணிலிருந்த அந்த பானையுடன் ஆற்றுக்குத் தண்ணீர் எடுக்கச் சென்றாள். பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் விழுந்து விட்டது. வெளியிலிருந்து வந்த முதியவர் அவள் பானையை பார்த்து "கல் எங்கே?" என்று கேட்க, அவள் விழித்தாள். பிறகு அவர் ஆற்றிற்கு சென்று பல மணிநேரம் தேடியும் கல் கிடைக்கவில்லை. சில தினங்கள் கழித்து அர்ஜுனனையும் கிருஷ்ணரையும் பார்த்து முதியவர் நடந்ததை கூற அர்ஜுனன் கிருஷ்ணரிடம் "இவர் அதிர்ஷ்டம் இல்லாதவர்"என்றான். அவனிடம் கிருஷ்ணன் இந்த முறை நீ இரண்டு காசு மட்டும் கொடு என்றார்.
அர்ஜுனனும் கொடுத்தனுப்பிவிட்டு, "இதில் என்ன கிடைக்கும்? இருந்தாலும் பார்க்கலாம் வா..." எனக் கூறி, கிருஷ்ணருடன் முதியவரைப் பின்தொடர்ந்தான். செல்லும் வழியில் மீனவர் ஒருவன் இரண்டு காசுகளுக்கு உயிருள்ள இரு மீன்களை வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினான். யோசித்த முதியவர் இந்த காசில் பசியை போக்க முடியாது. இந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டால் புண்ணியமாவது மிஞ்சும் என எண்ணி வாங்கினார். ஒன்றை ஆற்றில் விட்டார். இன்னொரு மீனின் வாயில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்த அவர் அதன் வாயை பிளந்து பார்க்க அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட கல் என அறிந்ததும் சந்தோஷத்தால் "சிக்கியாச்சு" என்று கூச்சலிட்டார்.
அதேநேரம் யதார்த்தமாக இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, தன்னைத்தான் முதியவர் கூறுகிறார் என நினைத்து ஓட, அவனை கிருஷ்ணரும் அர்ஜுனனும் பிடித்து, முதியவரிடம் இருந்து பறித்துப் சென்ற தங்கக் காசுகளை பறிமுதல் செய்து முதியவருக்கு கொடுத்தனர்.
அர்ஜுனன் கிருஷ்ணரிடம் இதுபேன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம் என கேட்டான்.
கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே"இவருக்கு நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே எடுத்துச் செல்ல எண்ணினார். அடுத்து நீகொடுத்த ரத்தினக்கல்லை தானும் பயன்படுத்தாமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்தான். அதனால் அவையிரண்டும் தங்கவில்லை. இப்போதோ தன்னிடம் இருந்தது மிகக் குறைவாக இருந்தாலும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என்று கருதியதால் இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கு மேலாகவே அடைந்தார். பிறருக்கு நல்லது நினைக்க நமக்கு நல்லது தானே நடக்கும்," என்று விளக்கினார்.