பலசாலிகள் கொக்கரிப்பதில்லை!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

ம்மிடம் அதிகாரங்கள் இருந்தாலும்  மிகக் குறைவான பலத்தையே உபயோகப்படுத்துகிறவர்களே  சிறந்த நிர்வாகிகள் என்று சொல்வார்கள். உயர்ந்த மனோபாவம் உள்ளவர்கள் தங்கள் பட்டங்கள் பதவிகள்  அதிகாரங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க மாட்டார்கள்.  ஆனால் அல்பமானவர்கள்  கூச்சம் இன்றி தங்கள் அதிகாரங்களைப் பற்றி  அகங்காரத்தோடு வியந்து கொண்டே இருப்பார்கள்.

ஆஞ்சனேயர் அளவிட முடியாத பலம் உடையவர். இலங்கைக்குப் போனபோது கும்பகர்ணனைப் பார்க்கிறார். இந்திரஜித்தைப் பார்க்கிறார்.  அப்படியே கொல்லலாமா என்று தோன்றுகிறது. ஆனால் அப்படிச் செய்யவில்லை. அது இராமன் தனக்கிட்ட கட்டளை அல்ல என்பதே காரணம். பலசாலிகள் அடக்கமாக இருப்பார்கள்.

கந்த புராணத்தில் வீரபாகு முருகப் பெருமானின் தம்பி. சூரபத்மனின் தூது போக பெரிய வடிவம் எடுத்து நிற்கிறார். சூரனுடைய வீரமகேந்திரபுரம்  என்ற நகரம் அவரது காலடியில் சிறிதாக தெரிகிறது. அந்த நகரத்தை அழிக்கலாமா என்று தோன்றுகிறது. ஆனால் முருகப் பெருமானின் கட்டளை அது அல்ல என்று அடக்கமாக இருக்கிறார். இதுதான் பலசாலிகளின் பண்பு.

இது ஒரு சீனக் கதை. ஒரு மகாராஜா சேவல் சண்டையில் நாட்டம் உடையவர். அவர் சேவல் எப்போதும் ஜெயிக்க வேண்டும்  என்ற எண்ணம் உடையவர். சண்டைக்கார சேவல் ஒன்றை வாங்கினார். அதை சண்டைக்கு பயிற்றுவிப்பதற்கு என்றே ராஜகுரு இருந்தார். அவரிடம் கொடுத்த பிறகு அவரிடம் அடிக்கடி சேவல்  சண்டைக்குப் தயாராகி விட்டதா என்று  விசாரிப்பார்.

ஒரு நாள் ராஜா குருவின் குடிலுக்கு  போனபோது  படபடவென்று இறக்கைகளை உதிர்த்துக்கொண்டு  சேவல் மற்ற சேவல்களை விரட்டுவது பார்த்து "குருவே சேவல் தயாராகி விட்டது என்றே நினைக்கிறேன். போட்டிக்கான நாளை அறிவிக்கலாமா." என்றார். இல்லை கொஞ்ச நாட்கள் போகட்டும் என்றார் குரு.

அடுத்த சில நாட்கள் கழிந்து குருவிடம் போனபோது சேவல் கூரை மீது ஏறி பிற சேவல்களை வலுக் கட்டாயமாகக் கூவி சண்டைக்கு அழைத்தது. உடனே அரசனும் குருவிடம் போட்டியை அறிவிக்கட்டுமா என்று கேட்க அவசரப் படாதீர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்றார் குரு.

சில நாட்கள் கழித்து அரசன் குருவிடம் சென்றபோது ஒரு மூலையில் கொண்டையை சுருட்டிக் கொண்டு சேவல் அமைதியாகக் கிடந்தது. பல சேவல்கள் அதைச் சுற்றி இருந்தும் லட்சியம் செய்யாமல் இருந்தது. இப்படி சேவல் அமைதியாகக் கிடக்கிறதே என்று அரசன் வருந்தினான்.

இதையும் படியுங்கள்:
வலிகள்தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி!
Motivation Image

குருவோ" அரசே சேவல் சண்டைக்கு முழுத் தகுதி பெற்றுவிட்டது. போட்டிக்கான நாளை அறிவிக்கலாம்." என்றார். அரசர், "குருவே சென்ற இரு முறை நன்றாக இருந்ததே. தற்போது நோயுற்ற மாதிரி அடங்கிக் கிடக்கிறதே. எப்படி ஜெயிக்கும்.' என்றார்.

குரு விளக்கினார், அரசே நீங்கள் முதல் முறையாக வந்த போது பிற சேவல்களிடம் பயந்து இருந்தது. இரண்டாவது முறை வந்த போது கூரை மீது ஏறி பிற சேவல்களை சண்டைக்கு இழுத்தது. அப்போது அதற்கு தன் பலத்தின் மீது அவநம்பிக்கை. இப்போது அதற்குத் தன் பலத்தின் மீது முழு நம்பிக்கை வந்து விட்டது. அதனால் அடக்கமாக இருக்கிறது. இப்போது வேறு சேவல்களுடன் இது சண்டையிட வேண்டாம். ஒரு பார்வை பார்த்தாலேயே நெருப்பை மிதித்த மாதிரி மற்றவை அலறி ஓடி விடும். இதுதான் பக்குவமான நிலை என்றார். பலசாலிகள் என்றும் ஆர்ப்பரிப்பதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com