
நம் வாழ்வில் நாம் செய்யக்கூடிய செயல் எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும், வலிமையான திட்டமிடல் நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும். அதற்காக நாம் செய்ய வேண்டியது விடாமுயற்சியுடன் செயல்படுவதேயாகும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு நாட்டினுடைய அரசர் ஒருவருக்கு திடீரென்று தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்ற சந்தேகம் தோன்றுகிறது. ‘யானையின் எடையை எவ்வாறு தெரிந்துக்கொள்வது?’ என்று அமைச்சரிடம் மன்னன் கேட்டார். அதை சரியாக கணித்து சொல்பவருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், யாருக்கும் அதற்கான சரியான பதில் தெரியவில்லை.
அப்போது அங்கிருந்த அமைச்சரின் மகன், ‘நான் யானையின் எடையை சரியாக கணித்து சொல்கிறேன்' என்று கூறுகிறான். இதைக்கேட்டு அங்கிருக்கும் அனைவரும் சிரிக்கிறார்கள். இருப்பினும், அந்த சிறுவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
அந்த சிறுவன் யானையை அங்கிருக்கும் நதிக்கு அழைத்து சென்று நதிக்கரையோரம் இருந்த பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை படகில் ஏறியதும் தண்ணீரில் நனைந்த மட்டத்தை படகில் அளவு குறித்து வைக்கிறான். பிறகு யானையை இறக்கிவிட்டு விட்டு பெரிய கற்களை படகில் ஏற்றச் சொல்கிறான். அந்த படகில் குறித்துவைத்த குறியீடு படகில் மூழ்கும் வரை கற்கள் ஏற்றப்படுகிறது.
இப்போது சிறுவன் அரசரிடம் கற்களைக் காட்டி, ‘இந்த கற்களின் எடைதான் யானையின் மிகச்சரியான எடை’ என்று கூறுகிறான். அங்கிருந்த அனைவருக்கும் சிறுவனின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியப்பாக இருந்தது. அரசரும் அவரின் கேள்விக்கான விடைத் தெரிந்ததால், அவனைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் அதை சரியாக செய்ய திட்டமிடுதல் வெற்றிக்கான பாதையை உருவாக்கும். ஆனால், அந்த பாதையில் நடப்பதற்கு நமக்கு தேவை உழைப்பும், விடாமுயற்சியும்தான். இதை சரியாகப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கையில் உயரலாம். நீங்களும் இதை முயற்சித்துப் பாருங்களேன்.