motivation article
motivation articleImage credit - pixabay

கையில் இருக்கும் 24 மணி நேரத்தில் இருக்கு வெற்றி!

Published on

நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். நீங்கள் ஒருமுறை அதை இழந்தால் அதை உங்களால் திரும்பப் பெற முடியாது" - ஹார்வி மேக்கே.

படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு கோடீஸ்வரர். அவரது விதி முடிந்தது. எனவே அவரை உயிரைக் கவர எமதர்மராஜா அவரைத் தேடி வந்தார். கோடீஸ்வரருக்கோ இந்த உலகை விட்டுப் போக மனமே இல்லை. லஞ்சம் கொடுத்தே பழக்கமானவர் என்பதால் எமனிடமும் பேரம் பேசுகிறார்.  முதலில் பத்து கோடி தருகிறேன் என்னை ஆறு மாதம் விட்டு வை என்கிறார்.

எமன் மறுக்க படிப்படியாக அதிகரித்து இறுதியில் என் அத்தனை சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு 5 நிமிடம் மட்டும் தா எனக் கேட்க,

 எமன் "இந்த சொத்துக்களை சம்பாதிக்க எத்தனை வருடங்கள் எடுத்தாய்?" என வினவ,

 "30 வருடங்கள்" பதில் வர…

"30 வருடங்கள் சேர்த்தவற்றை 5 நிமிடத்துக்கு  ஈடாகத் தருகிறாய். இதிலிருந்தே நேரத்தின் மதிப்பு தெரியவில்லையா? ஒவ்வொரு நொடியும் எங்கள் பணிக்கு முக்கியம். உன்னால் இந்த 2 நிமிடங்கள் வீணாயிற்று. இதை ஈடுகட்ட நான் இன்னும் 200 நாட்கள் உழைக்க வேண்டும்" என்று கூறியபடியே கோடீஸ்வரரின் உயிரை எடுத்தார்.

நம் நேரங்கள்  விலை மதிப்பற்ற பொக்கிஷம். இதை பயனுள்ளதாக்கி வெற்றி பெற வேண்டியது நமது கடமை. சில மணித்துளிகள்தானே என்ற அலட்சியத்துடன் நிமிடங்களை வீணாக்கினால் நமது தோல்விக்கு நாமே வழிவகுக்கிறோம் என்றாகும்.

நேரத்தின் மதிப்பு பற்றி இவர்களிடம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தோற்ற மாணவரிடம் ஒரு ஆண்டின் மதிப்பு.
மருத்துவத்தை தள்ளிப் போட்டு வேதனைப்படும் நோயாளியிடம் நாட்களின் மதிப்பு.
பேருந்தை தவறவிட்ட பயணியிடம் நிமிடங்களின் மதிப்பு.
மயிரிழையில் விபத்தில் தப்பியவரிடமும், பதக்கத்தை தவறவிட்ட வீரரிடமும் நொடியின் மதிப்பு.

இதையும் படியுங்கள்:
அவசரம் வேண்டவே வேண்டாமே!
motivation article

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தெளிவான இலக்கு மற்றும் எண்ணமுடையவர்களே காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள். தெளிவில்லாதவர்கள் நேரங்களை வீணாக்குவதால் வாழ்க்கையில்  எளிதில் முன்னேற முடியாது. நேரங்களை பயனற்றதாய் ஆக்கும்போது சொகுசு, மறதி, சோம்பல், அளவுக்கு மிஞ்சிய தூக்கம் ஆகியவைகளுக்கு நமது உடலும் மனமும் பழகி விடுகிறது. இதனால் தோல்விகளே இறுதியில் மிஞ்சும்.

ஒவ்வொரு விநாடியிலும் நம் முன்னேற்றத்தின் பாதை காத்திருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் எனும் நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அதற்கு ஒவ்வொரு நிமிடத்தையும் நமக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் செலவழிப்பது நமது கடமையாகும்.

யாருக்காகவும் எதற்காகவும் நமது  நேரத்தை வீணாக்காமல் இன்று நமது கையில் இருக்கும் 24 மணி நேரங்களில் வெற்றிக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்வோம்.

logo
Kalki Online
kalkionline.com