மனதில் உறுதியான தீர்மானம் இருந்தால் முடியாத காரியமும் முடியக்கூடியதாக அமையும். மனஉறுதி இல்லாதபோது முடியக்கூடியதும் முடியக்கூடாததாக மாறிவிடும் – ஓஷோ
ஆம். மிகச்சிறந்த தத்துவ ஞானியான ஓஷோ கூறியது போல் மனதில் உறுதி இருந்தால் விண்வெளிக்கு சென்று வரலாம். உறுதி இல்லாதபோது கற்கள் நிறைந்த சாதாரண தரையில் நடப்பதற்கு கூட அச்சப்பட்டு பின் வாங்கும் நிலை ஏற்படும். நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காதவரை நமக்குத் தெரிவதில்லை. முன் கூட்டியே முடியாது என்று தீர்மானித்து விட்டாலோ முயற்சி செய்யும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை.
பெரும்பாலானவர்கள் தங்கள் திறமை என்ன? அதை செயலாற்றக்கூடிய பலம் இருக்கிறதா என்பதை கூட அறியாமல் இருக்கிறார்கள். காரணம் எதிலும் உறுதியற்ற அவர்களின் மனோநிலை. மனதில் உறுதியுடன் ஒரு செயலைத் துவங்கும்போது அந்த செயலை நிறைவேற்றுவதற்கான அனைத்து வழிகளையும் பிரபஞ்சம் ஏற்படுத்தித் தந்துவிடுகிறது என்பது ஆன்மீகவியலாளர்கள் கருத்து.
இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்றால் அதை அனுபவித்து வெற்றி பெற்றவர்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும்.
'சும்மா இருப்பதே சுகம்' என்று மனதில் உறுதியின்றி தாழ்வு மனப்பான்மையுடன் முடங்கிப்போய் திறமைகள் இருந்தும் வெற்று மனிதராக வாழ்பவர் உண்டு. அப்படி வாழ்வதை விட்டு மனதில் உறுதியுடன் வாழப் பழகவேண்டும்.
பலரும் அடுத்தவர்கள் தம்மைக் குறைத்து மதிப்பிடுவ தாகவும் அதனால் உரிய கௌரவம் தராமல் இருப்பதாகவும் வருந்துகிறார்கள். ஆனால் அடுத்தவர் குறைத்து மதிப்பிடுவதோ, உரிய கௌரவம் தராமல் இருப்பதோ வருத்தம் அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுகிறோம் என்பதே உண்மை.
நம் மனதில் உறுதி இருந்தால் அடுத்தவரின் உதாசீனங்கள் பலனற்றுப் போகும். எதிர்ப்பும் பகையும் கூட மனிதனுக்கு அவசியமானவையே. ஏனெனில் அவற்றினாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று மனதில் உறுதி எழுகிறது.
"அமைதியாக இருப்பவர்களைப் பார்த்து கோழை என்று நினைத்து விடாதீர்கள். வார்த்தையை விடாமல் அமைதியாக கடந்து போவதற்கு நிறைய மனஉறுதி தேவை" என்பார்கள். ஆம். எதிர்ப்பை காட்டுவதற்கும், எதிர்ப்பை காட்டாமல் கடந்து போவதற்கும் மன உறுதி அவசியம் தேவைப்படுகிறது. மனஉறுதியுடன் இருப்பவரே மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் தலைவராகவும் உருவெடுக்கிறார்கள். தான் சென்ற பாதை சரியே என்று உறுதியுடன் பின் வாங்காமல் நிற்பது அவர்களின் குணமாகிறது.
பல வெற்றியாளர்கள் முன் மாதிரியாக நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். அனைத்து வசதிகளுடன் சுகமாக வாழும் நாமும் மன உறுதியுடன் செயல் உழைப்பும் கொண்டு வெற்றி நோக்கிச் செல்வோம்.