மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

Success is guaranteed if you change your mind.
ஜி.டி.நாயுடு...
Published on

ஜி.டி.நாயுடு ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சொந்தமாக ஒரு பஸ் கம்பெனியை நடத்தியவர் என்பது பலருக்குத் தெரியாது. கோயமுத்தூர் நகரத்தில் சர் இராபர்ட் ஸ்டேன்ஸ் என்றொரு ஆங்கிலேயர் மோட்டார் வாகன வியாபாரத்தைச் செய்து வந்தார். அவரிடம் சென்று வேலை கேட்டார் நாயுடு. நாயுடுவின் உழைப்பையும் திறமையையும் நன்கு அறிந்திருந்த ஸ்டேன்ஸ் “நீயே சொந்தமாக ஒரு பேருந்தை வாங்கி ஓட்டு” என்று அறிவுறுத்தினார். நான்காயிரம் ரூபாய் அவர் தருவதாகவும் மீதிப் பணம் நான்காயிரத்தைக் கொண்டு வரும்படியும் கூற உடனே நாயுடுவும் நான்காயிரம் ரூபாயைத் திரட்டிக் கொண்டு சென்று கொடுத்தார். 1920 ஆம் ஆண்டில் ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி அதை பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இடையில் ஓட்டினார்.

கோவையில் அப்போது ஒன்றிரண்டு பேருந்துகளை வைத்து தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிட்டது. இதைப் பற்றி சிந்தித்த ஜி.டி.நாயுடு நாயுடு அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு மாநாடு நடத்தினார். அம்மாநாட்டிற்கு வந்த அனைத்து முதலாளிகளையும் ஒன்றிணைத்து “யுனைடெட் மோட்டார் சர்வீஸ்” என்றொரு நிறுவனத்தை உண்டாக்கினார். இப்படி உருவாக்கப்பட்ட நிறுவனம் நாயுடுவின் சிறப்பான தலைமையில் நன்றாக இயங்கி பெரும் லாபத்தைச் சம்பாதித்தது. அனைத்து முதலாளிகளுக்கும் உரிய பணம் கிடைக்க வழி வகை செய்தார் நாயுடு.

ஜி.டி.நாயுடுவின் நிர்வாக முறை மிகச்சிறப்பாக இருந்ததால் பொதுமக்கள் “யுஎம்எஸ்” பேருந்துகளில் பயணிப்பதை மிகவும் விரும்பினார்கள். தங்கள் ஊழியர்கள் பயணிகளிடம் மிகவும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். அவரே பல சமயங்களில் மாறுவேடங்களில் பேருந்தில் பயணித்து ஊழியர்கள் ஏதேனும் தவறு செய்தால் உடனே அவரை வேலையை விட்டு நீக்கியும் விடுவார். தன்னுடைய நிறுவன ஊழியர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டார். ஆனால் கருணையும் மிக்கவர். தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அத்தொழிலாளி கண்டிப்பாக வேலைக்கு வரக்கூடாது என்று ஒரு உத்தரவும் போட்டிருந்தார். அதையும் மீறி உடல் நலமின்றி எவராவது பணிக்கு வந்தால் அவருக்கு பத்து ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றொரு உத்தரவும் போட்டார்.

ஒருநாள் ஒரு இளைஞன் ஜி.டி.நாயுடு சந்தித்து தனக்கு ஏதேனும் வேலை தருமாறு கேட்டான். உனக்கு என்ன வேலை தெரியும் என்று கேட்க தாங்கள் எந்த வேலை கொடுத்தாலும் அதை சரியாகச் செய்கிறேன் என்றான். உடனே யோசித்த ஜி.டி.நாயுடு அவனுக்கு ஒரு விநோதமான வேலையைக் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
பொறுமை இருந்தால் எதிலும் வெற்றிதான்!
Success is guaranteed if you change your mind.

தனது நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்துகளில் பயணம் செய்ய அவருக்கு பாஸ் வழங்கப்பட்டது. தினமும் காலையில் அந்த இளைஞன் ஏதேனும் ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்ய வேண்டும். அடுத்த ஊரில் இறங்கி அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு பேருந்தில் பயணிக்க வேண்டும். காலை முதல் மாலை வரை அவன் இப்படியே ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கி பயணிக்க வேண்டும். ஆனால் நடத்துனருடனோ ஓட்டுனருடனோ ஏதும் பேசக்கூடாது. தினமும் இரவு எட்டு மணிக்கு தன் முதலாளி நாயுடுவைச் சந்தித்து அன்று முழுவதும் எந்தெந்த பேருந்தில் பயணித்து எந்தெந்த ஊருக்குச் சென்றான் என்ற விவரத்தை மட்டும் அவரிடம் கூற வேண்டும். ஜி.டி.நாயுடுவும் அவனிடம் ஏதும் பேச மாட்டார்.

இதனால் நிறுவனத்திற்கு ஏதேனும் நன்மை நடந்ததா ? நிச்சயமாக. இதன் பின்னர் நாள்தோறும் அந்த பஸ் நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துக் கொண்டே சென்றது. பேருந்துகளின் நடத்துனரும் ஓட்டுனரும் அந்த இளைஞனை செக்கிங் இன்ஸ்பெக்டர் என்று தாங்களாகவே நினைத்துக் கொண்டார்கள்.

இதனால் வழியில் நிற்கும் பயணிகளை விடாமல் ஏற்றத் தொடங்கினார்கள். அந்த இளைஞன் தினமும் தவறாமல் முதலாளியைச் சந்திப்பதையும் அவர்கள் அறிந்தார்கள். தங்களைப் பற்றி ஏதேனும் புகார் கூறினால் தங்கள் வேலை பறிபோய்விடும் என்பதை நினைத்து அவர்கள் பயந்ததன் விளைவே அதிக வருமானத்திற்கு வழிதேடித் தந்தது. வெற்றி யாரைத் தேடி வரும் தெரியுமா ? இதுபோல வித்தியாசமாக யோசிப்பவர்களைத்தேடி வெற்றி நிச்சயம் வரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com