"வெற்றி என்பது குறிக்கோள் அன்று, அது ஒரு பயணமே ஆகும். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்"– இங்கர்சால்.
அது எப்படி வெற்றி என்பது குறிக்கோளை நோக்கி என்றுதானே சொல்வோம். குறிக்கோள் இருந்தால்தானே அது வெற்றி ஆகும்? ஆம் உண்மைதான். குறிக்கோள் எனும் இலக்குதான் அதை நோக்கி நம்மை செலுத்தி வெற்றிக்கு அடிப்படையாகிறது. ஆனால் குறிக்கோள் என்பது ஒன்றுடன் நின்றுவிடக் கூடியதா என்பதுதான் இங்கு கேள்வி.
ஒரு மாணவன் படிப்பை விட விளையாட்டில் ஆர்வமாக இருந்தான். ஆனால் அவனுக்கு எந்த விளையாட்டில் தான் சிறந்து விளங்குவோம் என்பது புரியாமலே இருந்தான். பேஸ்கட் பால் சென்றால் அவன் உயரம் அவனுக்கு அவனுக்கு தடையாக இருந்தது. கிரிக்கெட் என்றால் அவன் ஓடுவதற்கு சிரமத்தைத் தந்தது காரணம் வீசிங் பிரச்சினை. அவன் நிலையையும் அவன் ஆர்வத்தையும் கண்ட ஆசிரியர் அவனை பரிதாபமாக எண்ணினார்.
பள்ளி முடிந்தது. ஆசிரியரும் மாணவனும் வெவ்வேறு திசைகளில் சென்றார்கள். வருடங்கள் சென்றது. ஒரு நாள் அந்த ஆசிரியர் பணி நிமித்தமாக பேருந்தில் செல்லும்படி நேர்ந்தது. தனது பக்கத்து இருக்கையில் ஒரு விளையாட்டு வீரரை சந்தித்தார். அவனை பார்த்தால் எங்கோ பார்த்தது போலவே இருந்தது. விவரம் கேட்டால் அவன் அவரிடத்தில் படித்த மாணவன்தான். அவன் இப்போது செல்வது தேசிய அளவில் நடைபெறும் டேபிள் டென்னிஸ் எனப்படும் இன்டோர் கேம் விளையாட்டுக்காக. அதில் அவன் சிறந்து விளங்குகிறான் என்பதையும் அறிந்தார்.
ஆசிரியர் ஒரு கணம் வியந்து போனார். தான் பரிதாபப்பட்டது போல் அவன் நிலை இல்லை. அவன் பல தடைகள் வந்த போதும் தன் வெற்றி பயணத்தில் பின் வாங்காமல் எந்த குறிக்கோள் தனக்கு பொருத்தமாக உள்ளது என்பதை ஆராய்ந்து அதில் வெற்றி பெற்றதை எண்ணி அவனை பாராட்டி விட்டு பேருந்தில் இருந்து மனநிறையுடன் இறங்கினார்.
இதுதான் செய்தி. அந்த இளைஞன் தனது குறிக்கோளை குறிக்கோளுக்கு வந்த தடைகளை எண்ணி தனது விளையாட்டு மீது இருந்த ஆர்வத்தை விட்டுவிட்டு தனது பயணத்தை முடித்து இருந்தால் ஒரு வீரன் தொலைந்து போய் இருப்பான். ஆனால் அவன் விடாப்பிடியாக தனது தேடலை வாழ்க்கை பயணத்தில் தேடி அலைந்து உள்ளான். தனக்கேற்றது எது என்ற தெளிவை அந்த பயணத்தில் பெற்று அதைத் தொடர்ந்ததால் இன்று அவன் வெற்றிக்கோட்டை தொட்டுவிட்டான். இந்த இளைஞனின் பயணம் இத்துடன் நின்று விடுமா? இல்லை மாநிலம் கடந்து உலக அளவில் அவனுடைய திறமை பயணிக்க போகிறது. ஆகவே வெற்றி என்பது வெறும் குறிக்கோள் மட்டுமல்ல அந்த குறிக்கோளை நோக்கி தேங்கி விடாமல் செல்லும் இடையறாத பயணம்தான் என்பதை நினைவில் கொண்டால் எந்த இலக்கும் நம் கைவசமே.