நாம் ஒரு செயலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் நமக்கு அதில் மேல் முழுவதும் ஈடுபாடு ஏற்பட வேண்டும். அதற்கு பிறகு அதை நோக்கித்தான் நமது எண்ணங்கள் முழுவதும் செயல்பட வேண்டும். நம்முடைய இலக்கு இதுதான் என்று ஒரு புள்ளி மையம் வைத்துக் கொண்டோம் என்றால் அதை நோக்கிய ஓட்டம் வீறு நடை போட்டு ஓடும் ஓட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் செயலில் வெற்றி நம்மை தேடி வரும்.
அதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கும் அமெரிக்க நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக திகழ்ந்தவர் ஜான் கென்னடி. சில பார்வையாளர்களை நாள்தோறும் சந்திப்பது அவரது பணிகளில் ஒன்று. அதுபோல ஒரு நாள் வெள்ளை மாளிகையில் மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ஒரு மாணவனிடம் உன் எதிர்கால லட்சியம் என்ன? என்று கேட்டார்.
அதற்கு அந்த மாணவச் சிறுவன் இன்று நீங்கள் அமர்ந்திருக்கும் இதே மாளிகையில் இதே நாற்காலியில் நான் உட்கார வேண்டும் என்று சிறுவன் பதில் அளித்தான். ஜான் கென்னடியின் விழிகள் வியப்பால் விரிந்தன. உதடுகளில் பூக்களின் மகிழ்ச்சி உனக்கு என் வாழ்த்துக்கள் என்ற அந்த சிறுவனிடம் கூறிவிட்டு நகர்ந்தார்.
காலச்சக்கரம் உருண்டோடியது அதே சிறுவன் அதே இடத்தில் அதே நாற்காலியில் வந்து அமர்ந்தான். அமர்ந்தது வேறு யாருமில்லை புகழ்பெற்ற பில் கிளின்டன்தான். எப்படி இது நிகழ்ந்தது? இலக்கு நோக்கிய பயணம்தான் வெற்றிக்கு காரணம். அவரது இலக்கை நோக்கிய எழுச்சிதான். அதேபோல்தான் நம்மில் ஒவ்வொருவரும் நமக்குன்னு ஒரு இலக்கை வைத்துக் கொண்டு அதை நோக்கி பயணித்தால் வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும். இலக்கு இல்லாத பயணம் பயன் இல்லாத பயணமாக ஆகிவிடும். அது படிப்பு ஆனாலும் சரிதான், வேலை ஆனாலும் சரிதான், தொழிலானாலும் சரிதான் எல்லாவற்றிற்கும் எல்லாவற்றிலும் வெற்றி பெறவும் இலக்கு நிச்சயம் வேண்டும்.