பத்து வயது சிறுவன் துணி தைக்கும்போது ஊசியில் விருட்டென்று நூல் கோர்த்து இருக்கிறான் என்றால் அது வெற்றியல்ல. அவன் 84 வயது தாத்தா நூலைக்கூராக்கி சின்ன ஊசியின் துளையைத் தேடினார். எட்டு முறை முயற்சித்து ஒன்பதாவது முறை நூலைக் கோர்த்து விட்டார். வெற்றி என்பது ஊசியில் நூல் கோர்க்கும் விவகாரம் அல்ல. ஊசியில் நூலைக் கோர்க்க முடியாத வயதிலும் தாத்தா செய்தாரே. அதுதான் வெற்றி. மிக உயரமான மலையிலிருந்து கயிறு கட்டிக் கொண்டு குதிப்பவன் மட்டும் வெற்றியாளன் அல்ல. சின்னச் சின்ன விஷயங்களில் ஜெயிப்பவனும் வெற்றியாளர்தான்.
வெற்றிக்கு பெரிய படிப்போ, சலவை நோட்டோ தேவையில்லை. பிரம்மாண்ட கனவு, அதை அடைய துடிக்கும் முயற்சி, இடைவிடாத உழைப்பு, இருந்தால் வெற்றி நிச்சயம். குஜராத் ஜூனகத் கிராமம். ஒரு பள்ளி ஆசிரியர் மகன். படிப்பு எஸ். எஸ் எல். சி. தான். அவருக்கு 17 வயதில் கார் கனவு. அவரின் முதல் சின்ன கம்பெனி தொடக்கம் வெறும் 15,000 முதலீடுதான். அவர் நண்பர் தொழிலுக்காக இடம் கொடுத்தார். முதலில் இஞ்சி, ஏலக்காய் வியாபாரம். திறமை இருந்தால் மண்ணைக் கூட பொன்னாக்கலாம். மண் அவருக்கு பொன்னாகியது.
அவர் சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்து ஒரு பொருள் இந்திய மண். ரோஜா செடி வளர இந்திய மண் உகந்ததாக இருந்ததால் அதை ஒரு அரேபியர் வேண்டியதால் மண் ஏற்றுமதியில் இறங்கினார் பணம் எகிறியது. ஆயிரம் லட்சமானது. லட்சம் கோடியாக விரிந்தது. பிறகு ஆடை வியாபாரம். அமோக உற்பத்தி. அபார வெற்றிக்குக் காரணம் அனுபவ அறிவு. கூடவே கடினமான உழைப்பு. எதையும் குறுகிய காலத்தில் செய்ய நினைக்கும் அவரின் துடிப்பு, விரைவான வெற்றிக்கு வழி வகுத்தது.
மக்களுக்கு என்ன தேவை, என்ற நாடித் துடிப்புடன் உழைப்பையும், நம்பிக்கையையும் கைகோர்த்து வெற்றிகளைக் குவித்த அவர்தான் திருபாய் ஹீராசந்த் அம்பானி. அவர் நிறுவனம் ரிலையன்ஸ். வெற்றிக்கு லட்சம் தேவையில்லை. லட்சியம் வேண்டும். வேட்கை வேண்டும். வேட்கையுடன் வெறி வேண்டும். வெறியுடன் வெற்றியை வேட்டையாட வேண்டும்.