
அது இலையுதிர் காலம், வீழ்ந்து கொண்டிருந்த இலையை நோக்கிப் புல்லிதழ் ஒன்று கூறியது. 'நீ விழும்போது எவ்வளவு இரைச்சல் என் பனிக்காலக் கனவுகளைச் சிதற அடிக்கிறாய்!'
வெகுண்ட இலை இகழ்ச்சியாகக் கூறியது. தாழ்குலத்திலே பிறந்து தரையிலே வாழ்பவனே! இசை நயம் இழந்தவனே! நீ உயர்ந்தவரிடத்தில் வாழவில்லை, கீதத்தின் இனிமையை உன்னால் உணரமுடியாது.
வீழ்ந்த இலை கிடந்துறங்கியது. வசந்தம் வந்தது, விழிப்புற்றது இலை. அது அப்பொழுது புல்லாக மாறியிருந்தது.
மீண்டும் இலையுதிர்காலம். பனிக்கால உறக்கம் அதைத் தழுவும் நேரம், இலைகள் எல்லாம் உதிர்ந்து கொண்டிருந்தன. புல் கூறிக்கொண்டது.
இலைகள் எல்லாம் எவ்வளவு கூச்சல் எழுப்புகின்றன. இது கலீல் கிப்பனின் உருவக்கதை.
இதன் கருத்து உங்கள் எதிர்காலத்தில், இறந்தகாலம் எவ்வகையிலும் குறுக்கிடக்கூடாது என்பதுதான், அவ்வாறு குறிக்கிட்டால் அது உங்கள் முன்னேற்றத்தைக் கெடுத்துவிடும்.
"தைரியம் வாய்ந்த இளைஞர்களே! முன்நோக்கிச் செல்வீர்களாக. வேலை முழுவதையும் ஆற்றும் பொறுப்பு உங்கள் தலைமீதே இருப்பதாகக் கருதுவீர்களாக! நீங்கள் நம் தாய் நாட்டின் இளைஞர்களான நீங்களே - இதைச் செய்யவேண்டும் என்று இறைவன் திட்டமிட்டிருக்கிறான் என்று கருதுங்கள். இந்தியாவை இந்தியர்களே காத்து ரட்சிக்க வேண்டும் என்று என் மனத்தில் நிச்சயாமாகப்படுகிறது. உங்களில் எண்ணற்ற சிலர் இந்தப் புதிய லட்சியத்தை ஏற்று செயல்பட்டால் இந்தியா சிறந்த நாடாகும். சிந்தனை செய்து பாருங்கள்" என்கிறார் சுவாமி விவேகானந்தார்.
எடுத்த காரியத்தில் வெற்றிக்கொடி நாட்ட அந்தக் காரியத்தில் வெறிகொள்ளச் சொல்கிறார். அப்படி வெறி கொண்டால்தான் அதில் இறங்கும் உங்களுக்குச் செயல்திறன் மிகுதியாகும்; வெற்றி கிட்டும் என்கிறார்.
உழைப்பிலே ஊக்கமும், உண்மையில் உறுதியும், தொழிலில் இனிமையும், துன்பத்தில் சகிப்பும் காணப்படுமானால், வாழ்வில் வளம் காணப்படும்.
மண்ணில் மறைந்து கிடக்கின்ற பொன், மலையிலே சிதறிக்கிடக்கின்ற மணி, கடலிலே ஆழ்ந்து கிடக்கின்ற முத்து - ஆகிய இவை மட்டுமல்ல செல்வங்கள், இலக்கியத்திலே - நல்ல நூல்களிலே புதைந்து கிடக்கும் கருத்துகளும் செல்வங்களேயாம். அச்செல்வங்களை நீங்கள்தாம் தேடிச் சேகரித்துக்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களில் திறனை ஏற்படுத்திக் கொள்ள அவை அவசியம் உதவும்.
பிறரை உயர்வாகக் கருதிக்கொண்டிருப்பவன். தானும் உயர்ந்து கொண்டேயிருக்கிறான். அந்தச் செயலை அந்தக் கருத்துக் கருவூலங்கள் அவசியம் உங்களுக்குக் கொடுக்கும் நினைப்புத்தானே செயலில் காணும்.
நாட்டைத் திருத்த வேண்டுபவர்கள் மக்களைத் திருத்த வேண்டும். மக்களைத்திருத்த எண்ணுபவர்கள் சமூகத்தைத் திருத்த வேண்டும்: சமூகத்தைத் திருத்த விரும்புகிறவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அச்சமூகத்தில் நீங்களும் ஒருவர்தாமே!
ஒவ்வொருவரும் தங்கள் செயல் திறனால் வெற்றியை அடைந்தால் செயல்திறனைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வயதுவரம்பே கிடையாது. எப்படியும் சாதனை புரியவேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; வெற்றியடைய வேண்டும் என்ற அதி தீவிர வெறி மனதில் ஏற்பட்டால் போதும். உங்கள் மனத்தீவிரம் உங்களை உயர்த்திவிடும்.
முயற்சி மட்டும் இல்லாதிருக்குமாயின் உலகில் மலர்ச்சி ஏற்பட்டிராது என்பது உண்மை. நீங்கள் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டால், உங்களுக்குச் செயல்திறன் தானே ஏற்பட்டுவிடும்.