பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்!

Take care parents!
Parents...Image credit - pixabay
Published on

ன்றைய காலகட்டங்களில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது வருத்தத்திற்குரிய விஷயம். 

ஒரு மனிதன் தனது 21வது வயதுவரை எந்த ஒரு பணமும் ஈட்டுவதில்லை. அவன் பிறந்தது முதல் அவனது 21 ஆவது வயது வரை அவனைப் பேணிக்காத்தது பெற்றோர்கள்தான். அவன் பெற்றோர்களுக்கு கடன்பட்டுள்ளான். கடன் என்பதே மை விகுதி பெற்று கடமை ஆனது. அந்தப் பெற்றோருக்கு இறுதி வரை அவன் கடமையை சரிவர ஆற்றவேண்டும். 

பெற்றோர்களுக்கான கடமையைச் செய்பவன் வாழ்வில் பெரும் நிலைகளை அடைகிறான். அதனைக் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம். 

அரேபியாவில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் வறுமையிலிருந்த போதும், தனது பெற்றோர்களை இறுதிவரை மிகவும் அருமையாக கவனித்துக் கொண்டான். பெற்றோர்கள் இறக்கும் தருவாயில் அவனிடம் 'அப்பா! நாங்கள் உனக்கு எந்த சொத்தும் விட்டுச் செல்லவில்லை. ஆனால், எங்களது ஆசிகளை உனக்கு விட்டுச் செல்கிறோம். நீ மேன்மேலும் உயர்வாய்!' என்று கூறி மறைந்தனர். 

அந்த இளைஞன் பின்பு தனது வாழ்க்கையில் தொழில்களைத் தொடங்கியபோது தொட்டதெல்லாம் துலங்கியது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரனாக உருவானான். 

'என்னடா இது? இப்படி தொட்டதெல்லாம் துலங்குகின்றன. நாளை திடீரென ஒரு பெரிய நஷ்டம் ஏற்பட்டு, நான் அதள பாதாளத்தில் விழுந்து விடுவேனோ?' என்ற ஒரு அச்சம் திடீரென்று அவனுக்கு உண்டானது. 

இதுவரை சம்பாதித்த எல்லா பணத்தையும் திரட்டி ஒரு தொழிலைச் செய்ய முடிவு எடுத்தான். 'நஷ்டம் என்னை தாக்குவதற்கு பதிலாக நானே நஷ்டத்தை எதிர் நோக்குகிறேன்' என்று நஷ்டத்தை நோக்கி பயணம் செய்தான். 

ஈராக்கிலிருந்து வந்த பேரிச்சம் பழங்களை ஈரானில் இரு மடங்கு விலையில் வாங்கி மறுபடியும் ஈராக்கில் அவற்றை நஷ்டத்தில் விற்க ஈராக்கை நோக்கிப் பயணமானான்.

அவன் பாலைவனத்தில் தனது பேரிச்சம் பழ மூட்டைகளை ஒட்டகங்களில் ஏற்றிப் பயணப்பட்டான். பயணத்தில், நூற்றுக்கணக்கான போர்வீரர்கள் பாலைவனத்தில் சல்லடையைப் போட்டு எதனையோ தேடிக்கொண்டிருந்தை அவன் கண்டான். போர்வீரர்களின் அரசர் தனது திருமண மோதிரம் பாலைவனத்தில் விழுந்துவிட்டது என்று வருத்தத்துடன் கூறினார். அப்போது தனது நஷ்டத்தை நோக்கிய பயணத்தை அரசருடன் அவன் பகிர்ந்து கொண்டான். 

'யாராவது ஈராக்கில் விளையும் பேரிச்சம் பழத்தை ஈரானில் வாங்கி ஈராக்கில் கொண்டு போய் விற்பார்களா?  சோகத்திலும் எனக்கு சிரிப்பு வருகிறது'  என்றார்.

'அரசரே!  பெற்றோர்கள் ஆசியால், எனது வாழ்க்கையில் நான் தொட்டதெல்லாம் துலங்குகிறது. இதோ பாருங்கள்!' என்று கூறிக் கொண்டே, தனது கையில் பாலைவன மணல்களை அள்ளிக் காண்பித்தான். என்ன அதிசயம்! அவனது கையில் அரசரின் திருமண மோதிரம் மணற்துகள்களுக்கு இடையில் இருந்தது. 

நூற்றுக்கணக்கான போர்வீரர்களின் சல்லடைகளில் அகப்படாத திருமண மோதிரம் அவன் கை மணலில் அமர்ந்திருந்நது. அதனைக் கண்ட அரசர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். 'தம்பி. உன்னுடைய எல்லா பேரிச்சம் பழங்களையும் நான் மும்மடங்கு விலையில் வாங்கிக் கொள்கிறேன். எனது திருமண மோதிரத்தை நீ காப்பாற்றி கொடுத்துள்ளாய். நன்றி' என்றார். 

இதையும் படியுங்கள்:
எதிர்மறை சிந்தனையை எடுத்தெறியுங்கள்!
Take care parents!

அந்த இளைஞனும் பெற்றோர்களின் ஆசிகளை எண்ணி நன்றி கூறினான்.

இந்தக் கதையின் மூலம் பெற்றோர்களின் ஆசிகளைப் பெற்ற ஒருவன் வேண்டுமென்றே நஷ்டத்தை நோக்கி பயணம் செய்தால் கூட, அவன் இலாபத்தை அடைகிறான் என்பது நமக்குத் தெரிய வருகிறது. 

பெற்றோர்கள் உயிருடன் இருப்பது என்பது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம் - வேதாத்திரி மகரிஷி 

பெற்றோர்கள் இருக்கும் வரையில் அந்த வரப்பிரசாதத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு, பெற்றோர்களுக்கு நமது கடமைகளை சரிவர ஆற்றுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com