

"மற்றவர்கள் செய்ய முடியாததை செய்வது திறமை, திறமையாலும் செய்ய முடியாததை செய்வது மேதைமை" என்கிறார் வில்ஹென்றி.
'வாழ்க்கை' என்னும் சொல் வாழ்க்கையை வடிவமைத்துக் காட்டுகின்றது. எப்படி?
'வா' என்று பூமித்தாய், தாயின் கருவறையில் இருந்து நம்மை அழைத்து வரவேற்றாள். எதற்காக? 'வாழ்' என்று சொல்வதற்காக. வாழ்வதற்கு நம்மிடத்தில் என்ன இருக்கிறது? கை இருக்கிறது. கைகளைக்கொண்டு உழைத்து வாழும்போது 'வாக்கை' கடைபிடித்து வாழவேண்டும். அப்போது நம் வாழ்க்கை நிச்சயம் 'வாகை'யாய்; வெற்றியாய் அமையும்.
வாழ்க்கையில் குறுகிய மனம் வேண்டாம்.
விரிந்த மனம் வேண்டும்.
அதைப் பெறுவது எப்படி? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறைபிறர்
அறியாமை
பொறையெனப்படுவது
போற்றாரைப் பொறுத்தல்
என்பதற்கு ஏற்ப நிறை, குறை, பொறை, உரைகளை பிறர் கூறும்போது, எப்படி அவற்றை எதிர்கொண்டு கையாள வேண்டும்?.
அப்படியே சகிப்புத்தன்மையுடன் சமன்செய்து, சீர் தூக்கி ஆராய்ந்து அறிந்து, எல்லாவற்றையும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகியது. அப்படி திருத்திக்கொண்டு வாழ்ந்ததால் வாழ்க்கை சிறந்ததாகியது என்கிறார் ஒருவர். அப்படி வாழ்ந்தவரின் ஒரு குட்டிக் கதையை இங்கே காண்போம்!
2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கவிஞர் ஹத்திம்தாய். தனது கவிதைகளுக்காகவும், வள்ளல் தன்மைக்காகவும் புகழ்பெற்றவர்.
ஹத்திம்தாயைப் பார்த்த ஒருவர் "உங்களால் மட்டும் எப்படி நல்லவர், கொடை வள்ளல் என்று எல்லோரிடமும் பெயர் எடுக்க முடிந்தது,” என்று கேட்டார். அதற்கு ஹத்திம்தாய் “தொடக்க காலத்தில் என்னைச் சுற்றி இருந்தவர்கள் என் பெருமைகளைக் கூறி புகழ்ந்துகொண்டிருந்தனர்.
என் பிழைகளையும் தவறுகளையும் எனக்கு கேட்காதபடி மறைத்தார்கள். இதைப் புரிந்துகொண்ட நான் செவிடனாக நடித்தேன். அதை உண்மை என்று நம்பி அவர்கள் என் கண்ணெதிரிலேயே என் குறைகளையும், தீய பண்புகளையும் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் எதையெல்லாம் குறை சொன்னார்களோ அவற்றை தவிர்க்க ஆரம்பித்தேன். அதனால்தான் எனக்கு இத்தகைய நல்ல பெயர் கிடைத்தது” என்றார்.