குறைவாகப் பேசும்பொழுது மற்றவர்கள் நம் பேச்சை கேட்பார்கள். குறைவாக பேசுவது நம் சக்தியை வீணாக்காமல் இருக்க உதவும். அத்துடன் மற்றவர்கள் தங்களுடைய ரகசியங்களை இவரால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் மனம் திறந்து நம்மிடம் பேசுவார்கள்.
நாம் அதிகம் பேசினால் நமது ஆற்றல் வீணாகிவிடும். ஆற்றலை வீணாக்காமல் குறைவாக பேசினால் நம் வேலையில் கவனம் சென்று நாம் எண்ணியதை முடிக்க முடியும். நிறைய சாதிக்க வேண்டுமா குறைவாகப் பேசுங்கள்.
அதிகம் சிந்திக்க பழகுவதுடன், செவிமடுத்து மற்றவர்கள் பேசுவதை கேட்பதும், நாம் குறைவாக பேசுவதும் புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது.
குறைவாகப் பேசுவது மகத்தான பலன்களைத் தரும். பேச்சை ஒழுங்குபடுத்துபவர்களால் (குறைப்பதால்) மனதை எளிதில் கட்டுப்படுத்த முடியும். நாம் பேசும் பேச்சு அர்த்தமும் மதிப்பும் நிறைந்ததாக இருக்கவேண்டும். அர்த்தமற்ற பேச்சுகள், அர்த்தமற்ற சிந்தனை போன்றவை நம் ஆற்றலை குறைத்துவிடும். குறைவாக பேசுவதன் மூலமும், அதிகமாக சிந்திப்பதன் மூலமும் ஆற்றலை சேமிக்க முடியும். பயனற்ற உரையாடலால் தேவையற்றது. குறைவாகவும், அர்த்தமுள்ளதாகவும் பேசுபவர்களின் பேச்சு மற்றவர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை உண்டாக்கும்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச்சொல் என்ற திருவள்ளுவரின் கூற்றை மறக்கலாகாது. ஏன் அதிகம் பேசக்கூடாது தெரியுமா? பெரும்பாலும் நாம் அதிகமாக பேசும்பொழுது நம்மைப் பற்றியேதான் பேசுவோம். நாம் பேசுகிற பொழுது நம் மனதை கவனிக்கவேண்டும். பேசிப் பேசி மனதை அலையவிட்டால் ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் முழுமை பெறாமல் போய்விடும்.
பேச்சைக் குறைக்க பல வழிகள் உள்ளன. எங்கு பேச வேண்டுமோ அங்கு பேச வேண்டும். எங்கு பேசக்கூடாதோ அங்கு பேசக்கூடாது. மனதை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் பொழுது நாம் எப்போது பேச வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கிறோம். இதன் மூலம் நம் பேச்சை குறைக்க முடியும். அடுத்து நாம் பேசுவதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பேசுவதற்கு முன்பே சிந்திக்க பழகினால் தேவையற்ற பேச்சை தவிர்க்கலாம். அதேபோல் நம் பேச்சுக்கு மரியாதை இல்லாத இடத்தில் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
பேச்சை கட்டுப்படுத்துவதால் எதையும் உற்று நோக்கி ஆராய்ந்து பார்க்கும் குணம் வந்துவிடும். இதனால் யாரேனும் பேசுகின்ற பொழுது காது கொடுத்து கவனிக்கும் பழக்கமும் வரும். தேவையற்ற பேச்சுகளை குறைத்து குறைவாக பேசுவது மோதல்கள் மற்றும் தேவையற்ற வாதங்களை தவிர்க்கும். குறைவான வார்த்தைகள் மற்றவர்களிடம் அதிக தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதால் நாம் பேசும் பேச்சுக்கு அதிக மதிப்பு இருக்கும். குறைவாக பேசுவதால் மற்றவர்களுடனான உறவு மேம்படும். முக்கியமாக குறைவாக பேசும் பொழுது நம்மால் அதிகமாக செய்ய முடியும். குறைவான பேச்சு நிறைய சிந்திக்கவும், உற்று நோக்கவும், வளர்ந்து முன்னேறவும் உதவும்.
பல சிக்கல்களைத் தவிர்த்து வாழ்க்கைக்கு அழகு சேர்க்கும் குறைவான பேச்சு என்பதில் சந்தேகம் இல்லைதானே!