"வெற்றிக் கொடிகட்டு பகைவரை எட்டும் வரை முட்டு" என ஜெபித்துக் கொண்டே தொடங்கும் செயலுக்கு வெற்றி நிச்சயம். எனவே, யார், எந்த, புது முயற்சியை மேற்கொண்டாலும், குறைகளைக்கூறி சோர்வடையச் செய்யாமல், முயற்சியினால் கிடைக்கும் பலன்களை வலியுறுத்தி, வெற்றி உன் பக்கமே என வாய் நிறைய சொல்லுங்கள். முன்னேறும் வேகம் முளைவிட ஆரம்பித்துவிடும் அவர்களுக்கு. சொல்லுக்கு உணர்ச்சிகளை தூண்டும் ஆற்றல் உண்டு. நிறைய போட்டிக்களங்களில், பார்வையாளர்கள், "சீக்கிரம்..சீக்கிரம்… கொஞ்ச தூரம்தான். நேரம் முடிவடையப் போகிறது. வேகம்…வேகம்…" என உற்சாக குரல் கொடுப்பதை காண்கிறோம்.
வீட்டில் உள்ளவர்கள் சாமான்களை இஷ்டப்படி போட்டிருந்தால், டென்ஷனாகி திட்டுவதை மறந்து விடுங்கள். பொருட்கள் இப்படி இறைந்து கிடந்தால், வரும் விருந்தினர் மனதில் நம் மதிப்பு குறைந்து விடுமல்லவா. சிலர் மிகைப்படுத்தி, பலரிடம் பரப்புவது அவசியம்தானா? என மென்மையாக சொல்லுங்கள். அப்புறமென்ன? சுத்தமான அலங்காரமான வீடு உங்களுடையதே.
பிறரிடம் பேசும்போது உற்சாக வார்த்தைகளை நம்பிக்கை வருமாறு பேசணும். நம்பிக்கையான சொற்களுக்கு ஆற்றல் அதிகம். புடவைக்கு குந்தன் வொர்க் சொல்லித் தருகிறார்கள். கற்றுக்கொள்ள ஆசையாயிருக்கிறது என்று உங்களிடம் சொல்கிறார்களா?. "இரு தினங்களில் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று நினைக்கச் சொல்லுங்கள். அப்படியே, அது விஷயமாக அவர்கள் மனதோடு பேசச்சொல்லுங்கள். அதைவிட்டு, இது சரிப்பட்டு வராது என்று தயக்கத்தோடு ஆரம்பித்தால், தடங்கல் வரும் போதெல்லாம் முடியாது என்றே தோன்றும் என்றும் வலியுறுத்துங்கள். உன் கரங்களால் அழகு பெற்ற புடவைகள் நகரமெங்கும், நாடெங்கும் அதையும் தாண்டி உலகெங்கும் வலம் வந்து மற்றவர்களை ஈர்க்கும் என ஊக்கப்படுத்துங்கள். எந்த சொற்களால் செயல்களை வர்ணிக்கிறோமோ, அந்த மனநிலை உருவாகும் அவர்களுக்கு.
சொற்களில் தெளிவு அவசியம். குழப்பமான சொற்களை தவிர்க்கவும். சிறிய பிரச்னையை தீர்க்கும் சிந்தனையானாலும், நல்ல சொற்கள் அவசியம். பிறரிடம் நம் மதிப்பு நிறைவாக இருக்க ஏகப்பட்ட நுணுக்கங்கள் இருக்கலாம் என்றாலும், வார்த்தைகள் சுட்டிக் காட்டும் வழியில்தான் நம் கௌரவம் உயரும். இனிமையான சொற்களால் நட்பு வட்டம் விரிவடையும். இதமான சொற்கள் உறவுகளிடம் நம் நெருக்கத்தை இறுக்கும். தரமான சொற்கள் பணிபுரியும் இடங்களில் பண்பை வளர்க்கும். அன்பான சொற்கள் அகிலத்தையே வெல்லும்.
உவப்பான சொற்கள் உற்சாகத்தின் ஊற்று. சொற்களில் கண்ணியம் கடைபிடித்தால் களிப்புதானே. ஒரு நல்ல சொல்தான் மற்றொரு நல்ல சொல்லுக்கு தொடக்கம் மட்டுமல்ல முன்னேற்றத்தின் அஸ்திவாரம். இனிமையே பேசுவோம். இன்பம் காண்போம்.