அந்த நிறுவனத்தின் வேலை வாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி (ஹெச் ஆர் ) அதிலிருந்து 80 பேர்களை மட்டும் தேர்வு செய்தார். முதல் கட்டத்தேர்வில் அதிலிருந்து 30 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மீதமிருப்பது 50 பேர். இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு செயல்முறை தேர்வாக இருந்தது. அதிலிருந்து தேர்வானவர்கள் 20 பேர் மட்டுமே. இந்த 20 பேரில் அந்த நிறுவனத்திற்கு தேவையானவர்கள் 5 பேர் மட்டுமே என்ற நிலையில் இப்போது தேர்வு நிலை வேறு திசைக்கு மாறியது.
ஹெச் ஆர் அவர்களை ஒரு அரங்கிற்கு வரவழைத்தார். அங்கு ஏற்கனவே அவர் அழைப்பின் பேரில் வந்தவர்கள் கூடி இருந்தனர். அங்கு இந்த 20 பேரையும் ஒரு தலைப்பின் கீழ் உரையாற்ற அழைத்தார். இந்த திடீர்த் தேர்வில் எஞ்சியவர்கள் வெறும் இரண்டு பேர்தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த 20 பேரும் நகரத்தின் முன்னணி கல்லூரியில் படித்து முதல் மதிப்பெண் பெற்றவர்கள். ஆனால் அவர்களால் பொது இடத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து வைக்க முடியவில்லை.
தற்போது படித்த இளைஞர்களின் நிலை இதுதான். பொது இடங்களில் பிறரிடம் பேசவே தயங்குவார்கள். இந்த குறைபாட்டினால் திறமை இருந்தும் சரியான பணி கிடைக்காமல் வாழ்க்கையில் பின் தங்குபவர்கள் அநேகம் பேர். இங்கு படித்த ஒரு செய்தியை காண்போம்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் "தி சிட்டி கட்ஸ்" என்ற சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார் ஜோனதன் எனும் இளைஞர். இந்த சலூனில் முடித்திருத்தம் செய்ய சிறுவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதன் பின்னணி சுவாரஸ்யமானது.
மற்ற சலூன்களில் கட்டணம் செலுத்தி முடித்திருத்தம் செய்ய வேண்டும் என்றால் இங்கு சிறுவர்கள் இலவசமாகவே முடித்திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு இவர் மூன்று டாலர்களையும் பரிசாகவும் கொடுக்கிறார். காரணம் தெரியுமா?
"இலவசமாக முடித்திருத்தம் செய்யும் எனக்காக ஒன்றை மட்டும் செய்யுங்கள் அதாவது முடி திருத்தம் செய்யும்போது நான் கொடுக்கும் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் சத்தமாக வாசித்து காண்பியுங்கள். உங்களுக்கு முடி திருத்தமும் இலவசம். அதோடு மூன்று டாலர்கள் அன்பளிப்பும் உண்டு." என்று அறிவித்திருக்கும் இவர் மேலும் "இக்காலத்தில் இளைஞர்கள் மேடை நிகழ்ச்சிகள் கல்லூரி கருத்தரங்க நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் கூட்டத்திற்கு முன்பாக பேச கூச்சப்படுகிறார்கள். பயப்படுகிறார்கள். அவர்களுக்கு பொது இடங்களில் பேச கற்றுக்கொடுப்பதற்காகவே இத்தகைய சலுகையை வழங்கி இருக்கிறேன்" என்றும் தனது அறிவிப்பிற்கான காரணத்தைக் கூறி பாராட்டுக்களை பெற்றுள்ளார் ஜோனதன்.
அமெரிக்காவில் மட்டுமல்ல… நம் நாட்டிலும் இந்த நிலைதான். பிள்ளைகள் வெற்றியாளர்களாக உருவாக்க வேண்டும் எனில் அவர்களின் தொடர்பு திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம். பேசிப்பழகும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம்.