உத்வேகக் கவிதை: இறவா வாழ்வை எய்தி இறப்பையும் வெல்லலாம்!

உள்உடல் உறுப்புகளை தானமாய் வழங்கி உலகில் இறவாப் புகழை எய்திடுவோம். கொடுப்பதில் மட்டுமே நிறைவை அடைந்து உடலையும் இறுதியில் மருத்துவ ஆய்வுக்கு வழங்கிடுவோம்
Organ Transplant Surgery
Organ Transplant SurgeryImg credit: AI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

இறவா வாழ்வை

இனிதாய் அடையவே

அனைவருக்கும் இங்கு

ஆசைகள் அதிகம்!

அதனையும் சாதிக்க

உபாயங்கள் உலகில்

அநேகம் உண்டு!

பிறந்தவை அனைத்தும்

இறப்பைத் தழுவும்

என்பதே பொதுவிதி!

உயிரினம் அனைத்தும்

உலகில் இதனை

ஏற்றே வாழ்ந்து

இறுதியில் வீழும்!

ஆறாம் அறிவையும்

அகத்தே கொண்ட

மனிதருக்கும் இது

முற்றிலும் பொருந்தும்!

இதனை மாற்றி

இறப்பை நீட்டிக்க…

மருத்துவ உலகோ

மகத்தான தன்சாதனையால்

புதுமைகளை நித்தம்

பூவுலகில் அரங்கேற்றி…

பலருக்கும் இங்கே

பலமான உறுப்புகளை…

மூளைச்சாவு அடைவோரிடமிருந்து

முழுதாய்அவர்கள் ஆதரவுடனே…

வின்னமின்றி விரைவாயெடுத்து

வேண்டுவோர் தமக்கு

முறையாய்ப் பொருத்தி

ஆயுளை நீட்டிக்கும்

அதிசயந் தனையே

நிகழ்த்தியே இங்கு

நீட்டிக்கின்றார் வாழ்வை!

மகேசனொத்த மருத்துவர்களுக்கு

மனங்கனிந்த பாராட்டுக்களைக்

காணிக்கை ஆக்குவோம்!

கனிவுடன் வாழ்த்துவோம்!

கடந்த ஓராண்டில்

தமிழ்நாட்டில் மட்டும்…

இருநூற்றி அறுபத்தெட்டுபேர்

உள்உடல் உறுப்புகளை

தானமாய் வழங்கித்

தகைசால் உலகில்

இறவாப் புகழை

எய்திட்டார் நன்றாய்!

பலபேர் வாழ்வுக்குப்

பக்குவவழி வகுத்திட்டார்!

அண்டை மாநிலம்

கேரள நாட்டில்

பத்துமாதங்களை மட்டுமே

பாரினில் சுவைத்த

ஆலிம்ஷெரின்ஆப்ரஹாம் என்ற

தெய்வக் குழந்தையின்

சிறப்புறு செயலால்

இருளில் வாழ்ந்த

இருநான்கு ஒருவர்

புத்தொளி வாழ்க்கையில்

புகுந்திட்டார் மகிழ்வாய்!

தூங்கா நகரில்

துயரில் மறைந்த

பதினேழுவயது சிறுவன்தானும்

பலரின் வாழ்வுக்குப்

பகலவனாய் மாறியதை

பதைக்கும் மனமும்

பரிவுடன் போற்றும்!

ஆந்திரமாநில அஜய்குமார்தானும்

நால்வர் வாழ்வில்

நல்விளக் கேற்றியதை

உள்ளம் ஏற்று

உவகையில் பொங்கும்!

நாமும் இன்றே

நல்உறுப்புகள் தானத்தை

முறையுடன் செய்தால்

முகிழ்ந்திடு்ம் நம்வாழ்வு!

இறப்புக்குப் பின்னரும்

இன்னொருவர் மூலம்

இறவா வாழ்வை

எய்தியே அவரையும்

இனித்திடச் செய்யலாம்

இறப்பையும் வெல்லலாம்!

நேர்மை ஒன்றையே

நெஞ்சினில் சுமந்து…

ஏழை எளியோரையே

எப்பொழுதும் நினைந்து…

இதையும் படியுங்கள்:
கவிதை: அளவற்ற ஆசைகொண்டால் அத்தனையும் அழிவேதரும்!
Organ Transplant Surgery

தனக்கென வந்ததையும்

தானமாய்க் கொடுத்து…

கொடுப்பதில் மட்டுமே

நிறைவை அடைந்து…

உடலையும் இறுதியில்

மருத்துவ ஆய்வுக்கு

வழங்கியே வாழும்…

நல்லக்கண்ணு ஐயாவைப்போல்

அவரது வழியில்

அகிலம் போனால்…

அமைதியும் நிம்மதியும்

அடித்தோடி வந்து

வீட்டில் தங்கும்!

விளங்கிடும் உலகம்!

logo
Kalki Online
kalkionline.com