

‘இன்பமின்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே’யென்ற
கவிஞரின் வார்த்தைகளிங்கு
காவியமாய் விளங்குதின்று!
பாக்கெட்டில் போனைவைத்து
பன்னாட்டில் வசிப்போரிடமும்
விரும்பிய போதிலெல்லாம்
விருப்பமான விஷயங்கள்பேசும்
வியப்பான செயலைநாமும்
வீட்டிலும் காட்டினிலும்
வியந்து முகம்பார்த்தவாறு
பேசிநித்தம் மகிழ்வதையே
பெரும்பேறாய் நினைத்திருந்தோம்!
ஓட்டலுக்குச் செல்லாமல்
ஒரேயொரு போன்காலில்…
வீட்டிற்கு வரவழைத்து
விருந்தினருடன் அமர்ந்து
ஊர்க்கதை பேசியபடி
உணவருந்தும் வசதிபெற்றோம்!
பேருந்து பெரும்விமானம்
பெருங்கடல் கப்பல்என்று
விரைந்திடும் ரயிலுக்குங்கூட
வீட்டினில் அமர்ந்தவாறே
சீட்டினை ரிசர்வ்செய்யும்
சிறப்பினை அனுபவித்தோம்!
காசையும் பணத்தையுமே
கட்டித்தூக்கிச் சுமப்பதையும்
விட்டொழித்து நாமுமே
விஞ்ஞான டிஜிடல்மூலம்
பரிவர்த்தனை செய்துமே
பாங்குடனே மகிழ்ந்திருந்தோம்!
வெளியில் செல்வதையும்…
விரும்பியோருடன் கைகுலுக்குவதையும்…
கெட்ட கொரோனாவந்து
கெடுத்துப்போட்டுப் போனது!
வெள்ளத்திட்டில் விதியைநொந்து
ஒடுங்கிநிற்கும் மனிதராய்
ஒதுங்கிப்போனோம் வீட்டினுள்!
அதுவே பெரும்பழக்கமாய்
ஆகியின்று நிலைத்தது!
சின்னவயதில் சிற்றூருக்குள்
ஒவ்வொரு தெருவிலும்
ஓடியாடி விளையாண்டதைப்போல்
நாடுகள்தோறும் நாம்சுற்றிவரும்
வாய்ப்புகளும்வந்தன! வானூர்திகளும்பெருகின!
உலகஉருண்டை உருமாறிச்சிறிதாய்
க்ளோபல்வில்லேஜ் (Global Village) ஆகிப்போனது!
சிற்றுண்டி ஒருநாட்டில்…
சிலமணி நேரத்தில்
லஞ்ச் மற்றொன்றில்…
என்றிருந்த வாழ்க்கைக்கு
ஏகமாய்வைத்தார் ஆப்பு!
அமெரிக்காவும் சீனாவும்
அடித்துக் கொள்வதென்றால்
நேரடியாய்மோதி நிறைவையடையட்டும்!
பள்ளியில் படித்தபெண்கள்
பாவங்கள் என்னசெய்தார்?
அரும்பும் மொட்டுக்களை
அனலில் இடுவதற்கு
எப்படித்தான் மனது
இவர்களுக்கும் வந்ததுவோ?
கோடையில் ஊர்சுற்றக்
குடும்பத்துடன் கிளம்பியோரை
உயிர்ப்பயத்தில் திகிலுடனே
உறையவைத்துக் குண்டுபோடும்
விஞ்ஞான முன்னேற்றத்தை
விரும்பிடுமா நம்மனது?
பிறந்த உயிரனைத்தும்
இயற்கையாய் மரணமுற…
அனுமதிக்கும் விதியெதுவோ
அதுதானே உலகநீதி!
அதிநவீன விஞ்ஞானம்
அதற்கல்லவா உதவிடணும்!
உணவையும் உறக்கத்தையும்
உலகஇன்பங்கள் பலவற்றையும்
துறந்தேவாழ்ந்த துறவியர்போல
வீட்டையும் மறந்துவிஞ்ஞானிகள்
உழைத்துக் கண்டுபிடித்ததெல்லாம்
உயிர்களை எடுக்கத்தானா?
அமைதியைச் சூறையாடும்
அணுகுண்டுகள் தேவைதானா?
போரின் இலக்கணமே
போனதோ உலகைவிட்டே!
அப்பாவி மக்களை
அனாயாசமாய்க் கொன்றுபோடும்
கோழைகள் மட்டுமேயிங்கு
கோலோச்சி வருகின்றனரோ?
‘அதிகாரம் ஊழல்செய்யும்! (Power Corrupts)
ஏகபோகஅதிகாரம் ஏகமாய்ஊழல்செய்யும்!’
என்பதுபோலயிங்கு எல்லாமேஅதிரடியே!
அரபுநாடுகளிலிருந்து அமெரிக்கர்களனைவருமே
உடனடியாய் வெளியேற
உத்தரவாம் ட்ரம்பிடமிருந்து!
ஆழமான அட்டாக்கங்கே
ஆரம்பிக்கப் போகிறதாம்!
அவர்களுக்கு மட்டுந்தான்
ரத்தமும் சதையுமுண்டா?
ஏனைய மக்களெல்லாம்
ஏதுமின்றித் திரிகின்றனரோ?
எத்தனைதான் உலகம்
ஏறுமுகங் கண்டாலும்
அளவற்ற ஆசைகொண்டால்
அத்தனையும் அழிவேதரும்!
உலகநாடுகள் சபை (UNO)
உரங்கொண்டே உயரவேண்டும்!
வீட்டோ (Veto) பவருக்கு
விடைகொடுத்திட வேண்டும்!
நாடுபிடிக்கத் துடிப்போரை…
நயவஞ்சகம் செய்வோரை…
கட்டுக்குள் கொண்டுவர
கட்டாயம் அமைப்பொன்றுவேண்டும்!
இறுதியான இன்பத்தில்
இருப்பது துன்பந்தானோ?!
நீலவண்ண வான்வெளியில்
நீந்திவரும் மேகங்களும்…
நிம்மதியாய்ப் பறவைகளும்…
ஓடியாடிப் பறக்கையிலே
உள்ளமோ சிறகடிக்கும்!
உணர்வுகளோ பொங்கியெழும்!
மிசைல்களும் ட்ரோன்களும்
மின்னல்வேகம் மிகக்கொண்டே
பாய்வதைப் பார்க்கையிலே
பயந்தானே உடல்பரவும்!
இதற்கா விஞ்ஞானம்
இவ்வுலகில் வளர்ந்திடிச்சு?!