TVK விஜய்யின் பெருவெற்றிக்கு காரணமான அந்த 3 முக்கிய டெக்னிக்குகள்!

TVK Vijay
TVK VijayImg Credit: Chris Nallaratnam and TVK Vijay
Updated on

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது. திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜய், 2026 தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக விரைவில் அரியணை ஏறவுள்ளார்.

இது ஏதோ ஒரு நாளில் நடந்த அதிசயம் அல்ல; கடந்த சில ஆண்டுகளாக அவர் மிக நிதானமாக நகர்த்திய அரசியல் காய்களின் அறுவடை. மற்ற தலைவர்களிடமிருந்து மாறுபட்டு, அவர் கையாண்ட தனித்துவமான உத்திகளே அவரை இந்த வரலாற்று சாதனை வெற்றிக்கு அழைத்துச் சென்றன.

1. 'அண்டர்டாக்' (Underdog) வியூகம்:

விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியபோது, பல்லாண்டுகளாக தமிழகத்தில் கோலோச்சி வரும் பெரிய கட்சிகள் அவரை ஒரு 'நடிகராக' மட்டுமே பார்த்தன. ஆனால், அந்த விமர்சனங்களையே தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார் விஜய். தன்னை ஒரு பலம் வாய்ந்த தலைவராகக் காட்டிக்கொள்வதை விட, 'சாமானிய மக்களுக்காகத் துணிச்சலுடன் தனியாகப் போராடும் ஒரு எளிய மனிதன்' என்ற பிம்பத்தை அவர் மக்கள் மனதில் விதைத்தார்.

பெரிய அதிகார சக்திகள் அவரைத் தாக்கியபோது, அவர் காட்டிய மௌனமும் நிதானமும் மக்கள் மத்தியில் அவர் மீது ஒரு பெரிய அனுதாபத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியது. 'அனைவரும் எதிர்க்கும் ஒரு நபர், நமக்காக நிற்கிறார்' என்ற எண்ணம் இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே ஒரு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த 'அண்டர்டாக் எபெக்ட்' தான் ஆளுங்கட்சிகளின் பலமான கட்டமைப்புக்கு மத்தியிலும் அவரை வெற்றிபெற வைத்தது.

2. அமைதியான களப்பணி:

இரண்டு வருடங்களுக்கு முன்பு த.வெ.க என்ற கட்சி ஆரம்பித்தது போலத் தோன்றினாலும், இதற்கான அஸ்திவாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டிருந்தது. 'விஜய் மக்கள் இயக்கம்' மூலம் கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், நூலகங்கள் அமைத்தல் மற்றும் ஏழை எளியோரின் பசியைப் போக்க, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் 'விலையில்லா விருந்தகம்' மூலம் 365 நாட்களும் உயர்தரமான, சுத்தமான இலவச உணவு வழங்குதல் போன்ற திட்டங்களை அமைதியாகச் செயல்படுத்தி வந்தார்.

அரசியல் ஆரவாரங்கள் இன்றி அடித்தட்டு மக்களுடன் அவர் கொண்டிருந்த இந்தத் தொடர்பு, தேர்தல் நேரத்தில் அவருக்குப் பெரும் வாக்கு வங்கியாக மாறியது. மற்ற கட்சிகள் மேடைப் பேச்சுகளில் கவனம் செலுத்தியபோது, விஜய்யின் படைகள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அமைதியாகத் தங்கள் பணிகளைச் செய்தன. இந்த 'சைலண்ட் ஆபரேஷன்' தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
கோட்டையை பிடிக்க விஜய் கையாளப்போகும் 'மாஸ்டர் பிளான்' என்ன?
TVK Vijay

3. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஒருங்கிணைப்பு:

தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் இளைஞர்களைத் துல்லியமாகக் குறிவைத்தார் விஜய். சமகாலப் பிரச்சனைகளான நீட் தேர்வு, வேலைவாய்ப்பு மற்றும் மாநில உரிமைகள் குறித்து அவர் எடுத்த தெளிவான நிலைப்பாடுகள் இளைஞர்களைக் கவர்ந்தன.

சமூக வலைதளங்களை வெறும் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தாமல், உணர்வுப்பூர்வமான ஒரு பிணைப்பை உருவாக்க அவர் பயன்படுத்திக் கொண்டார். அவரது ஒவ்வொரு பேச்சும், செயலும் நவீனத் தமிழகத்தின் தேவையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. மாற்றத்தை விரும்பிய இளைஞர்களுக்கு விஜய் ஒரு சிறந்த மாற்றாகத் தெரிந்ததே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்டகாலப் பிம்பங்களை உடைத்து, ஒரு புதிய பாதையை விஜய் அமைத்துக் காட்டினார். வெறும் சினிமா புகழை மட்டும் நம்பியிருக்காமல், திட்டமிடப்பட்ட உத்திகள், பொறுமை மற்றும் மக்களின் நாடித் துடிப்பை அறிந்த செயல்பாடுகள் ஆகியவை அவரை இன்று முதல்வராக்கியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com