

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. கருத்துக் கணிப்புகளைத் தவிடுப்பொடியாக்கி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 4 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகம்(TVK) கட்சியின் தலைவரான தளபதி விஜய், தமிழகத்தில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை முந்தி, 108-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முதல்வராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மக்கள், முக்கியமாக இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். திமுக மற்றும் அதிமுக என இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக விஜய் முன்வைக்கப்பட்டார், இது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரம் தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும், 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பது வரலாற்று சாதனையாகும்.
தனிப்பெரும்பான்மை (118+ இடங்கள்) கிடைக்காவிட்டால், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதேபோல், முதல்வராக விஜய் ஆளுமையைத் தக்கவைக்க நிர்வாகத் திறன், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு 2 வாய்ப்புகளை ஆளுநர் வழங்க வாய்ப்புகள் உள்ளன. அதில் முதலாவதாக, தவெக தலைவர் விஜய்யை அழைத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறலாம்.
இரண்டாவதாக, தனக்கு ஆதரவு தரும் கட்சிகளிடம் இருந்து கடிதங்களை பெற்று, தன்னிடம் வழங்கும்படி ஆளுநர் சொல்லலாம். விஜய் சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். விஜய் தனித்து போட்டியிட்டிருப்பதால் கண்டிப்பாக அதிமுகவிடம் இருந்துதான் ஆதரவு எம்எல்ஏக்களை பெற நினைக்கும்பட்சத்தில் அதிமுக கேட்கும் பேரங்களை ஒத்துக் கொள்ள வேண்டும்.. 118 இடங்களுக்கு மேல் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், தவெக ஆட்சி அமைப்பதற்கான உரிமையை ஆளுநர் வழங்கலாம். ஒருவேளை ஆதரவு கிடைக்காமல் போனால், தவெகவுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காமல் போகும்.
இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், இரண்டாவதாக அதிக இடங்களை பெற்றுள்ள திமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோருவார்.
அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், அடுத்த 6 மாதங்கள் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறும்.
தற்போதை நிலையில் தவெகவிற்கு இன்றும் 15 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால், அதனை ஈடுசெய்வதற்காக மற்ற கட்சிகளிடமிருந்து தவெகவிற்கு சமிக்ஞைகள் வரத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு ஆதரவு கிடைக்க சாத்தியமான வழிகள்
அதிமுக - வெளியில் இருந்து ஆதரவு தரலாம்.
பாமக மற்றும் காங்கிரசில் தலா 5 பேரும், இடதுசாரிகள் 4 பேரும், விசிக 2 பேரிடமும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. விஜய்க்குத் தேவைப்படுவது மிகக்குறைந்த அளவிலான இடங்களே என்பதால், இந்தக் கட்சிகளில் இருந்து அவருக்கு ஆதரவளிக்க பல தலைவர்கள் முன்வர கூடும்.
மாற்று வாய்ப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் குழு தவெகவில் இணையும் பட்சத்தில் அது நடக்கலாம்.
2006-ம் ஆண்டு தேர்தலின்போது திமுக (96 தொகுதிகள்) வெளியில் இருந்து ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இந்த முன்னிலை நிலவரங்கள் நீடித்து, கூட்டணிகள் சரியாக அமைந்தால், ஆட்சி அமைப்பதற்கான செயல்முறைகள் மிக விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
களம் தயாராகிவிட்டது. தனித்துச் செயல்படுவதன் மூலமோ அல்லது கூட்டணிகள் அமைப்பதன் மூலமோ எதுவாக இருப்பினும், "தளபதி" என்பது இனி வெறும் ஒரு பட்டப்பெயர் மட்டுமல்ல—அது அரியணைக்கான ஒரு உரிமைக்கோரலாகும்.