தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை - விடையும்... வரவேற்பும்!

Tamil New Year 2026 greetings
Tamil New Year 2026 greetingsImg credit: AI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
Kalki Strip
Kalki Strip

‘விசுவாவசு’வுக்கு விடை கொடுத்து விட்டுப் 

‘பராபவ’ ஆண்டு தனையே நாமும் 

பாசம் மிகக்கொண்டு வரவேற்று மகிழ்வோம்!

பிரபவ’  தொடங்கி ‘அட்சய’ ஆண்டில்

அழகாய் முடியும் அறுபது வருடத்தில்

நாற்பதாம் ஆண்டாம் நலமிகு பராபவ!

ஆண்டொன்று கழிய வயதொன்று கூட

அனுபவம் நமக்கு அதிகரித்துப் பெருக 

வாழ்க்கையின் நல்ல நெளிவு சுழிவெல்லாம் 

வாய்த்திடும் நமக்குச் செலவேதும் இல்லாமலே!

ஆண்டுகள் அறுபதும் சமஸ்கிருதத்தி லென்றாலும் 

தமிழிலும் அவற்றுக்கு உண்டு நற்பெயர்கள்!

பராபவ என்றால் அருட்தோன்ற லென்றே

சொல்லியே வைத்தார் சுவைபடு தமிழில்!

பலமொழி கற்பது நன்மையே பயக்கும் 

பயத்தைப் போக்கி தெம்பினை நல்கும்!

இந்த ஆண்டிற்கு இணையிலா சிறப்பு

தேர்தலால் உண்டு! தேர்வோம் நல்லோரை!

ஆண்டுகள் மாறி அடுத்தடுத்து வந்தாலும் 

உழைத்தே நாமும் உதிர வியர்வையை

மண்ணில் சிந்தினால் மகிழ்ந்தே அதுவும் 

உயர்ந்த வாழ்வினை உலகத்தார்க்கு அளிக்கும்!

உழைப்போர் தமக்கு ஒவ்வொரு நாளும்

உயர்ந்தநாளே! உன்னதம் செறிந்த சிறந்தநாளே!

பராபவ ஆண்டு பாவத்தைப் போக்கி

உள்ளத்தில் நல்ல எண்ணத்தை விதைத்து

அமைதியில் நாமும் ஆழ்ந்திடும் வண்ணம் 

ஆக்கிடும் என்பதே அடிமன உணர்வு!

இதையும் படியுங்கள்:
இனிய தமிழ்ப் புத்தாண்டு: நம்பிக்கையும் நன்மைகளும் பெருகட்டும்!
Tamil New Year 2026 greetings

இடைக்காடர் இயற்றிய இயல்பு வெண்பாவில் 

‘மிக்க பராபவத்தில் மேதினியில் பின்மழையாம் 

தக்க பசுக்கள் தழைக்குமே - இக்குப் பலிக்காது

நான்கு வகைப் பல்லுயிர்க்கும் இன்பம்

கலிக்கா தெளவே கருது’என்கிறார்.

பாடிய பாடல்கள் பயமுறுத்த அல்ல…

எதனையும் எதிர்கொள்ளும் இதயஆற்றலை வளர்த்து 

பக்குவமாய் நாம்வாழப் பாதை வகுத்திடவே!

பொருளாதார நிலையுயரப் போதுமான வேலைகளும்

பணவரவும் மிகவுயர்ந்து பாரினிலே மக்களெல்லோரும் 

நன்றாகவே வாழ்ந்திடவே நன்மையே செய்திடுமாம்

செவ்வாயன்று பிறக்கும் சிறப்புமிகு இவ்வாண்டு!

எல்லா உயிர்க்குமிங்கு இரைப்பை நிரம்பிடட்டும்!

இறையருள் பெருகிடட்டும்! இனியவை மலர்ந்திடட்டும்!

போர்மேகங்கள் விலகிடட்டும்!போதுமான விமானங்கள் 

வான்வெளி எங்கணுமே வட்டமிட்டுப் பறந்திடட்டும்!

குண்டுகள் சத்தமின்றிக் குழந்தைகள் உறங்கிடட்டும்!

காஸ்கேட்டு நிற்போரின் கஷ்டங்கள் விலகிடட்டும்!

அணுகுண்டு பீரங்கி ஆட்கொல்லும் துப்பாக்கிகளுக்கு 

மரணம் வந்திடட்டும்! மாவுலகே  மகிழ்ந்திடட்டும்!

அமைதிக்கொடி யொன்றே அகிலத்தில் பறந்திடட்டும்!

logo
Kalki Online
kalkionline.com