

வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை. ஆனால் அதை யாரிடமும் கற்றுக்கொள்ள முடியாது. மகிழ்ச்சி என்பது விரும்புகின்ற அனைத்தும் பெறுவதில் கிடைக்காது, நம்மிடம் உள்ளவற்றை அனுபவித்து வாழ்வதில்தான் மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மந்திரங்கள் .தேவையில்லை சில மறதிகள் போதுமானது.
மகிழ்ச்சி என்பது உங்களிடம் இருப்பதைப் பொறுத்தது அல்ல. அது உங்கள் அணுகுமுறையைப் பொறுத்தது. மகிழ்ச்சியாக வாழ ஆயிரம் வழி இருக்கிறது. ஆனால் கவலையின்றி வாழ மூன்று வழிதான். 1) வருவது வரட்டும். 2) போவது போகட்டும். 3) நடப்பது நடக்கட்டும் என்று இருப்பதுதான்.
சந்தோசமாக மகிழ்ச்சியாக செயல்படுபவர்கள்தான் அதிகம் சாதிக்கிறார்கள், நேரங்கள் வாய்ப்பை உருவாக்குவதில்லை. முயற்சிதான் வாய்ப்பை உருவாக்கும். நேரத்திற்காக காத்திருக்காதீர்கள் முயற்சியோடு முன்னேறிச் செல்லுங்கள்.
ஒரே நாளில் எதுவும் மாறிவிடுவதில்லை. ஒவ்வொரு நாளின் முயற்சியைப் பொறுத்தே உள்ளது உங்கள் வளர்ச்சி. உங்களின் நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள், எதிர்காலம் உங்களை வரவேற்கும். என்ன நடந்தாலும் தன் குறிக்கோளில் மிகத் தெளிவாக இருப்பவனுக்குத்தான் இந்த உலகத்தை வெல்லும் சக்தி இருக்கிறது.
மனக்குழப்பம் இருக்கும்போது மௌனமாக இருங்கள். மன கஷ்டம் இருக்கும்போது தைரியமாக இருங்கள். வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். உங்கள் எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது. முடிந்து போனதை கனவாக நினைத்துக்கொள்ளுங்கள்.. நடக்கப்போவதை வாழ்க்கையாக எடுத்து கொள்ளுங்கள். சந்தோசமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், நம்மை பக்குவப்பட வைப்பது நம் மனம் தான், நம் மனமே நமக்குச் சிறந்த ஆசிரியர்.
வெற்றி உடனே வர வேண்டும் என்ற வேட்கை இருக்க கூடாது, வெற்றி வரும் வரை உழைத்திடுவேன் என்ற உறுதி இருக்கவேண்டும், என் உழைப்பு ஒருநாள் வெற்றியை கொடுக்கும் என்று நம்பிக்கை இருக்க வேண்டும்.
உங்கள் வீடுகளில் உள்ள குப்பைக்கு அவ்வப்போது குட்பை சொல்வதைப்போல மனதையும் சுத்தப்படுத்துங்கள். தேவையற்ற விஷயங்களை மனதில் சுமந்து, வாழ்க்கையை சுமையாக மாற்றாதீர்கள். தேவையற்ற சிந்தனைகளுக்கோ, பயம் கலந்த அதீத கற்பனைகளுக்கோ மனதில் இடம் கொடுக்காதீர்கள்.
வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு என ஒரு பகுதியை மாற்றுங்கள்.அந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் ஆடுங்கள், பாடுங்கள் சுதந்திரமாக இருங்கள், செயல்படுங்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்.
கடந்த கால கசப்பான நினைவுகளையும், தவறுகளையும் மறந்து, மனதை மகிழ்ச்சிப்படுத்தும் சுகமான நினைவுகளை மட்டுமே மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும்.
வாழ்க்கை சூழல் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றத்திற்கு உங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். எந்த நிலையிலும் விடாப்பிடியாக செயல்படாதீர்கள். அது உங்கள் இலக்கை அடைய தடைக்கல்லாக மாறிவிடும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகுங்கள். எந்த சூழலிலும் நிதானமாக செயல்பட பழகிக்கொள்ள வேண்டும். தவறுகளை மன்னிக்க பழகுங்கள்.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். கடந்த காலம் முடிந்துபோன ஒன்று, வருங்காலம் நிச்சயமற்ற ஒன்று. அதனால் நிகழ்காலத்தை உங்களுக்கு உரியதாக மாற்றுங்கள். சின்னச்சின்ன விஷயங்களையும் ரசித்து செய்யுங்கள். மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் அப்டேட்ஸாக இருங்கள். எதையும் நன்றாக சிந்தித்து பின் விளைவை அனுமானித்து திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சுமையாகாது சுகமாகும்.