
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஒரே விஷயம் மகிழ்ச்சி. மகிழ்ச்சி தரும் இன்பம் அலாதியானது. நம் வாழ்வில் ஒருவரால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியுமா என்றால் முடியாது என்பதை நிதர்சனம். ஆனால் கூடுமானவரை மகிழ்ச்சியாக நம்மால் வாழ முடியும். அதற்கு சில எளிய வழிகளைப் பின்பற்ற வேண்டும். அந்த எளிய வழிகள் என்னென்ன என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
1.காலை எழுந்ததும் வீட்டிலுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியோடு காலை வணக்கம் அல்லது குட்மார்னிங் என்று சொல்லுங்கள். வெளியே புறப்படும் போதும் உங்களுக்குத் தெரிந்தவர் எவரேனும் எதிரில் வந்தால் “ஹாய் எப்படி இருக்கீங்க ?” என்று நலம் விசாரியுங்கள்.
2.யாரையும் எக்காரணத்தைக் கொண்டும் வெறுக்காதீர்கள். வெறுப்புணர்ச்சி உங்கள் மனதில் இருந்தால் மகிழ்ச்சி வெளியேறிவிடும். இந்த உலகில் உள்ள எல்லோரும் நல்லவரே. ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரிடமிருந்து விலகி இருக்கப் பழகுங்கள்.
3.எதற்கும் கவலைப்படாதீர்கள். கவலை மகிழ்ச்சியை விரட்டும். பல வியாதிகளையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். கவலைப்படுவதால் என்ன ஆகப் போகிறது ? உங்கள் சிக்கல்கள் இன்னும் அதிகரிக்கக் கூடும். எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. பிரச்னையின் ஆயுட்காலம் முடிந்ததும் அது உங்களை விட்டுத் தானாகவே விலகிச் சென்றுவிடும்.
4.யாராவது உங்களிடம் கடன் கேட்டால் உங்களிடம் பணமிருந்தாலும் தரவே தராதீர்கள். கடன் அன்பை முறிக்கும். கூடவே இலவசமாக உறவையும் நட்பையும் சுலபமாக முறிக்கும். எடுத்த எடுப்பிலேயே இல்லை என்று நிராகரித்து விட்டால் பிரச்னை அதோடு தீர்ந்துவிடும். மாறாக ஒருவருக்குக் கடன் கொடுத்து அவர் அதை உரிய நேரத்தில் திருப்பித் தரவில்லை என்றால் நட்பு பகையாக மாறும். உங்கள் மகிழ்ச்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
5.ஒருவர் உங்களிடம் வந்து உதவுங்கள் என்று கேட்காமல் எந்த ஒரு சிறிய உதவியைக் கூடச் செய்யாதீர்கள். வலியப் போய் செய்யும் உதவிகளுக்கு மதிப்பிருக்காது. ஒருவருக்கு நீங்களாக உதவப்போய் அதைப் பெற்றவர் உங்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றால் அதை நினைக்கும் போதெல்லாம் உங்கள் மகிழ்ச்சி பறிபோகும்.
6.எளிமையாக வாழப்பழகுங்கள். ஆடம்பரமாக வாழ நினைத்தால் அதற்காக பல விஷயங்களை நீங்கள் சமரசம் செய்துகொள்ள நேரிடும். ஆடம்பர வாழ்க்கைக்காக வரவுக்கு மீறிய செலவு செய்யத் துணியும் போது உங்கள் மகிழ்ச்சி உங்களை விட்டு பறந்தோடிவிடும்.
7.யாராவது வழியில் உங்களைப் பார்த்து புன்னகைத்தால் நீங்கள் யோசிக்காமல் புன்னகைத்து விடுங்கள். புன்னகைப்பவர் நமக்குத் தெரிந்தவரா இல்லை புதியவரா எதற்காக நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறார் என்றெல்லாம் யோசிக்காதீர்கள். புன்னகை உங்கள் மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும்.
8.உங்களை நீங்களே நேசிக்கத் தொடங்குங்கள். இது உங்கள் மனதுள் புத்துணர்ச்சியை உருவாக்கும். புத்துணர்ச்சி உண்டானால் மகிழ்ச்சி தன்னால் உங்களை வந்து அடையும்.
9.மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். தவறு செய்யாதவரே இந்த உலகத்தில் இல்லை எனலாம். யாராவது தவறு செய்துவிட்டால் அதை மனதில் பதித்து வைத்து அவர் மீது கோபப்படாதீர்கள். மன்னிப்பு ஒரு மனிதனை மகானாக மாற்றும் மாமருந்து. அது உங்கள் மனதை லேசாக்கும்.
10.எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள். நேர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களோடு பழகுங்கள். நேர்மறை எண்ணம் மனதிற்கு வலிமையைத் தரும். மகிழ்ச்சியின் திறவுகோலாகவும் அமையும்.
மேற்காணும் வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள். அப்புறம் கவலை என்றால் என்னவென்று கேட்பீர்கள்!