இனிய வார்த்தைகளால் ஒரு சர்வாதிகாரியின் எண்ணத்தையே மாற்ற முடியுமா? இதோ ஒரு நிஜக் கதை!

இனிய சொற்களை இதமாகக் கூறி, பண்பாக நட்பை வளர்ப்பவர்களுடைய வாழ்க்கை, அந்த நற்சொற்களால் ஆளப்படுவது என்பது உண்மையே!
Radhakrishnan and stalin
Words have power
Published on

1949-ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன், சோவியத் ரஷ்யாவிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் அந்நாட்டின் அதிபராக விளங்கிய ஜோசப் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். ஸ்டாலின், டாக்டர் ராதாகிருஷ்ணனுடைய கருத்துக்கள் மற்றும் ஆளுமையின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.

இருவரும் நட்போடு பேசிக்கொண்டிருந்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணன், ஸ்டாலினிடம், "தோழரே! எங்களது இந்திய தேசத்தில் ஒரு பேரரசர் இருந்தார். அவர் பல போர்களைச் செய்து பல்வேறு இடங்களைக் கைப்பற்றினார். ஒரு மிகப்பெரிய போரில் வெற்றியும் பெற்றார். ஆனால், வெற்றி பெற்ற அந்தப் பேரரசர், போரினால் ஏற்பட்ட விளைவுகளைக் கண்டு மனம்மாறி, போரைக் கைவிட்டுத் துறவியாகவே மாறிவிட்டார். அந்தப் பேரரசரைப் போலவே நீங்களும் பல போராட்டங்களில் வெற்றி பெற்று இந்த உன்னத தேசத்தின் தலைவராக உயர்ந்து இருக்கிறீர்கள். அந்தப் பேரரசருக்கு நிகழ்ந்ததைப் போல தங்களுக்கும் நிகழலாமே?" எனப் பண்பாகவும் அன்பாகவும் கூறினார். (இங்கு அவர் குறிப்பிட்டது பேரரசர் அசோகரை).

ராதாகிருஷ்ணனின் கூற்றை மறுக்காத ஸ்டாலின், அப்போது சிரித்துக்கொண்டே, "யாருக்குத் தெரியும்? நீங்கள் சொன்னது போல சில அதிசயங்கள் சில நேரங்களில் நிகழலாம்!" எனப் பதில் கூறினார். இந்த உரையாடல் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்தன.

தன் பணிக்காலம் முடிந்து தாயகமான இந்தியாவிற்கு ராதாகிருஷ்ணன் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. புறப்படும் முன் ஸ்டாலினைச் சந்தித்து விடைபெறச் சென்றார் ராதாகிருஷ்ணன். அப்போது ஸ்டாலின் அளவுகடந்த மகிழ்ச்சியுடன் ராதாகிருஷ்ணனுடைய முதுகிலும் கன்னத்திலும் அன்போடு தட்டிக்கொடுத்தார். பின்பு, "நண்பரே! என்னை அடக்கி ஆளுகின்ற ஒரு மிருகமாக நினைக்காமல், மனிதனாக நினைத்த முதல் மனிதர் நீங்கள்தான். ஆகவே, உங்களைப் பிரிவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது என்னுடைய வாழ்த்து. ஆனால், நானோ அதிக நாட்கள் வாழப்போவதில்லை!" என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். இவ்வாறு பேசிய ஸ்டாலின், அடுத்த ஆறே மாதங்களில் உயிரிழந்தார்.

பல சமயங்களில் நாம் பேசக்கூடிய வார்த்தைகள், பல அற்புதங்களைச் செய்யக் கூடியவையாக இருக்கின்றன. மனிதர்களோடு மனிதர்களாகப் பழகவும், நம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் நமது சமூகத்தில் நாம் நிறைய பாடங்களைக் கற்க வேண்டியுள்ளது. எளிய மனிதர்களை மரியாதையாக அழைப்பதும், நடத்துவதும் மேற்கத்திய நாடுகளில் இயல்பாக இருக்கலாம்; ஆனால், நமது கலாச்சாரத்திலும் இந்தப் பண்பு பல்வேறு இடங்களில் நல்ல மாற்றங்களைச் செய்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆறு மனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!
Radhakrishnan and stalin

மனிதன் எந்த நிலையில் இருந்தாலும், சொற்களுடைய ஆழத்தையும் (Words have power) அதனுடைய அர்த்தத்தையும் நன்கு உணர்ந்த பிறகே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். பேசுகின்ற பேச்சிலும் உறவிலும் மரியாதை இல்லாவிட்டால், அங்கு உரசல்களும் பூசல்களும் அதிகரிக்கும்.

ஆகவே, இனிய சொற்களை இதமாகக் கூறி, பண்பாக நட்பை வளர்ப்பவர்களுடைய வாழ்க்கை, அந்த நற்சொற்களால் ஆளப்படுவது என்பது உண்மையே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com