

மனிதன் தன் வாழ்க்கையில் பல்வேறு நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்து வரவேண்டும். நோ்மறை சிந்தனை நம்மிடம் நிறையவே இருக்கவேண்டும்.
சில நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலையால் நோ்மை தவறவேண்டியுள்ளது. இருப்பினும் சில எண்ணங்கள், சில பழக்கவழக்கங்கள் நம்மிடம் இன்றளவும் உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எதிா்மறை விஷயங்களும் அடங்கி உள்ளன. அது தவிா்க்க முடியாத ஒன்றாகும்தான். இருப்பினும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஆறு விஷயங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
"ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு", என்பது பாடல். அதேபோல நாம் கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் தவிா்க்க வேண்டிய ஆறு விஷயங்களான சோம்பல், கோபம், பயம், அகங்காரம், பொறாமை, சந்தேகம் இவைகளே நமது முதன்மையான எதிாிகளாகும்.
"சோம்பேறித்தனமே நமது லட்சியத்தை முறியடிக்கும்"
ஒரு தீக்குச்சி எப்படி ஒரு காட்டை அழிக்கிறதோ அதேபோல சோம்பலானது நாம் கொண்டுள்ள லட்சியக்கோட்டினை நம்மிடமிருந்து அகற்றிவிடும்.
"கோபம் ஞானத்தை அழிக்கும்"
வாழ்க்கையில் கோபம் இருக்கலாம் சில சமயங்களில் வரலாம். அதுவே வாழ்க்கையாக மாறக்கூடாது. கோபம், ஆத்திரம், கொள்வதால் நமது ஞானமே நம்மைவிட்டு போய்விடும். எங்குமே மரியாதை என்பது நமக்கிருக்காது. ஆக கோபத்தை அழிப்பதே நல்லது. அப்படி இல்லா நிலையில் நமது ஞானத்தையே அது வென்றுவிடலாம்.
"பயம் கனவுகளை கலைத்துவிடும்"
நமது வாழ்வில் நிறைய சாதிக்க பல கனவுகளை வைத்திருப்போம். அவைகளை நிறைவேற்ற நம்மிடமிருந்து நாம் விலக்கவேண்டியது பயம் மட்டுமே! துணிச்சல் இருக்க வேண்டும்.
பயம் நமது வாழ்விற்கான இருள் அதை நீக்கவல்ல ஒளியே துணிச்சல். பயத்தை விலக்கினாலே கனவுகளை வெல்லமுடியும் என உறுதியாய் வாழலாமே!
"அகங்காரம் வளா்ச்சியை தடுத்துவிடும்"
நான், என்னால், எனது என்ற தீய சக்தி நம்மிடம் வரவேகூடாது. அதிலும் நான் என்ற அகம்பாவம் நம்மிடம் நிரந்தரமாக வசித்து வந்தால் நமது வளா்ச்சி எட்டாக் கனியாகவே இருக்கும். அகங்காரம் எனும் விஷச்செடியை அழித்தால் வளர்ச்சி எனும் கரடுமுரடான பாதையையை எளிதில் கடக்கலாம்.
"பொறாமை அமைதியை கெடுத்துவிடும்"
பொறாமை எனும் ஆமை நம் மனமெனும் வீட்டிற்குள் வரவே கூடாது அடுத்தவர் எப்படி வாழ்வில் முன்னேற்றம் அடைந்தாா், அதேபோல நாமும் வளரவேண்டும் என்ற எண்ணம் இருப்பதே நல்லது. அதை விடுத்து யாரைக்கண்டாலும் பொறாமைப்பட்டால் நமது அமைதியை அழித்துவிடும் என்பதை உணர்வதே நல்லது.
"சந்தேகம் நம்பிக்கையை விழுங்கிவிடும்"
நமது வாழ்வை கெடுக்கவல்ல ஆற்றல் சந்தேகத்திற்கு நிறையவே உண்டு. ஆக தொட்டதற்கெல்லாம் சந்தேகம் கொள்வது நமது நம்பிக்கையை வீழ்த்திவிடுமே.
சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு என்பது போல நம்பிக்கையே வளமான வாழ்விற்கான வழிகாட்டியாகும் . எனவே இந்த ஆறுவகை எதிா்மறை விஷயங்களையும் வாழ்க்கைப் பாதையிலிருந்து ஒதுக்கிவிடுங்கள். ஆண்டவன் அருளோடு வாழ அதுவே வளமான வழிகாட்டியாகும்.