

நாம் கண்களால் பிறரைப் பார்க்கும் பொழுது, கீழ் நோக்கி பார்ப்பதை யாரும் பெருமையாக கூற மாட்டார்கள். பிறர் கண்ணைப் பார்த்து பேசுவதை தான் விரும்புவார்கள். அதுதான் மேலானவையாக கருதப்படும்.
அறியாமை துன்பத்தின் வேர். அதை போக்குவதற்கு கற்க வேண்டும். அதுவும் பண்பாடு உள்ள கல்வியாக இருக்க வேண்டும். பண்பாடற்ற கல்வி சமுதாய பாவமாகும். ஒரு தேசத்தின் தலைவர்கள் வகுப்பறையில் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை சிறுபிராயத்திலேயே குழந்தைகளுக்கு நாம் மனதில் பதிய வைக்க வேண்டும். நம்மில் பலர் கல்வி கற்பதை வேலைக்கு அடிப்படையான ஒரு கருவியாக மட்டுமே நினைப்பதுண்டு. அதனால் கிடைக்கும் வருமானம் பெரும் தகையாளனாகவும், பேரறிஞனாகவும் செய்வதற்கு உரியது என்பதை நாம் உணர வேண்டும்.
பள்ளியில் ஆசிரியர் மாத பரீட்சை முடிந்து மாணவர்களுக்கு விடைத்தாள் கொடுத்தார். ஒரு மாணவன் பேப்பர் வாங்கியவுடன் அழ ஆரம்பித்துவிட்டான். ‘ஏண்டா அழுகிறாய், நீ தான் கணக்கில் 96 மார்க் வாங்கி இருக்கிறாயே! அதற்காக சந்தோஷப்படு.
அதை விட்டு அழுது கொண்டிருக்கிறாயே!’ என்றனர் சகமாணவர்கள்.
"என்னடா செய்வது! எனக்கு மேல் நான்கு பேர் 97, 98, 99, 100 என வாங்கி விட்டார்களே" என வருத்தப்பட்டான் அந்த மாணவன்.
இன்னொரு மாணவன் சிரித்துக்கொண்டிருந்தான். அவனிடம் சென்ற மாணவர்கள் டேய், "நீ வாங்கி இருப்பதோ நாலு மார்க்கு, இதுல என்னடா சிரிப்பு வேண்டி இருக்கு" என்றனர். "அட போங்கடா எனக்கும் கீழே மூணு, ரெண்டு, ஒன்னு, ஜீரோ என வாங்கி இருக்கிறார்கள். அவர்களை விட நான் உயர்ந்தவன் இல்லையா? அதனால் தான் சிரிக்கிறேன்," என்றான்.
முதல் மாணவன் தன் முயற்சிக்காக அழுகிறான். அடுத்த மாணவன் தன் தோல்வியை மறைக்க சிரிக்கிறான்.
நம் புத்தி தலைகீழாக சிந்திக்கக்கூடாது. முன்னேற்றம் குறித்தே சிந்திக்க வேண்டும். நீங்கள் எப்பொழுதும் மேலான விஷயங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கதையே.
"மேலானவைகளைத் தேடுங்கள்" என்று பைபிள் குறிப்பிடுகிறது. பூமியில் உள்ள தாவரங்கள் அனைத்தும் தன் தேடலை மேல் நோக்கியே செய்கின்றன. ‘வானம் பொழியும், நாம் வளரலாம்’ என்ற நம்பிக்கைதான் அது. அதுபோல் கல்வியை கற்கும் பொழுதும் நாம் உயர்ந்த சிந்தனையை அதற்குள் பதித்து கற்றால் மென்மேலும் மேன்மையுறலாம் என்பது உறுதி. ஆதலால் எதை செய்ய முனைந்தாலும் அதில் மேன்மையைத் தேடுங்கள். அதுதான் ஆக்கப் பூர்வமானது. அறிவு வளர்ச்சிக்கு ஏற்றது.