உலகம் எப்போதும் பழிச்சொற்களை சிறிதும் யோசிக்காமல் சொல்லும் வழக்கம் உள்ளது. விமர்சனங்களை புறக்கணிக்க முடியாது. நடுநிலைமையுடன் கூடிய விமர்சனங்களை ஏற்று நம்மைத் திருத்திக் கொள்வதே நல்லது.
இன்று சமூக அமைப்பில் தவறிழைப்பவர்கள் வலிமையுடன் திகழ்கிறார்கள். அவர்களை பாதுகாக்க கட்டமைப்புகள் உள்ளன. அவர்களால் நேர்மையான வர்களின் மீது எளிதாக மண்ணை வாரி வீச முடிகிறது. இவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்க வலிமையான இதயம் மட்டுமல்ல தடித்த தோலும் தேவைப்படுகிறது.
மகாத்மா காந்தியின் மீது வைக்கப்படாத கண்டனங்களா? ஒருமுறை அவரைக் கண்டித்து மிக நீளமான கடிதம் ஒன்றை ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்த காந்தி அதிலிருந்த குண்டூசியை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்து விட்டார். இந்தக் கடிதத்தில் குண்டூசி ஒன்றுதான பயனுள்ளது என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அப்படிப்பட்ட திடமான உள்ளமே மிகப்பெரிய அதிகாரத்தை எதிர்க்கும் துணிவை நமக்குப் பெற்றுத்தந்தது.
காமராஜரைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பினர். அவர் நேர்மையாக இருப்பவர் என்று சொல்லிக் கொண்டு நிறைய சொத்து சேர்ப்பதாக எழுதினார்கள். அதற்கு அவர் என் நேர்மை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கெல்லாம் பதில் சொல்லி என் நேர்மையை நிரூபிக்க அவசியமில்லை. எனக்கு யானைக்கால் நோய் இல்லை என்பதற்காக எல்லோரிடமும் காலைத் தூக்கிக் காட்டவைண்டிய அவசியம் இல்லை என்றார்.
காஞ்சியில் ஒருமுறை இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் பணி மாவட்ட ஆட்சியர் இறையன்புக்குக் கொடுக்கப்பட்டது. அதில் தரமான இயந்திரங்கள் வழங்க குறிப்பிட்டிருந்தது. அதனால் அவர் ஒப்பந்தம் கோரினார். வழக்கமாக தரமற்ற இயந்திரங்களைக் தந்து பணம் பண்ணும் நிறுவனம் கோபத்தில் நிறுவனம் தையல் யந்திர நிறுவனங்களிடம் இறையன்பு அவர்கள் கையூட்டு பெற்றதாக நோட்டீஸ் அடித்து அவருக்கு அனுப்பினார்கள். அதிர்ச்சி அடைந்த அவர் அதை தன் காத்திருப்பு அறையில் ஒட்டிவைக்கக் கூறினார். வருகிறவர்கள் அனைவரும் அதை வாசித்து விட்டு வரச்சொன்னார். பலரும் அதைக் கண்டித்து உங்களைப்போய் இப்படி சொல்கிறார்களே. அடுக்குமா என்றனர். இதுவே அவருக்கு வெற்றியாக இருந்தது.
இன்றைய சூழலில் நேர்மையும் உண்மையும் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. சவால்களை சந்திப்பதும் வெற்றி கொள்வதும் தீவிரமாக வேண்டிய தருணம் இது. புயலுக்கும் வெள்ளத்துக்கும் கலங்காத மக்கள்தான் மீனவர்கள். புயல்போது பாதுகாப்பு மையங்களிலிருந்து பிறகு தங்கள் இருப்படத்திற்கு மகிழ்ச்சியோடு செல்வார்கள். ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வை இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் வறுமையிலும் மகிழ்ச்சியாகவும் இல்லாமையிலும் செம்மையாக அவர்களால் வாழ முடிகிறது.
நம் கை மீறிய இழப்புகளை எதிர்கொள்ளும் பக்குவம் நமக்குத் தேவைப்படுகிறது. தேவையற்ற பயங்களையும் அவசியமற்ற கவலைகளையும் அடுத்தவர்களுடைய கருத்துக்களையும் களைய முடியாவிட்டாலும், அவற்றை உதிர்க்கக் கற்றுக் கொள்வதே மகிழ்ச்சியை நம் உள்ளத்தில் முழுமையாக மலரச்செய்ய இயலும். மகிழ்ச்சியின் மையப்பகுதி நம் உள்ளத்தில்தான் உள்ளது. அது பாலைவனச்சோலை என்று எண்ணி பலர் அதை நித்தமும் தேடி அலைகிறார்கள்.