

படுகிராமம், வளர்ச்சியில்லாச் சூழல், மின் வசதி இல்லை; கிணறு மட்டுமே ஆதாரம். கொல்லைப்புறத்தில் நீளமான ஓட்டு வீடு, கழிவறை கிடையாது, மிக்ஸி இல்லை, கிரைண்டர் இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் பேருந்து, போன் போன்ற தொலைத்தொடர்பு வசதிகள் கிடையாது. கடிதம் மட்டுமே எண்ணங்களின் ஓட்டம்.
மாமியார், மாமனார், மாமனாரின் அண்ணன், தம்பி, அவர்தம் மனைவிமார்கள், அவரவர் வாரிசுகள் எனப் பெரிய கூட்டுக் குடும்ப வாழ்க்கை. நாத்தனார்கள் தலைக்கு ஒன்றாய் எடுத்துப் போட்டுச் செய்யும் அன்றாட வேலைகள். மாடு கறவை, வயல்வெளிப் பொருட்கள் என வேலைகள் நீளும். உள்ளூர் பள்ளியில் படிப்பு, காலர் இல்லாத சட்டை, பாட்டி வைத்துக் கொடுக்கும் கஷாயம் என அந்த வாழ்க்கை நகரும். நல்ல நாள், பெருநாட்களில் பலகாரங்களுக்குப் பஞ்சமில்லை. மனதில் வஞ்சனை இல்லை; மாறாக அன்பே பிரதானம்.
டூரிங் டாக்கீஸில் ராமாயணம், மகாபாரதம் படம் வந்தால் மட்டும் மணலில் அமர்ந்து பார்த்துவிட்டு வருவார்கள். வந்ததும் அனைவருக்கும் புதிதாகச் சட்னி, சாம்பார் செய்து தோசை ஊற்ற வேண்டும். மதியம் வைத்ததைச் சூடாக்கிட விறகுகள் ஈரமாயிருந்தால் அடுப்பு எரிவது கஷ்டம். நாத்தனார், அண்ணி ஆகியோரின் பிரசவம் மற்றும் குழந்தைப் பராமரிப்பு, 'பச்சை உடம்புக்காரிக்கு' பத்திய உணவு எனப் பொறுப்புகள் அதிகம். இரவுச் சாப்பாடு முடிந்ததும், கணவர் தூங்கும் போது காற்று வரவேண்டுமே என விசிறி வீசியபடியே கைகால்களைப் பிடித்து விடுதல் என ஓய்வறியா உழைப்பு.
மாதவிடாய் (Period) நேரமானால் தனியே கொல்லைத் தாவரத்தின் படுக்கை. அனைவரும் சாப்பிட்ட பின் மீதமிருக்கும் உணவின் வருகைக்காக அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் காத்திருத்தல். கொட்டும் மழை, அடாது விடாத அடைமழையில் ஆங்காங்கே ஓடு நகர்ந்ததால் வீட்டின் நடுவே கசியும் மழைநீர். இப்படி அடுக்களை முதல் படுக்கை வரை வஞ்சனை இல்லாமல் குழந்தை பிறப்பு, புளி உடைத்தல், அதை அரித்தல், வெயிலில் காயவைத்து உருண்டையாய் உருட்டிப் பானையில் அடைத்தல் என வேலைகள் தொடரும்.
காலை எழுந்தால் மாடுகள் பராமரிப்பு, சாணி அள்ளுதல், வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வீடு கழுவி விடுதல் என உழைப்பு நீளும். அடை தோசை, இட்லிக்குக் கிலோ கணக்கில் ஆட்டுக்கல்லில் இரவு பதினோரு மணி வரை மாவு ஆட்ட வேண்டும். இடையிடையே மாமியார், மாமனார் இருமினால் பதமான வெந்நீர் வழங்குதல், குழந்தையின் அழுகுரல் என அனைத்தும் அந்தப் பெண்ணையே சாரும்.
தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்குப் பலவிதமான பலகாரங்கள்; ஆடி மாதம் போலி, ஆமை வடை, தேங்காய்ப்பால்; ஆடிப்பெருக்கில் கலவை சாதம்; ஆவணி அவிட்டம் சிறப்புச் சமையல்; வரலட்சுமி நோன்புக்குக் கொழுக்கட்டை, வடை, பாயசம், பச்சரிசி இட்லி; மாமியார் சொல்லியபடி கொத்தவரங்காய் சாம்பார்; புரட்டாசியில் மஹாளய பட்சம் சமையல் மற்றும் விரதம்; நவராத்திரியில் பூஜை மற்றும் விதவிதமான சுண்டல்; மார்கழியில் ஆருத்ரா தரிசனம், திருவாதிரைக் களி, கதம்பக் கூட்டு மற்றும் முப்பது நாளும் வாசலில் விதவிதமான புள்ளிக்கோலம்; கார்த்திகையில் தீபம் மற்றும் இருவகை பொரி உருண்டைகள்; பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாட்டம்; மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம்; மாசியில் பல பூஜைகள்; பங்குனியில் காரடையார் நோன்பு என வருடம் முழுவதும் விழாக்கள்.
இவற்றிற்காக முந்தைய நாளே ஒன்பது கஜப் புடவையைத் துவைத்து மடியாகக் காயவைத்துத் தயார் செய்தல். சித்திரை வருடப்பிறப்பு என வாழ்நாள் முழுவதும் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை, வேலை, வேலை! உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன கூட்டுக் குடும்பப் பெண்களே, உங்களின் சகிப்புத்தன்மைக்கும் வாழ்க்கைக்கும் என்ன கைமாறு செய்வது?
தற்காலத்தில் இருபாலரும் வேலைக்குச் செல்கின்றனர். தனிக்குடித்தனம், ஸ்மார்ட்போனில் தினசரி வாழ்க்கை என அனைத்தும் மாறிவிட்டன. விஞ்ஞான வளர்ச்சியால் வேலைக் குறைவு, உடனடி உணவு, குறைவான குழந்தைகள், கார், சொகுசு பங்களா என வசதிகள் பெருகிவிட்டன. ஏதாவது ஒரு திருமண விழாவில் தான் சொந்தங்களின் அறிமுகமே கிடைக்கிறது.
எந்தப் பிரச்சனையும் இல்லை, கூட்டுக் குடும்பக் கஷ்டமும் இல்லை; பட்டனைத் தட்டினால் அனைத்தும் கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை. ஆனால், எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாத நிலையிலும் சிறு கருத்து வேறுபாட்டால் பிரிவும் விவாகரத்தும் ஏற்படுவது என்ன நாகரிகம்? தொட்டதற்கெல்லாம் பிரச்சனை; மாமியார், மாமனார் முதியோர் இல்லத்தில்... இது என்ன கண்ராவி வாழ்க்கை!
ஒரு ஆசை... இவர்களை ஒரு வாரம் அந்த பழைய கூட்டுக் குடும்ப வாழ்க்கையில்(Older generation lifestyle) கொண்டு போய் விட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்றால் என்ன, பாசம், பற்றுதல் என்றால் என்ன என்பதை அவர்கள் அப்போதுதான் தெரிந்து கொள்வார்கள்!