'அறிஞருக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்' என்ற கருத்துக்கேற்ப வாழ்வில் நல்லது செய்வதற்கும், தவறு செய்வதற்கும் எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும். எல்லோரும் சபலங்களையும், சோதனைகளையும், ஐயப்பாடுகளையும் சந்திக்கத்தான் செய்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில் நல்ல குணமுடையவர்கள் சுய கட்டுப்பாட்டை பின்பற்றுகின்றனர்.
சுய கட்டுப்பாடு இல்லாதபோது தவறுகளின் வழியில் செல்ல நேரிடுகிறது. அத்தவறுகள் வெற்றி பெறும் வாய்ப்பை தடுத்து விடுவதுடன் எதிர்பாராத நேரத்தில் தலை தூக்கி நம் தூக்கத்தை கெடுத்துவிடும். நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் சுயகட்டுப்பாடு என்பது நாம் செய்ய வேண்டியதை சரியாக தேர்வு செய்து அவற்றையே செய்வதும், செய்யக்கூடாததை செய்யாமல் இருப்பது. சுயகட்டுப்பாடு உள்ளபோது தேவையற்ற சினத்தால் நாம் உந்தப்படுவதில்லை. வீரியமிக்க சொற்களைத் தவறுதலாக பேசுவதில்லை. நம் மீது நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக தொடர்ந்து நடக்கின்றோம். இதனால் அவர்கள் நம்மை மதிப்பதுடன் நம்மை பின் தொடரவும் விரும்புவார்கள்.
நம் எண்ண ஓட்டங்களை மனதின் செயல்களை தவறான முடிவுகள் எடுப்பதை எல்லாம் நம்மால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். மனதின் ஆழத்தில் எழும் உணர்ச்சிகளே நம் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும். ஆம். முடியும் செய்கிறேன் என்று கூறுவதும், இல்லை, முடியாது, செய்வதில்லை என்று கூறுவதும் நாம் எடுக்கின்ற முடிவே. சுய கட்டுப்பாடு உள்ளபோது முடியும், முடியாது என்பவற்றிற்கு உள்ள வேறுபாடு தெரிந்து சரியாக முடிவுகள் எடுப்போம்.
தவறான வழிகாட்டுதலினாலோ திடீர் முடிவுகள் எடுக்க மாட்டோம். தீர்க்கமான சிந்தனையை துணையாக கொண்டே முடிவுகள் எடுக்கிறோம். இது தேவையற்ற பின் விளைவுகளில் இருந்து நம்மை காப்பதுடன் நம் வெற்றிகள் தவறான திடீர் முடிவுகளால் பாதிக்கப்படுவதும் இல்லை.
சுயகட்டுப்பாடு குணம் இருக்கும்போது நோக்கத்தை சரியாக மேலாண்மை செய்கிறோம். நேரம் போதவில்லை என்று கூறுவதை தவிர்த்து விடுகிறோம். முடிவெடுக்கும் திறன் சிறப்படைகிறது. நம் மீது நமக்கு நம்பிக்கை வளர்வதால் தேவையற்ற உந்துதல்களாலும், உணர்ச்சி களாலும் திடீர் முடிவு எடுப்பது தவிர்க்கப்படுகிறது. முடிவுகள் எடுக்கும்போது அம்முடிவுகளில் உறுதியாக இருப்பது இன்னும் அதிகரிக்கிறது.
சுய கட்டுப்பாடு இருக்கும்போது கவனம் செலுத்தும் திறன் உயர்வடைகிறது. எதை எப்படி எப்போது செய்ய வேண்டும் என்பதை தெரிந்து செயல்களை செய்வதால் அச்செயலில் முழு கவனமும் இருக்கிறது. இது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது .குழுவாக செயல்களை செய்யும்போது சுய கட்டுப்பாடு குழுவினரிடம் இணக்கத்தை ஏற்படுத்தும். வெவ்வேறு முரண்பாடான தகவல்கள் வரும்போது சுய கட்டுப்பாடு அத்தகவல்களை பொறுமையாக ஆராய்ந்து சரியான முடிவுகள் எடுக்க உதவும்.
உணர்ச்சி வசப்பட்டு மனக்கிளர்ச்சியால் செய்யும் தவறான செயல்கள் குறையும். கடும் சொற்கள் கட்டுக்குள் இருக்கும் .இக்கட்டான அபாயகரமான சூழல்களிலும் , எதிர்பாராத வகையில் தேவையற்ற செயல்கள் செய்வது தடுக்கப்படும். சவால்களில் வெற்றி பெற நாம் குறிப்பிட்ட சில திறன்களை பெற வேண்டியது கட்டாயமாகும்.
சுய கட்டுப்பாடு உள்ள மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவதையும், பள்ளிக்கு தவறாது வருவதையும், கூர்மையான புத்தியை பெற்று இருப்பதையும், வகுப்பில் ஈடுபாட்டை அதிகமாக காட்டுவதையும் அதிக மதிப்பெண்கள் பெறுவதையும் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.