உங்கள் வாழ்க்கைத் துணையின் மதிப்பை உணர்வதில் ஒளிந்திருக்கும் உளவியல் உண்மை!

Importance in life motivation
Importance in lifecredits AI Image
Published on

வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் இழக்கிறோம், எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறோம் என்பதைத் தீர்மானிப்பது நமது ஞாபகசக்தி அல்ல; அந்தப் பொருளின் மீது நாம் வைத்திருக்கும் 'மதிப்பு' தான். ஒரு சிறு பொருளாக இருந்தாலும் சரி, உணர்வுப்பூர்வமான உறவாக இருந்தாலும் சரி, நாம் எதை உயர்வாகக் கருதுகிறோமோ (Importance in life) அதை ஒருபோதும் கவனக்குறைவாகக் கையாளுவதில்லை. இதை ஒரு தொழிலதிபரின் வாழ்வியலோடு விளக்குகிறது இந்தக் கதை.

ஒரு ஊரில் மிகப் பெரிய தொழிலதிபர் இருந்தார். அவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது; அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்துவிடுவார். பேனா தேவைப்படும் போதெல்லாம் புது பேனா வாங்குவார். இந்த பழக்கத்தால், விலை மலிவான பேனாக்கள் பலவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, ஒன்று தொலைந்துபோகும் போதெல்லாம் இன்னொன்றை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

என்னதான் இருந்தாலும், அவருடைய இந்தப் பழக்கம் அவருக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது. ஒருநாள் தனது நெருங்கிய நண்பரிடம் இந்த விஷயத்தைச் சொல்லிப் புலம்பினார். உடனே அவருடைய நண்பர் அவரை ஒரு கடைக்குக் கூட்டிச்சென்று, அங்கிருந்த 22 கேரட் தங்கத்தால் ஆன விலையுயர்ந்த பேனாவை வாங்கச் சொன்னார்.

"சரி, நண்பன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்" என்று கருதி, அவரும் அந்தப் பேனாவை வாங்கிக்கொண்டார். ஆறு மாதங்கள் கழித்து அந்த நண்பரை மீண்டும் சந்தித்தபோது, நண்பர் அந்தப் பேனா மறதியைப் பற்றி விசாரித்தார். அப்போது தொழிலதிபர், தன் பாக்கெட்டில் பத்திரமாக இருந்த தங்கப் பேனாவை எடுத்துக் காட்டினார். இப்போதெல்லாம் பேனாவை மறந்து எங்கேயும் வைப்பதில்லை என்றும், தனக்கு இருந்தப் பிரச்னையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் கூறினார்.

வாழ்க்கைப் பாடம்

இதையேதான் நம்முடைய வாழ்க்கையிலும் நாம் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு பொருள் நம்மிடம் தங்குவதில்லை என்றால், அதற்கான சரியான மதிப்பை நாம் அதற்கு கொடுப்பதில்லை என்றுதான் அர்த்தம். நாம் எதை மதிப்பாக உணர்கிறோமோ, அதை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்வோம்.

  • உடல்நலம்: நம் உடலின் மதிப்பை உணர்ந்தால், நாம் உட்கொள்ளும் உணவை ஆரோக்கியமானதாகத் தேர்ந்தெடுப்போம்.

  • பணம்: பணத்தின் மதிப்பை உணர்ந்தால், அவசியமான செலவுகளை மட்டுமே செய்வோம்.

  • உறவுகள்: உறவுகளின் மதிப்பை உணர்ந்தால், அவை முறிந்துபோகும் அளவிற்கான எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்.

  • வாழ்க்கைத் துணை: துணையின் மதிப்பை உணர்ந்தால், அவர்கள் மனம் கஷ்டப்படும்படியான காரியங்களைத் தவிர்க்க முயல்வோம்.

இதையும் படியுங்கள்:
'Mirror Of The Beast' தத்துவம்: உள்மன மிருகத்தை வெல்லும் வித்தை!
Importance in life motivation

நீங்களும் உங்களிடம் பத்திரமாக இருக்கும் பொருளையும், இழந்த பொருளையும் ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள். எதற்கு மதிப்பு கொடுத்தீர்கள், எதை உதாசீனப்படுத்தினீர்கள் என்பது உங்களுக்கே புரியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com