
இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் "Hustle", "Grind", "No Days Off" போன்ற வார்த்தைகளைப் பார்க்காமல் ஒரு நாளைக் கடப்பது அரிதாகிவிட்டது. இரவும் பகலும் பார்க்காமல், ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருப்பதுதான் வெற்றிக்கான ஒரே வழி என்பது போன்ற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர்தான் 'Hustle Culture'. ஆனால், இப்படி ஓடிக்கொண்டே இருப்பது சரிதானா?
'Hustle Culture' என்றால் என்ன?
சாதனையாளர்கள், பெரிய விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், தொழில் அதிபர்கள் என நாம் இன்று வியந்து பார்க்கும் பலரும் இந்த 'Hustle Culture'-ல் ஊறிப்போனவர்கள்தான். ஒரு குறிக்கோளை நிர்ணயித்து, அதை அடைவதற்காகத் தங்கள் நேரத்தையும், உழைப்பையும் முழுமையாக அர்ப்பணிப்பதுதான் இதன் அடிப்படை. சிந்தனை, முயற்சி, உழைப்பு என எல்லாமே அந்த ஒரு இலக்கை நோக்கியே இருக்கும். இது கேட்க நன்றாக இருந்தாலும், பிரச்சனை எங்கிருந்து ஆரம்பிக்கிறது?
எப்போது மோசமாகிறது?
இந்த ஓட்டம் அர்த்தமில்லாமல் போகும்போதுதான் மோசமான ஒன்றாக மாறுகிறது. "நான் விடுமுறையே எடுக்காமல் வேலை செய்கிறேன்", "நான் தான் என் கம்பெனியில் அதிக நேரம் உழைக்கிறேன்" என நினைத்துக் கொள்வது அர்த்தமற்றவை. குடும்பத்துடன் செலவிடும் நேரத்தையும், நண்பர்களுடன் மகிழ்ந்திருக்கும் தருணங்களையும், நமக்கான ஓய்வையும் தியாகம் செய்து, எதற்காக ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடுவதுதான் ஆபத்தானது.
இந்த கலாச்சாரம், "ஓய்வெடுப்பவர்கள் சோம்பேறிகள்" என்பது போன்ற ஒரு குற்ற உணர்ச்சியை மற்றவர்களுக்கும் ஏற்படுத்துகிறது. இதனால், பலரும் நிம்மதியை இழந்து, ஒருவித மன அழுத்தத்துடனே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
உழைப்பது தவறல்ல. ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசிக்கிறோமா என்பதுதான் முக்கியம். ஒரு குறிக்கோள் இருக்கலாம், அதற்காகக் கடினமாக உழைக்கலாம். ஆனால், அந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துச் செய்ய வேண்டும். கண்மூடித்தனமாக நம் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, கடைசியில் இலக்கை அடைந்தாலும், அங்கே கொண்டாடுவதற்கு யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடக்கூடாது.
"வீட்டில் ஜெயிக்காதவன், எங்குமே ஜெயிக்க முடியாது" என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமது பயணம், நமது குடும்பம், நமது சந்தோஷம் என எல்லாவற்றையும் சமநிலையில் வைத்துக்கொண்டு, புத்திசாலித்தனமாக உழைப்பதே உண்மையான வெற்றி.
'Hustle Culture' என்பது ஒரு பழக்கம். அதைச் சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்கு சுதந்திரத்தையும், நிறைவான வாழ்க்கையையும் கொடுக்கும். தவறாகப் பயன்படுத்தினால், நம்மிடமிருந்து சந்தோஷத்தையும், உறவுகளையும் பறித்துவிடும். எனவே, அடுத்த முறை நீங்கள் கடினமாக உழைக்கும்போது, உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் - "இந்தப் பயணத்தை நான் ரசிக்கிறேனா?" என்று. பதில் 'ஆம்' என்றால், நீங்கள் சரியான பாதையில்தான் பயணிக்கிறீர்கள் என அர்த்தம்.