முன்னோர்கள் சொன்னது மூடநம்பிக்கை அல்ல! அதன் பின்னால் ஒளிந்துள்ள பிரம்மாண்ட அறிவியல்!

Kolam with poosani poo
Ancestors knowledge | Kolam with poosani pooCredits AI image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

சின்ன வயதில், கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்தே 'மார்கழி எப்போது வரும்?' என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிடும். பொழியும் பனி, இதமான குளிர், அதிகாலை நாலு மணியிலிருந்தே சிவன் கோயிலில் ஸ்பீக்கர் கட்டிப் போடப்படும் பக்திப் பாடல்கள் - விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில், விழித்தும் விழிக்காமலும் போர்வையை நன்கு இழுத்துப் போர்த்தியபடி போட்ட குட்டித் தூக்கத்திற்கு இணையான ஒன்று வாழ்க்கையில் வேறெதுவுமே இல்லை! அந்த இனிய தருணங்களை எப்போது அசைபோட்டாலும், அடிமனதிலிருந்தே ஆனந்தம் பொங்கும்.

மார்கழி காலைகளில் அந்தச் சிறுபெண் கொண்டு வந்து வாசலில் போட்ட ஐந்தாறு பறங்கி மொட்டுக்களைச் சிறு பானைத் தண்ணீரில் எடுத்துப் போட்டுவிடுவோம். யார் அந்த மொட்டுக்களை முதலில் பார்க்கிறார்களோ, அவர்கள் அவற்றை எடுத்துப் பானை நீரில் போட்டுவிடுவார்கள். அந்தப் பெண் வீட்டின் கூரையின் மீது படர்ந்து கிடக்கும் பறங்கியில் பூக்கும் பூக்கள் அவை என்றும், அவற்றையே அந்தப் பெண் கொண்டு வந்து போடுவதாகவும் தெரிய வந்தது.

அதிகாலையில் அம்மா எழுந்து, சாணம் தெளித்து, மாக்கோலம் (கல் மாவு கலப்படமில்லாத அரிசி மாவில்) போட்டு, அந்தக் கோலத்தின் நடுவே பானையில் மலர்ந்து கிடக்கும் மஞ்சள் வண்ணப் பறங்கிப் பூக்களை வைப்பார்கள். அந்த மலர்களால் கோலம் அழகு பெற்றதா? அல்லது கோலத்தால் அந்த மலர்கள் அழகு பெற்றனவா? என்று மனது பட்டிமன்றமே நடத்தும்! இறுதியாக, 'இரண்டாலும் வீடு அழகு பெற்றது' என்று இதயம் தீர்ப்புச் சொல்லும்.

கொஞ்சம் சிந்திக்கும் வயது வந்ததும், 'நன்றாகக் காய்க்க வேண்டிய பூக்களை இப்படி வீணாக்குகிறார்களே' என்ற எண்ணம் வந்து அம்மாவிடம் கேட்டபோது, 'அவை பொய்ப் பூக்கள் என்றும், காயாக மாறாது' என்றும் தெரிவித்தார்கள். அப்புறம்தான் அறிவு சொல்லிற்று - பறங்கியில் மட்டும் பொய்ப் பூக்கள் இல்லை, மாந்தரிலும் உண்டென்று! என்னுடைய நெருங்கிய உறவுப் பெண் ஒருவர் கடைசி வரை தனியாக இருந்து இறந்து போனதன் காரணம் அப்போது விளங்கிற்று.

'பூக்களிலே நானுமொரு

பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன் பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பொன்விரல்கள் தீண்டலையே பொன்விரல்கள் தீண்டலையே

பூமாலை ஆகலையே!'

என்ற பாடலின் பொருள் மனதை அழுத்தியது. அந்த உறவுக்காரப் பெண்ணுக்காக உள்ளம் அழுதது.

சரி, இவ்வளவு பூக்கள் இருக்கையில் பறங்கிப் பூவை மட்டும் தேர்வு செய்ததன் நோக்கம் என்ன? என்ற நீண்ட நாள் கேள்விக்குத் தாமதமாகவே விடை கிடைத்தது. பறங்கிப் பூவை நுகரும் பெண்களின் உள் உறுப்புகள், குறிப்பாகக் கருப்பையைச் சார்ந்த உறுப்புகள் சீரடையுமாம்; அவற்றின் ஆரோக்கியம் அதிகரிக்குமாம். குளிர்காலத்தில் கரு தங்கினால், கோடைக்காலம் முடிந்த பின்னரே பிரசவம் நிகழும். அது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும்.

நமது முன்னோர்களை நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. அரச மரக் காற்று உள் அவயவங்களின் ஆற்றலைப் பெருக்குவது போல்தான் இதுவுமாம்! இதையெல்லாம் எப்படித் கண்டுபிடித்து, உலகுக்கு உணர்த்தி, நடைமுறைப்படுத்தினார்கள் என்று எண்ணுகையில் ஆச்சரியமே அலைமோதுகிறது.

இது இப்படியென்றால், இன்னும் ஆச்சரியப்படுத்த எத்தனையோ விஷயங்களை விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் ஒன்றுதான் மேலாடையின்றிச் சுற்றும் நம் நடுத்தர வயது ஆண் வர்க்கம். இப்பொழுதெல்லாம் ‘வைட்டமின்-டி’ (Vitamin-D) பற்றாக்குறை பலருக்கும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். வெப்பமண்டல நாடான நம் நாட்டில், சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின்-டி-க்குப் பஞ்சம் இல்லையென்றாலும், அது நம் மக்களின் உடம்பில் ஏறாததற்குப் பல காரணங்கள் உண்டு. வெயில் என்றாலே அனைவரும் பயப்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால், பெரும்பாலான நமது விவசாயத் தோழர்களும் கிராமவாசிகளும் நடுத்தர வயதை நெருங்கிவிட்டாலே அரையாடையுடன், அதாவது இடுப்பில் வேட்டியும் தோளில் துண்டுடன் மட்டுமே உலா வருகிறார்கள். வெயிலானது வயிற்றுப் பகுதியிலும் தொப்புளிலும் பட்டால்தான் அதனை உடல் நன்கு கிரகித்துக் கொள்ளுமாம்.

இதையும் படியுங்கள்:
90's vs 2K கிட்ஸ்: பட்டனைத் தட்டினால் சாப்பாடு, ஆனால் நிம்மதி எங்கே? ஒரு பகீர் ஒப்பீடு!
Kolam with poosani poo

அதனால்தான் அவர்கள் அவ்வாறு ஆடை உடுத்துகிறார்கள். அவ்வாறு உடுத்திக்கொண்டு நடமாடிய வரையிலும் அவர்களுக்கு வைட்டமின் பற்றாக்குறையெல்லாம் வந்ததில்லை. இதையெல்லாம் அவர்கள் எங்கிருந்து கற்றார்கள்?

இதோடு மட்டுமா? 'அனுபவம் என்பது ஒரு நல்ல சீப்பு போன்றது; ஆனால், அது நம் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்த பின்னரே நமக்குக் கிடைக்கிறது!' என்பார்கள். அது அவ்வாறு பயன்படாத அனுபவமாகப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், 'இளமையிற் கல்' என்று அழுத்திச் சொன்னார்கள் ஆன்ற நம் முதியோர். பிறருடைய அனுபவங்களையும் கல்வியின் மூலம் நாம் அறிந்து கொண்டால், அதையும் இளம் வயதிலேயே தெரிந்து கொண்டால், நம் வாழ்க்கை முழுமைக்கும் அது பயன்படும் அல்லவா? 'இளமையிற் கல்' என்ற இனிய பதத்தின் இமாலய பலம் இப்போதுதானே புரிகிறது!

நம் முன்னோர்கள் லேசுப்பட்டவர்கள் அல்லர்; எல்லாவற்றையும் முழுதாய் அறிந்தவர்கள்தான்! (Ancestors knowledge) அறிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் சந்ததியினராகிய நாமும் மகிழ்ந்து வாழ வழிகளையும் சொல்லிவிட்டுத்தான் சென்றுள்ளார்கள்!

logo
Kalki Online
kalkionline.com