

வாழ்க்கையில் கஷ்டங்களும், போராட்டங்களும் அனுபவிக்காத மனிதர்கள் ஒருவரும் இல்லை. இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் புரிந்துவிட்டால், வாழ்க்கை மிக எளிமையாகவும் இனிதாகவும் அமையும் என்பதை மனதில் புரிந்து கொண்டு செயலாற்ற முனையுங்கள்.
வாழ்க்கையில் போராடும் குணமும் மனமும் இருந்தால் மிருகத்தின் பலம் கிடைக்கும். அப்போது நமக்குள் ஏற்ப்படும் நம்பிக்கையின் கரங்கள், நமக்கு உண்டாகும் கஷ்டங்களையும் கவலைகளையும் வென்றெடுக்கும் சக்தியோடு வலுப்பெற்று, தீவினை அகற்றி, நல்வினைக்கு இட்டுச் செல்லும்.
வாழ்க்கையை வென்றெடுக்க ஆயிரம் வழிகள் இருக்கு. ஆனால் அதற்குள்தான் ஆயிரம் வலிகளும் இருக்கு. வலிகளை கடந்து வலிமை கொண்ட வாழ்க்கையை வென்று காட்ட முயற்சி செய்யும் மனமே வாழ்க்கையில் பல மைல் கற்களை தாண்டி வெற்றி வாகை சூடுகிறது.
வாழ்க்கையில் நமக்கு ஏற்றாற்போல் எல்லாமே எளிதாக அமைந்து விடும் என்பது கனவு. அதாவது இன்னல்களும், இடையூறுகளும் வந்து கொண்டுதான் இருக்கும். அந்த காரணிகள் யாவும் நம் வளர்ச்சிக்கு இறைவன் கொடுத்த வாய்ப்பு என்று நேர்மறை எண்ணங்களாக உள்வாங்கிக் கொண்டு, எதிர்நீச்சல் போடுங்கள்.
வாழ்க்கையில் உங்கள் கனவுக் கோட்டைகள், இலட்சியங்கள் தகர்க்கப்படும் போது, உங்களுடைய, நம்பிக்கை நாளங்களை வலுப்பெறச் செய்து, வீழ்ந்து கிடக்கும் இடிபாடுகளுக்கிடையே தேடிப் பாருங்கள். புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்.
மன்னன் என்றால் எதோ மக்களின் நலன் மட்டுமே என்று நினைத்து விட்டால் அவன் வீழ்ந்து போவான். நான்கு புறமும் வரும் தாக்குதல்களை சமாளிக்கும் திறமை கொண்டு எதிர்த்து களமாடி வென்றெடுக்க வேண்டும். அவன்தான் மன்னன்.
அதேபோல் வீரனுக்கு அழகு, போர்முனையில், கூர் முனை யுக்தியைக் கையாண்டு, ஆற்றல் புரிந்து வெற்றி பெறவேண்டும். புறமுதுகிட்டு ஓடிவந்தால், அது வீரனுக்கு அழகல்ல. வாழ்க்கையில் நாம் அனைவரும் மன்னனாகவோ அல்லது வீரனாகவோ வாழ்ந்து காட்டுவோம்.
வாழ்க்கைப் பயணம் என்பது ஓட்டப் பந்தயம் அல்ல. மின்னல் வேகத்தில் ஓடி, வெற்றிக்கொடி நாட்டுவதற்கு. பல சோதனைகள் கொண்ட வளைவுகளை கடந்து பயணிக்க வேண்டும். நாம் அடையும் ஒவ்வொரு மைல்களுக்கும் பல தடைகளை கடக்க வேண்டியது இருக்கும். அங்கே ஓட்டப்பந்தயத்தில் வேகம் வேண்டும். இங்கே, வாழ்க்கையில் விவேகம் வேண்டும்.
வாழ்க்கையில் உங்களுக்கு எது தேவை இல்லையோ அதை தவிர்க்க பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று. தேவை இல்லாத எதையும் இழுத்து போட்டுக்கொண்டு, அருமையான கால, நேரங்களை இழந்துவிடாதீர்கள். அதற்கு பதிலாக புதியது பலவற்றை சிந்திக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் புதியன புகுதலும், பழையன கழிதலும் இயற்கை நியதி. புதிய சிந்தனைகள் வாழ்க்கைக்கு உந்துசக்தியாகவோ அல்லது உயர்வுக்கான ஏணிப்படிகளாகவோ அமையும் என்பதை நினைத்துக் கொண்டு, மனதில் புதிய கருத்து மேகங்களை உருவாக்க முயலுங்கள். அதனை தங்கள் வளர்ச்சிக்கான மழையாக மாற்றி, ஆர்ப்பரிக்கும் நதியைப்போல், வார்த்தெடுக்கும் சாதனைகளாக மாற்றி முன்னேறுங்கள்.
வாழ்க்கையில் மீன்களைப் போன்று எதிர்நீச்சல் போட்டு, ஏற்றம் காணுங்கள். காகம் போன்று மனிதம் சூடி வாழ்ந்து காட்டுங்கள்!