
நம்முடைய வாழ்க்கை நிற்காமல் ஓடவேண்டுமென்றால் அதற்கு நம்பிக்கை மிக மிக அவசியம். கொஞ்சம் கூட நம்பிக்கை குறைந்தாலே போதும். வாழ்க்கை என்கிற வண்டி நின்றுவிடும். அதைப்போல சந்தேகம் என்கிற பேயை எக்காரணத்தை கொண்டும் அண்ட விடக்கூடாது. நமபிக்கையோடு இருந்தால் அமைதியான வாழ்க்கையை வாழலாம் மாறாக நம்பாமல் சந்தேகபட்டால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த சந்தேகத்தால் குடும்ப அளவிலும் தனிபட்ட முறையிலும் என்னென்ன குழப்பங்களும் பிரச்னைகளும் வரும் என்பதை பார்க்கலாம்.
குடும்பத்தில் உங்களுடைய சந்தேகம் எப்படி ஆட்டி வைக்கும்?
சந்தேகம் வந்துவிட்டால் கூடவே வியாதியையும் நம்மோடு நாம் சேர்த்து எடுத்து கொண்டுவிட்டதாக அர்த்தம். குடும்பத்திலுள்ள அனைவரின் நிம்மதியும் போய்விடும். உங்களுடைய குழந்தையோ அல்லது மகளோ அல்லது மனைவியோ அல்லது கணவரோ ஒரு விஷயத்தை உங்களிடம் கூறும்போது நீங்கள் அவர்களை சந்தேகத்தோடு எப்போதுமே அணுகினால் உங்களுடைய மனநலமும் அவர்களுடைய மனநலமும் அதிக அளவில் பாதிக்கபடும். அது மட்டுமில்லாமல் வீட்டிலுள்ள மற்றவர்களின் நிம்மதியும் போய்விடும். வேண்டாத சந்தேகங்களை மனதில் நுழைய விடும்போது உங்களைவிட எதிரிலிருப்பவர்களுக்குதான் பாதிப்பு அதிகமாகும்.
உங்களுடைய மனைவியோ கணவரோ அல்லது குழந்தையையோ அவர்கள் செய்யாத தவறை நீங்கள் செய்திருப்பார்களோ என சந்தேகித்து அடிக்கடி சித்ரவதை செய்தீர்களே ஆனால் எதிர்பக்கம் இருப்பவர்கள் உயிரை கூட மாய்த்து கொள்ளலாம் அல்லது வீட்டை விட்டு வெளியேறி விடலாம் அல்லது இன்னும் சிலர் ஆத்திரமடைந்து செய்யாத தவறுக்கு ஏன் இப்படி சித்ரவதையை அனுபவிக்க வேண்டும் என்று கருதி அந்த தவறையே செய்யத் தொடங்கி விடுவார்கள்.
இந்த சந்தேக நோயானது எப்படி என்றால் நம்மையும் சாகடித்து அடுத்தவர்களையும் சாகடித்து விடும் மேலும் வாழ்க்கையையே சீரழித்து விடும்.
இந்த நம்பிக்கை இல்லாத சந்தேகம் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா??
உங்கள் வாழ்க்கையில் மூன்று மிக முக்கியமான விஷயங்களுக்கு நம்பிக்கை தான் மிக மிக அவசியம்....பார்க்கலாமா...
1.உறங்குவதே விழிப்பதற்காகத்தான்: நாம் உறங்கினால்தானே விழித்துகொள்ள முடியும். நாம் நன்றாக உறங்கினால்தானே நம்முடைய மூளையும் மனமும் ஓய்வு பெற்று மறுநாள் புத்துணர்ச்சியோடு விழித்து கொள்ளும். உதாரணத்திற்கு ஒரு நாள் இரவு ஏதோ ஒரு காரணமாக நீங்கள் தூங்கவே இல்லை என்று வைத்துக்கொள்வோம்.
காலையில் உங்களுக்கு யாரோ ஃபோன் செய்து எழுந்து விட்டீர்களா என்று கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள், ஆமாம், ராத்திரி முழுக்க தூங்கவில்லை, தூங்கினால்தானே விழித்து கொள்வதற்கு என்றுதானே பதில் கூறுவீர்கள். மேலும் மறுநாள் முழுவதும் உடம்பு சுறுசுறுப்பில்லாமலும் mind சரியாக வேலை செய்யாமலும் இருக்கும். அப்படியென்றால் நீங்கள் தூங்கினால் மறுநாள் விழித்து கொள்வேனா இல்லையா என்று சந்தேகபட்டு கொண்டு தூங்காமல் இருந்தீர்களே ஆனால் உங்கள் நிலைமை என்ன ஆகும்? நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தூங்கினால் மட்டுமே விழித்துகொள்ள முடியும்.
2.தோல்வியே வெற்றிக்கு வழி: சிலர் ஒரு தரவை தோல்வி அடைந்துவிட்டால் மறுபடியும் முடியுமோ முடியாதோ, இந்த தரவையும் தோல்வி அடைந்துவிட்டால் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்? என்று தனக்குத்தானே சந்தேகத்தை வளர்த்து கொண்டு மேலே ஏறுவதற்கான முயற்சியை செய்யவே மாட்டார்கள். உங்களின் மீது நீங்களே சந்தேகத்தை வளர்த்து கொண்டால் ஒருபோதும் வெற்றி கிடைக்காது.
தோல்வியை சந்தித்தால்தான் எங்கு தவறு என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து திருத்தி கொள்ள முடியும். நம்பினார் கெடுவதில்லை, இது நான்குமறை தீர்ப்பு, ஆகவே சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் நம்பிக்கையோடு போராடுங்கள். வெற்றி நிச்சயம்.
3.கீழே விழுவது எழுச்சி பெறுவதற்காகத்தான்: நாம் சாலையில் நடந்து செல்லும்போது சில நேரங்களில் கால் இடறி கீழே விழுவது சகஜம்தான். விழுந்த உடனேயே நம்மை நாமே சுதாகரித்துகொண்டு எழுந்து விடுவோம். இதைப்போல வாழ்க்கையிலும் தொழிலிலோ அல்லது வியாபரத்திலோ அல்லது படிக்கும் பருவத்திலோ நாம் வீழ்ச்சி அடைவதும் சகஜம் தான். அதற்காக சாலையில் நடக்கும்போது ஒரு வேளை கீழே விழுந்துவிட்டால்? என்று அவநம்பிக்கையோடு சந்தேகத்தோடு இருந்தால் முடியுமா?? அதைப்போல மற்ற விஷயங்களிலும் நாம் செய்வது சரிதான் என்று சந்தேகமில்லாமல் நம்பிக்கையோடு செல்லவேண்டும்.
அப்படியே ஒருவேளை வீழ்ச்சி அடைந்துவிட்டாலும் மறுபடியும் நேர்ந்துவிடுமோ என்ற சந்தேகத்தோடு இருக்காமல் இந்த தரவை வீழ்ச்சி அடையமாட்டேன் என்ற நம்பிக்கையோடு உறுதியாக இருக்க வேண்டும். வீழ்ச்சி அடைந்தால் தான் எட்டி பார்க்க முடியாத உயரத்திற்கு செல்ல முடியும். வீழ்சசி அடையும் போதுதான் அதிக கவனத்தோடும் புதிய புதிய திட்டங்களை தீட்டியும் முன்னேறுவதற்கான எண்ணமும் உங்களுக்குள் உருவாகும்.