
பெர்ட்ரண்ட் ரஸல், பிரிட்டிஷ் நாட்டின் தத்துவவியலாளர், கணிதவியலாளர், சமூக சீர்திருத்தவாதி. கல்வியாளர், அரசியல், பொருளாதார மேதை, எழுத்தாளர் என்று தனது பன்முக ஆளுமையால் 20-ம் நூற்றாண்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர். அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வாக்கியங்கள் இன்றளவும் தொடர்ந்து மேற்கோள்காட்டப் படுகின்றன.
அவர் எழுதிய ‘மேலைநாட்டுத் தத்துவ வரலாறு’ தத்துவ மாணவர்களின் முதன்மையான பாடநூல்களில் ஒன்று. இலக்கிய துறையில் நோபல் பரிசு பெற்றவர். அவரின் ஆக்கப்பூர்வமான பொன்மொழிகளில் சில இந்த பதிவில் பார்ப்போம்
மகிழ்ச்சிக்கான திறவுகோல் ஒவ்வொரு நாளும் ஒரு விரும்பத்தகாத யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது. மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் ஒரு போதும் வீணான நேரம் கிடையாது.
மனிதர்கள் பிறக்கும்போது எதுவும் தெரியாதவர் களாகவே பிறக்கிறார்கள். ஆனால் முட்டாள்களாக பிறப்பதில்லை. அவர்களை முட்டாள்களாக மாற்றுவது அவர்கள் பெற்ற கல்வியே.
அன்பினால் ஈர்க்கப்பட்டு, அறிவால் வழி நடத்துவதுதான் சிறந்த வாழ்க்கை. பயம் என்பது மூடநம்பிக்கை. பயத்தை வெல்வதே ஞானத்தின் ஆரம்பம்.
தீய எண்ணங்களுக்கு இடையில்தான் அவதூறு பிறக்கிறது. சான்றுகள் இன்றியே அவதூறு நம்பப்படுகிறது.
மனச்சாட்சி என்பது பல உணர்ச்சிகளைக் குறிக்கும். அதைச் செய்தால் கண்டுபிடிக்கப்படும் என்ற பயம் தரும் உணர்ச்சியும் அதில் ஒன்று.
பொழுது போக்கக்கூடிய எதுவுமே பூர்ண மகிழ்ச்சியை அளிக்க முடியாது. அது ஒரு சமயத்தில் ஒரு விதமான விடுதலையைத் தருகிறது. அதன் மூலம் நன்மை தீமையை மறந்துவிடுகிறோம்.
அன்பை விட அதிகாரத்தையும், பகட்டையும் விரும்புகிறவர்கள் அதிகாரப் பித்தர்கள்.பொது ஜன அபிப்பிராயம் பல நேரங்களில் மற்றவர்களை ஒடுக்கி அவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அன்பும், அறிவும் கை கோர்த்து ஆனந்தத் தாண்டவம் ஆடும் போதுதான் நாகரீகம் நிலை பெற்றிருக்க முடியும்.
தாம் நேசிக்கபடவில்லை என்று நினைக்கின்றவர்கள் பொறாமையாளர்களாக மாறுகிறார்கள்.
புத்திசாலித்தனமான மனிதனைவிட முட்டாள் மனிதன் நேர்மையானவனாக இருப்பான் என்று நமது பெரிய ஜனநாயக நாடுகள் இன்னும் நினைக்கின்றன, மேலும் நமது அரசியல்வாதிகள் இந்த தப்பெண்ணத்தை சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களை விட முட்டாள்தனமாக பாசாங்கு செய்கிறார்கள்.
பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் நவீன உலகில் முட்டாள்கள் சஞ்சலக்காரர்களாகவும், புத்திசாலிகள் சந்தேகம் நிறைந்தவர்களாகவும் இருப்பதுதான்.
மூன்று உணர்ச்சிகள், எளிமையானவை ஆனால் மிகவும் வலிமையானவை என் வாழ்க்கையை நிர்வகித்தன: அன்பிற்கான ஏக்கம், அறிவின் தேடல் மற்றும் மனிதகுலத்தின் துன்பங்களுக்கு தாங்க முடியாத பரிதாபம்.
உன் இன்றைய கருத்துக்கள் பைத்தியக்காரத்தனமாகத் தான் தோன்றும். ஆனாலும், பயப்படாதே! எல்லோரும் ஒப்புக்கொண்ட இன்றைய கருத்துக்கள், ஒரு காலத்தில் பைத்தியக்காரத்தனமாகத்தான் இருந்தன.
ஒன்றையும் முழுமையாக நம்பாதே. உண்மையை மறைத்துக் காரியங்கள் செய்யத்துணியாதே! ஒரு போதும் உன்னால் உண்மையை மறைக்க முடியாது. முற்போக்கான எண்ணங்களை வளரவிடு, என்றாவது ஒரு நாள் வெற்றி காண்பது நிச்சயம். உன் கனவுகளில் நல்ல அம்சங்கள் இருந்தால் அது நிச்சயம் பலிக்கும்.
எதிர்ப்புகள் எந்த வகையானாலும் சரி, அறிவுள்ள விவாதத்தின் பிறகே முடிவுக்கு வா, அதிகாரத்தைக் காண்பிக்காதே. அதிகாரம் நிலையானது அல்ல! பிறருடைய அதிகாரத்திற்கு இடம் கொடுக்காதே. அதிகாரத்திற்கு எதிர் அதிகாரம் உண்டு, இல்லையா?
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதே! உண்மையை பேசு, உண்மையாக நட ! உண்மையாக நடப்பது உனக்குப் பல கஷ்டங்களைத் தந்தாலும், உண்மை பேசாவிட்டால், இதை விட பலமடங்கு அதிகமான கஷ்டங்களை நீ அனுபவிக்க நேரிடும். 'மகிழ்ச்சியாக வாழ்கிறான்...' என்று பிறர்,வாழ்வை நினைத்துப் பொறாமைப்படாதே.