

நம்பிக்கை கொள்பவனுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். வாழ்க்கையில் பெரிய சாதனைகளை புரிந்து தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புபவர்கள் பல நல்ல குணங்களையும் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
"என்னால் முடியும்" என்று முழு நம்பிக்கையோடு செயல்படுபவன் நீர்வீழ்ச்சியின் சுறுசுறுப்போடு செயல்பட்டு பல அற்புதங்களை நிகழ்த்துவான். ஹெரால்ட் வில்சன் 10 வயது சிறுவனாக இருந்தபோது அடிக்கடி நான் இங்கிலாந்து நாட்டின் பிரதம மந்திரியாக வரப்போகிறேன் என்று கூறி வந்தான். அவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட உறவினர்கள், பைத்தியக்காரனின் பேச்சு என்று சொல்லி அவனை ஏளனம் செய்தார்கள்.
மேலும் பிரதம மந்திரியின் அரசாங்க இல்லத்தின் முன்பாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டு, நான் இந்த இல்லத்தில் ஒரு நாள் தங்கப்போகிறேன் என சிறு வயதிலேயே கூறி வந்திருக்கிறான் .ஹெரால்ட் வில்சன் தன்நாட்டின் பிரதம மந்திரியாக தன்னை உயர்த்திக்கொள்ள முடியும் என முழுமையாக நம்பினார்.
தன்னுடைய லட்சியத்திற்காக அயராது உழைத்த ஹெரால்ட் வில்சன் ஒருநாள் தன்னை இங்கிலாந்து நாட்டின் பிரதம மந்திரியாக உயர்த்திக்கொண்டு பேரும் புகழும் பெற்று விளங்கினார்.
கட்டாய வெற்றியை நம்பிக்கை கலந்த உழைப்பு பெற்று தரும் என்பது இயற்கையான வழி.அசையாத நம்பிக்கையுடன் கடின உழைப்பு சேரும்போது மாபெரும் சாதனை உருவாகிறது. நம்பிக்கை ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்கு தேவையான ஊக்கத்தையும் உந்துதலையும் கொடுக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படுபவன் தன்னுடன் இருக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்தி அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் மாபெரும் சக்தி வாய்ந்தவனாக விளங்குவான்.
நம்பிக்கை கொண்டவன் ஒரு உயர்ந்த மலையின் சிகரத்தை போன்று காட்சி தருவான். ஏனெனில் புயல், மலை சிகரத்தை அடிக்கடி வெறிபிடித்த அரக்கர்களை போன்று தாக்குகின்றன. இடியும் மின்னலும் கைகோர்த்துக்கொண்டு மழையும் பெய்து கோர தாண்டவம் ஆடுகின்றன. ஆனால் மலைச்சிகரமோ இத்தனையையும் சகித்துக்கொண்டு புன்னகை மாறாமல் பொறுமையாகவும் கம்பீரமாகவும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
நம்பிக்கை மிகுந்தவனுடைய அவமானங்களும், சோதனைகளும், ஏமாற்றங்களும் ,எதிர்ப்புகளும் தொடர்ந்து துன்புறுத்தி வந்தாலும் மலை சிகரத்தைபோல அனைத்தையும் பொறுத்துக் கொண்டு லட்சியத்தை உறுதியாக கொண்டிருந்தால் வீறு நடை போட்டு முன்னேறி கொண்டிருப்பான்.
விலைமதிக்க முடியாத மாபெரும் சொத்து நம்பிக்கையாகும். நம்பிக்கையுடன் செயல்படுபவர்களிடம் பொருளும் பதவியும் புகழும் தஞ்சமடையும். ஆகவே, நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்று வாழ்வில் உயர்வடைவோம்.