

சிலர் எப்போதும் எல்லோரிடமும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அவருக்கு எந்த ஒரு பிரச்னையும் இருக்காதோ என்றுகூட நமக்குத் தோன்றும். இது உண்மையா என்றால் இல்லை.
இந்த உலகில் பிறந்த அனைவருமே தினம் தினம் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சிலர் பிரச்னைகளை எளிதில் கையாளத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். சிலர் சாதாரண பிரச்னைகளை ஊதிப் பெரிதாக்கிவிடுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலரோ அது வந்தால் வரட்டும் நமக்கென்ன என்பதுபோல இருப்பார்கள். பிரச்னைகளில் பாதி நாமாகவே தேடிக்கொள்வது. மீதி அதுவாகவே வருவது என்பதே நிதர்சனம்.
உண்மையில் சொல்லப்போனால் நமது பிரச்னைகளை நாம்தான் வரவேற்கிறோம் என்பதே உண்மை. யாராவது நம்மிடம் ஒரு கருத்தைச் சொன்னாலோ அல்லது வேறொருவரைப் பற்றிய விஷயத்தைக் கூறினாலோ அதை நாம் அமைதியாக கேட்டுக்கொள்ள வேண்டும். அந்த விஷயத்தில் நாம் நமது கருத்தை மனதுள் வைத்து யோசிக்க வேண்டும். வெளியே கூறவே கூடாது. அப்படிக் கூறினால் அதைக் கேட்பவர் தன் விருப்பம்போல அதை மாற்றி பிறரிடம் கூற வாய்ப்புகள் அதிகம். இதனால் நமக்கு புதிய பிரச்னைகள் முளைக்க வாய்ப்புள்ளது.
எப்போதும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பவர்களை கவனித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். அவர் எதிர்மறையாக எந்த கருத்தையும் கூறாதவராக இருப்பார். ‘யார் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன?’ என்பதே அவருடைய மனநிலையாக இருக்கும். யாராவது அவரிடம் ஒரு விஷயத்தைக் கூறினால் ஆமாங்க நீங்க சொல்றதுதான் சரி என்பதுபோல பதிலுரைப்பார். அப்படிப் பேசுபவர்களிடம் நீங்க சொல்றது தப்பு. அவர் சொல்றதுதான் சரி என்று கூறிவிட்டால் பிரச்னை உங்களை நோக்கி வரப்போகிறது என்பது நிச்சயம்.
சிலர் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அவர்கள் கேட்காமலேயே விழுந்து விழுந்து உதவுபவராக இருப்பார். அத்தகையவர்கள் செய்யும் பெரிய உதவிக்குக் கூட அங்கீகாரம் கிடைக்காது. பிற்காலத்தில் நான் அவருக்கு இவ்வளவு உதவி செய்தேன். அவ்வளவு உதவி செய்தேன். அவர் அதை நினைத்துக் கூட பார்க்காமல் என்னை உதாசீனப்படுத்துகிறார் என்றெல்லாம் உதவியவர்கள் மனதுள் வருந்தி பிறரிடம் கூறிப் புலம்புவதை நாம் பார்க்கிறோம்.
கேட்காமல் செய்யும் உதவிக்கு மதிப்பிருக்காது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். “நான் உனக்கு இத்தனை உதவிகள் செய்தேன் நீ அதை நினைத்துப் பார்க்கவில்லை” என்று உதவியைப் பெற்றவரிடம் கூறினால் அதற்கு அவர் “நான் உன்னிடம் உதவி கேட்டு வந்தேனா? நீயாகத்தானே செய்தாய்” என்று ஒன்றை வரியில் பதில்கூறி உங்களை உதாசீனப்படுத்திவிட்டு நகர்ந்து விடுவார்கள். இதுவும் நாமாக தேடிக் கொள்ளும் பிரச்னைதானே. கேட்காமல் யாருக்கும் எந்த ஒரு உதவியையும் செய்யாதீர்கள். அப்படிக் கேட்டாலும் அந்த உதவியை உடனடியாகச் செய்யாதீர்கள். அப்போதுதான் உதவி என்பதன் உண்மையான அர்த்தம் உதவி கேட்பவருக்குப் புரியும்.
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்ப்பு என்பதன் உண்மையான பொருள் ஏமாற்றம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்து ஏமாறுவதை விட எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்வது நல்லதல்லவா? தற்கால வேகமான வாழ்க்கையில் யாரைப் பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை என்பதே உண்மை. எல்லோருமே தங்கள் சுயமுன்னேற்றம் பற்றியே சிந்திப்பவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நீங்கள்தான் தீர்த்தாக வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிரச்னையைத் தீர்க்க யாரும் ஓடிவரமாட்டார்கள் என்பதை இக்கணமே உணர்ந்து கொள்ளுங்கள். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கும் காலம் இது. அப்படியிருக்க உங்கள் பிரச்னையைத் தீர்க்க யார் முன் வருவார்?
யாராவது உங்களை நாடிவந்து ஏதாவது ஒரு பிரச்னையைப் பற்றிக் கூறினால் புன்னகைத்தபடி அதைக் கேட்டுக்கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதைப்போல காட்டிக்கொள்ளாதீர்கள். அதற்கான கருத்தையோ தீர்வையோ சொல்லாதீர்கள்.