வளர்ச்சியும் போராட்டமும் இயல்பிலேயே பின்னிப் பிணைந்தவையாகும். ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. சவால்களும் தடைகளும் இல்லையென்றால் நாம் சொகுசான விஷயங்களை நோக்கிச்சென்று, எதையுமே முயற்சிக்காமல் அப்படியே இருந்து விடுவோம். சவால்களை சமாளித்து, நாம் பயப்படும் விஷயங்களை முயற்சிப்பது மூலமாகவே வாழ்க்கையில் வளர்ச்சி என்பது ஏற்படுகிறது.
கடினமான விஷயங்களே நம் வாழ்வில் மாற்றத்திற்கான உந்துகோளாக செயல்படுகின்றன. நம்முடைய அதிகபட்ச செயல்திறன் என்ன என்பதைக் கண்டறிய நிச்சயம் நாம் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும். இத்தகைய கடினமான பயணத்தில் நம் மன உறுதி, விடாமுயற்சி அனைத்தும் சோதிக்கப்படுகின்றன. துன்பங்களை எதிர்கொள்ளும்போது புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அறிவைப் பெறவும், மாறுபட்ட வாழ்க்கை சூழ்நிலையில் எப்படி வாழ வேண்டும் எனவும் நாம் கற்றுக் கொள்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு போராட்டமும் ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை நமக்கு கற்றுத் தருகிறது.
மேலும், இத்தகைய போராட்டம் நம்முடைய Comfort Zone-ஐ விட்டு வெளியேற உதவுகிறது. முற்றிலும் நமக்குத் தெரியாத புதிய விஷயங்களை முயற்சிப்பது மூலமாக, நம்முடைய வித்தியாசமான திறன்களை நாம் கண்டறியலாம். இத்தகைய அசௌகரிய சூழ்நிலை, நம் தனிப்பட்ட வளர்ச்சிக்கு பெரிதளவில் உதவுகிறது. இதுபோன்ற தருணங்களில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும், வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவும், புதிய வீசியங்களை முயற்சி செய்யவும் கற்றுக் கொள்கிறோம்.
இறுதியில் இத்தகைய போராட்டங்கள் நமக்கு வெற்றியைப் பெற்றுத்தர உதவுகின்றன. நாம் இதுவரை கடந்து வந்த தடைகள் அனைத்தும் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கின்றன. இதன் மூலமாக இனி வரும் காலங்களில் தடைகளை எதிர்கொள்வதற்கான தைரியம் நமக்கு கிடைக்கிறது. இந்த தைரியம் வந்துவிட்டாலே வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற மனநிலை நமக்கு ஏற்பட்டு விடுவதால், போராட்டங்கள் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன.
எனவே வெற்றிக்கான பாதையில் போராட்டம் என்பது மிகவும் அவசியமானது. போராட்டம் இல்லாமல் சாதனைகள் கிடையாது என்பதைப் புரிந்துகொண்டு, போராட்டங்களைத் தவிர்க்காமல் அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேற முயலுங்கள்.