
ஒரு இளைஞன் நன்றாக படித்துவிட்டு வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறான். இதைப் பார்த்துவிட்டு அவரின் தந்தை அவனை அழைத்து "என்ன பிரச்னை ஏன் நீ வேலைக்கு செல்லவில்லை?" என்று கேட்க..
அவன் சொல்கிறான் "என் நண்பர்களின் பெற்றோர் நல்ல வசதியானவர்கள் என்பதால் அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. சொந்தமாக தொழில் தொடங்கு கிறார்கள். ஆனால் நீங்கள் ஆட்டோ ஓட்டி பிழைப்பவர். என்னால் எப்படி சொந்தமாக ஒரு தொழில் செய்ய முடியும்? எனக்கு வேலைக்கு செல்வதும் ஆட்டோ ஓட்டுவதும் பிடிக்கவில்லை" என்று சொல்ல அவன் தந்தை மனம் நொந்து போகிறார். இதற்காக இவனை கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிக்க வைத்தோம் என்று.
இப்படித்தான் சிலர் கையில் இருக்கும் வெண்ணையை விட்டுவிட்டு நெய்யைத் தேடி அலைவதுபோல தன்னிடம் இருக்கும் திறமையை நம்பாமல் இருக்கிறார்கள். இதனாலேயே இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமும் வளர்ச்சியும் பின்தங்கி போகிறது. ஆனால் ஒரு சிலரோ உத்வேகத்துடன் தங்களிடம் உள்ள சிறிய விஷயத்தையும் பயன்படுத்தி சாதனை செய்கின்றனர். அதில் ஒருவரை இங்கு காண்போம்.
தற்போது எங்கு பார்த்தாலும் youtube சேனல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் வருமானம் வந்தாலும் அதிகப்படியான உழைப்பை அதில் போட்டால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
Youtube பிரபலமாகாத காலத்திலேயே தன்னிடம் இருந்த விலை மலிவான செல்போனை கொண்டு யூடியூப் சேனல் தொடங்கி இன்று உலகமே ரசிக்கும் youtube சேனல் வைத்திருக்கிறார் ஒரு ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண். அவர் நடத்தும் சமையல் தொடர்பான சேனலின் பெயர் Sidhi Marwadi.
ராஜஸ்தான் மாநிலம், குரி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான கெளசல்யா செளத்ரிதான் அந்த பெண்மணி. "நான் வேலைக்குச் சென்றுவிட்டால், வீட்டுக்கு வரும் விருந்தினர்களை யார் கவனிப்பார்" என்று என் மாமியார் நினைத்ததாக கூறும் கெளசல்யாவிற்கு கைகொடுத்தது யூ டியூப். அம்மா வீட்டில் கற்றுக் கொண்ட சமையல் இவரை சாதனையாளராக்கி உள்ளது.
சமையலில் அதிக ஆர்வத்துடன் இருந்தவர் திருமணமானதும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து கணவரின் ஆதரவு பெற்று தன்னிடமிருந்த சாதாரண செல்போனில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு எடிட்டிங் கற்றுக்கொண்டார். முதலில் ஒரு வீடியோவை அப்லோடு செய்தார். ரைட் ஆங்கிள், லைட்டிங், ஆடியோ எந்த வசதியும் இல்லை. சின்ன செல்போன். அவ்வளவுதான். தன் சமையலின் ருசியால் உலகையே கட்டிப்போட்டுவிட்டார் இவர்.
தன் சமையல் வீடியோக்களை 2017 ஆம் ஆண்டு முதல் எடுக்கத் தொடங்கிவிட்டார். தொடக்கத்தில் எந்த தொழில்நுட்ப வசதிகளும் இல்லை. நெட்வொர்க் இல்லாமல் வீட்டின் மேல் பல மணிநேரம் அமர்ந்து அப்லோடு செய்த அனுபவம் உண்டு. இவரே சம்பாதித்து 7500 ரூபாய்க்கு ஒரு செல்போன் வாங்கி தனது சமையல் வீடியோக்களை அரும்பாடுபட்டு வெளியிட்டுள்ளார்.
சளைக்காமல் பாடுபட்டதன் பலனாக யூ டியூப் மூலம் அவருக்குக் கிடைத்த முதல் வருமானம் ரூ. 7500. ஒரு கட்டத்தில் அவருடைய வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை அடைந்து வருமானம் லட்சங்களை அடைந்துள்ளது இந்த புகழ்வெளிச்சம் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
இன்று அவரது சேனலுக்கு சுமார் 1.6 மில்லியன் பார்வையாளர்கள் என்பது வியப்பு தருகிறது அல்லவா? அத்துடன் இன்று அவர் ‘Sidhi Marwari’ என்ற உணவு தானியங்களை விற்பனை செய்யும் பிராண்ட்டை உருவாக்கியுள்ளார். அவரது தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. இது அவரது கனவு என பெருமிதம் கொள்வதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இல்லாததை நினைத்து ஏங்கி வாழ்வை வீணடிக்காமல் இவரைப் போல இருக்கும் வசதிகளை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதே புத்திசாலித்தனம்.