
ஆங்கில மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் உலகின் தலைசிறந்த நாடக ஆசிரியராக கருதப்படுபவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அவரது எழுத்துக்கள் இன்றும் போற்றப்படுகின்றன. மனித உளவியலின் சிக்கல்களை ஆழமாக ஆராய்ந்து உணர்ச்சிகரமான கருத்துக்களை வெளியிடுவதில் ஷேக்ஸ்பியர் மிகச் சிறந்தவர். அவரது நாடக கதாபாத்திரங்கள் ஹேம்லெட், ஒத்தலோ, மேக்பத் ரோமியோ ஜூலியட், ஆண்டனி & கிளியோபாட்ரா போன்றவை காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன.
கிட்டத்தட்ட 3000 புதிய சொற்களை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். சிலேடைகள், உருவகங்கள், உவமைகள் கலந்து எழுதுவதில் வல்லவர். மனித வாழ்க்கையைப் பற்றிய அவரது கருத்துகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உலகம் ஒரு நாடக மேடை. அதில் ஆண்களும் பெண்களும் நடிகர்கள். மேடையில் நுழையவும் வெளியேறவும் பல வழிகள் உள்ளன. தன் வாழ்நாளில் ஒரு மனிதன் பல வேடங்களில் நடிக்கிறான்
2. சந்தேகங்கள்தான் நமது துரோகிகள். முயற்சி செய்ய அஞ்சுவதன் மூலம் அதனால் கிடைக்கக்கூடிய பல நன்மைகளை இழக்க நேரிடும்.
3. ஒரு நிமிடம் தாமதமாக செல்வதை விட மூன்று மணிநேரம் சீக்கிரமாக செல்வது நல்லது.
4. பொறுமை இல்லாதவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். உடலில் காயம் ஆறுவதற்கும் வாழ்வில் வெற்றி கிடைப்பதற்கும் பொறுமையும் நிதானமும் அவசியம்.
5. மிகுந்த கவனம் எடுத்து ஒரு செயலை சிறப்பாக செய்து முடிப்பவர்களுக்கு அச்சம் என்பதே இருக்காது.
6. கோழைகள் தமது மரணத்திற்கு முன்பு பலமுறை பயத்தினால் இறந்து போகிறார்கள். ஆனால் வலிமையான வீரன் வாழ்வில் ஒருமுறை மட்டுமே மரணத்தைத் தழுவுகிறான்.
7. நல்லது கெட்டது என்று எதுவுமே இல்லை. அதைப் பற்றிய புரிதலில்தான் உள்ளது.
8. மகிழ்ச்சியான மனதோடும் வாய் நிறைய சிரிப்போடும் முதுமையை எதிர்கொள்வோம்.
9. ஒரு சிறிய மெழுகுவர்த்தி எத்தனை பிரகாசமாக ஒளி தருகிறது. அதுபோலவே இந்த உலகில் நற்செயல் புரியும் மனிதனின் செயல் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.
10. நாம் யார் என்று நமக்குத் தெரியும். ஆனால் நமக்கு என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது.
11. எல்லா சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருங்கள். அது இரவு பகல்போல உங்களை பின் தொடர்ந்து வரவேண்டும். எந்த மனிதனுக்கும் முகமூடி அணிய தேவை இல்லை.
12. வாழ்வில் சாதனை புரிவதற்கு ஒருபோதும் அஞ்சாதீர்கள். சிலர் சாதிப்பதற்காகவே பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து சாதிக்கிறார்கள். இன்னும் சிலரை சாதனைகளே தேடிவருகின்றன.
13. இந்த உலகில் நேர்மையான குணத்தை விட வேறு எந்த சொத்தும் மிக உயர்வானது அல்ல.
14. பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் அதனுடைய வாசனை போகுமா?
15. வாழ்க்கை என்பது நடமாடும் நிழலை போன்றது. வாழ்க்கை என்பது முட்டாள் சொன்ன கதையைப்போல முழுக்க முழுக்க சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்து முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது.