துன்பங்களை மீறி முன்னேறும் வெற்றிப் பாதை!

motivation image
motivation imageImage credit - pixabay.com

வாழ்க்கைப்பாதை அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை. மலர்ப்பாதை மட்டுமே வேண்டும் என்பவர்கள் வெகு சீக்கிரத்தில் தோற்று விடுவார்கள். முள் பாதையையும் ஏற்று முட்களைக் களைந்து முன்னேறுபவர்களே காலம் ஆனாலும் ஜெயித்து விடுவார்கள்.

வாழ்க்கைப்பாதையில் எதிர்பாராமல் வரும் பெரிய குழியில் தடுக்கி விழ வேண்டி வரும். அந்நேரத்தில் "இதோடு நம் கதை முடிந்தது இனி எழ முடியாது" என்று கருதாமல் எப்படி குழியில் இருந்து மேலே வருவது எப்படி என்று யோசிப்பதே வெற்றிக்கான வழி.

ஒரு கிராமத்தில் இரக்கமுள்ள விவசாயி ஒருவர் வாயில்லா ஜீவன்களை பாதுகாத்து நிறைய மாடுகளை வளர்த்து வந்தார். ஒரு நாள் அதிலிருந்த வயதான அடிமாடு ஒன்று தவறி பக்கத்துத் தோட்டத்தில் இருந்த வறண்ட கிணற்றில் விழுந்து விட்டது.

மாடு விழுந்த செய்தியைக் கேட்டு பதறிப்போன அவர் எப்படியாவது மாட்டினை மீட்டு விடலாம் என நினைத்தார். ஆனால் காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த மாட்டின் விலையை விட அதிகம் செலவு பிடிக்கக் கூடியதாக இருந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள். அனைவரும் சொன்ன ஒரு கருத்து இது.

"அந்த கிணறு எப்படியும் மூடப் படவேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான மாடு என்பதால் அதைக் காப்பாற்றுவது வீண் வேலை"

விவசாயி யோசித்தார். அவர்கள் சொன்னதில் உள்ள நியாயம் புரியவே வேறு வழியின்றி மனதைக் கல்லாக்கிக் கொண்டு மாட்டுடன் அப்படியே அந்த கிணற்றை மூடி விடுவது என்று முடிவு செய்தார்.

அனைவரும் திரண்டு அருகில் இருந்த மண் திட்டில் இருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் போட்டார்கள். ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே எட்டிப் பார்த்தார்கள். அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்:
மாயம் செய்யும் தர்பூசணி விதைகள்... இவ்வளவு நன்மைகள் இருக்கா?
motivation image

ஆம். இவர்கள் மண்ணைப்போட, போட அந்த அடிமாடு தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி அதன் மீது ஏறி நின்று கொண்டு இருந்தது. இவர்கள் மகிழ்வுடன் மீண்டும் மணலை கொட்டவும் அந்த மாடு ஒரு வழியாக கிணற்றின் விளிம்பை எட்டி விவசாயியிடம் வந்து உச்சிமோந்து ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. விவசாயிக்கோ பெருமகிழ்ச்சி. அந்தக் கிணற்றின் சொந்தக்காரருக்கோ அதை விட மகிழ்ச்சி. காரணம் செலவில்லாமல் கிணற்றை மூடியாச்சே.

இந்த மாட்டின் நிலைதான் நமக்கும். தொல்லைகள், துன்பங்கள், தடைகள் எனும் பெருங்குழிகள் குறுக்கிடும்போது துவண்டுவிடக் கூடாது. அதுதான் வாழ்க்கை என்று உங்கள் திறமைகளுக்கு நீங்களே முற்றுப் புள்ளி வைக்காதீர்கள்.

அதையும் மீறி நம்மால் முடியும், எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் சிகரத்தினை நோக்கி சலிப்பு இன்றிப் பயணம் செய்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் உங்கள் மன உறுதிக்கு உதவி செய்து வெற்றி நோக்கி நகர வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com