ஒருவர் முடிவுகள் எடுப்பதும், அம்முடிவுகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதும் ஒவ்வொரு நாளும் வாழ்வில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. சில முடிவுகளைச் சில நேரங்களில் எடுக்கத் தயங்குகிறோம். தள்ளியும் வைக்கிறோம். முடிவுகளே நம் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களையும், வெற்றி தோல்விகளையும் தீர்மானிக்கின்றன. சுயசந்தேகம், தோல்வி குறித்த பயம், நம்பிக்கையின்மை, குறித்த அவநம்பிக்கை ஆகியன முடிவுகள் எடுக்காததற்குக் காரணமாகின்றன. சிறந்த, வெற்றிக்கு உதவும், திடமான முடிவுகள் எடுக்க அடிப்படையாக இருப்பது தெளிந்த மனது.
தெளிந்த மனம் என்பது ஆரோக்கியமான, உற்பத்தித்திறன் மிகுந்த, நிச்சயமற்ற தன்மை இல்லாத, திடமான மனம். பல்வேறு கோணங்களிலிருந்து எழும்ப ஐயங்கள் தீர்க்கமான சிந்தனைகளால் நிவர்த்தி செய்து முடிவுகள் எடுப்பதற்குத் தெளிவாக மனம் இருக்கும்போது சரியான முடிவுகளை நாம் எடுக்கிறோம். அம்முடிவு களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். சிறப்பான வெற்றிதரக்கூடிய முடிவுகளைத் தெளிந்த மனத்தாலேயே தொடர்ந்து எடுக்க முடியும். மனதைத் தெளிந்த நிலையில் வைப்பதும். வைக்காததும் நம் கையில் உள்ளது.
சில நேரங்களில் முடிவெடுக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இதற்குக் காரணம் மனம் தெளிவாக இல்லாததுதான். ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுக்க போதிய தகவல்கள் இல்லாததாலும், கிடைக்கும் தகவல்களைத் திறனாய்வு செய்யாமல் இருப்பதாலும், தவறான முடிவுகள் எடுத்தால் என்ன செய்வது என்ற அச்சம் மனதை ஆட்கொள்வதாலும், என்ன செய்வது என்று தெரியாததால் எரிச்சல் ஏற்படுவதாலும் மனதில் குழப்பம் ஏற்படுகிறது. குழம்பிய மனத்துடன் முடிவுகள் எடுக்கும் போது அம்முடிவுகளை ஏன் எடுத்தோம் என்று பின் நாளில் எண்ணத்தோன்றும்.
சில நேரங்களில், சிலரின் உடல் ஒரு இடத்திலும், மனம் இவ்வொரு இடத்திலும் பலரிடம் இருப்பதை நாம் காணத்தான், செய்கிறோம். மனதின் எண்ணங்களை எங்கேயோ அலைபாய வைத்தால் அம்மனது எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருப்பதில்லை. இலக்குகள் என்ன என்பது குறித்தும், அந்த இலக்குகளை எப்படி அடைவது என்பது குறித்தும், இடையில் ஏற்படும் தடைகளை எப்படித் தாண்டுவது என்பது குறித்தும் இயன்ற அளவு தெளிவடைய வேண்டும்.
இலக்குகள் சிறிதானதென்றோ பெரிதானதென்றோ கவலைப்படத் தேவையில்லை. எந்த இலக்காக இருந்தாலும், மணம் அது குறித்துத் தெளிவாக இருக்கும்போது, தெளிந்த சிந்தனைகள் பிறக்கின்றன. இவை இலக்கை அடைய உதவுவதுடன் பயணம் உத்வேகத்துடன் முன்னேறவும் காரணமாகிறது.
நாம் வெற்றிப் பாதைக்கு செல்லவேண்டும் என்றால் முதலில் மனதை தெளிந்த நீர் போல வைத்துக்கொண்டு முக்கிய முடிவு எடுத்தால் அந்தக் காரியம் எந்த தங்கு தடையும் இன்றி நம்மை உச்சத்தில் கொண்டு சென்றுவிடும்.