
நாம் செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் அதை முழு மனதோடு ஈடுபாட்டுடன் மனஉறுதியுடன் செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமக்கு வெற்றி கிடைக்கும். ஏதோ செய்தோம் என்று இல்லாமல் திறமையுடன் செயல்பட ஜப்பான் நாட்டை சேர்ந்த நொபுநாகா என்ற வீரனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்.
ஜப்பான் தேசத்தில் நொபுநாகா என்ற வீரன் ஒருவன் இருந்தான். சிறிய படை ஒன்றை வைத்துக்கொண்டு பெரிய பெரிய சக்கரவர்த்திகளையெல்லாம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். காரணம் அவனது தன்னம்பிக்கைதான்.
ஒருமுறை ஜப்பானில் இருந்த ஒரு பெரிய சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடத்திட்டமிட்டான் நொபுநாகா. ஆனால் அவனது வீரர்களுக்கு இது பிடிக்கவில்லை. "சக்கரவர்த்தியிடம் ஆயிரக்கணக்கில் படைவீரர்கள் உள்ளனர். நாமோ நூற்றுக்கணக்கில் இருக்கிறோம். அவர்களை எப்படி வெல்ல முடியும்" எனக் கேட்டார்கள்.
அதைக் கேட்ட நொபுநாகா "வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. இறைவன் கையில் இருக்கிறது. புத்த விகாரத்திற்குப் போய் பூவா? தலையா? போட்டுப் பார்ப்போம். தலை விழுந்தால் தோற்றுவிடுவோம். போர் வேண்டாம். பூ விழுந்தால் வெற்றி பெறுவோம். போருக்குச் செல்வோம்" என்றார். வீரர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். புத்தர் சிலை முன்பு தான் வைத்திருந்த நாணயத்தை எடுத்து சுழற்றி மேல் நோக்கி வீசினார் நொபுநாகா. கீழே விழுந்த நாணயம் சுழன்று விழுந்து பூ காண்பித்தது.
வீரர்கள் 'வெற்றி நமதே' என உற்சாகத்துடன் போருக்குக் கிளம்பினார்கள். வெற்றியும் பெற்றர்கள். வெற்றி விழாவில் நொபுநாகாவின் தளபதி வெற்றி தேடித்தந்த நாணயத்தை புகழ்ந்து பேசி விதியை யாரால் வெல்ல முடியும் என்று பேசி அமர்ந்தார். உட்கார்ந்த தளபதியிடம் நொபுநாகா தங்க நாணயத்தை கொடுத்தார். அதனைத் திருப்பி திருப்பிப் பார்த்த தளபதி ஆச்சரியமடைந்தார். அதன் இருபுறமும் பூ தான் இருந்தது.
தளபதி 'என்ன இப்படி?' என்பதுபோல் நொபுநாகாவைப் பார்த்தார். அவர் சொன்னார், "வெற்றியின் ரகசியம் இதுதான். எதைச் செய்தாலும் முழுமனதோடு, முழு ஈடுபாட்டோடு செய்தால் அதில் நிச்சயம் வெற்றிபெற முடியும். உங்களுக்கு போரில் சந்தேகமும், குழப்பமும் இருந்தது. அந்த மனநிலையுடன் போராடியிருந்தால் நிச்சயம் தோல்வியைத்தான் சந்தித்திருப்போம். அதற்காகத்தான் இப்படி ஓர் நாடகம் நடத்தினேன்" என்று கூறினார்.
எதையும் ஈடுபாட்டுடனும், மன உறுதியுடனும் செய்யும்போது வெற்றிக்கனி உங்கள் கை மீது வந்து விழும். ஈடுபாடு இன்மை உறுதி இல்லாமல் இவை இரண்டும் நம் வாழ்க்கையில் பல பலவீனங்களை ஏற்படுத்தும். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.