

அநாகரிகமான செயல்களை பார்த்தால் உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா? என்று கேட்பது வழக்கம். அப்படி ஒரு சென்ஸ் பற்றித்தான் இங்கு காணப்போகிறோம். ஒருவரின் வெற்றிக்கு அவசியம் தேவைப்படும் தனிமனித ஒழுக்கம் என்பது அனைவரும் கடைபிடித்தால்தான் அந்த நாட்டுக்கும் பெருமை.
வெளிநாடுகளில் இருக்கும் நேர மேலாண்மை மற்றும் சட்டதிட்டங்களை மதித்தல் ஆகியவை நம் நாட்டில் இன்னும் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்பதுதான் உண்மை. உலகின் பிற பகுதிகளில் இந்தியர் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு வரையறையை வைத்துள்ளனர். அதில் வருவதுதான் civic sense எனப்படும் குடிமை பண்புகள்.
இந்தியரின் அறிவு மற்ற நாடுகளில் வியக்கப்படுகிறது. அதே அளவுக்கு இந்த சென்ஸ்ம் இருந்தால் நமது நாட்டுக்கும் நமக்கும் உலகில் மதிப்பு மேலும் கூடும் என்பதுதான் உண்மை. அது மட்டுமல்ல. இந்த சென்ஸ் நம்மை வெற்றிப்படிகளில் ஏறவும் பெருமளவில் உதவும்.
அது சரி.. civic sense என்றால் என்ன? எதையெல்லாம் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்?
குடிமை உணர்வு என்பது பொது இடங்களில் காட்டப்படும் சமூக நெறிமுறைகள் மற்றும் சமூகம் குறித்தான பொதுநல அக்கறையுள்ள நடத்தை ஆகும். இதில் தூய்மையைப் பராமரித்தல், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், பொது சொத்துக்களை மதித்தல் மற்றும் மற்றவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் மரியாதை காட்டுதல் போன்ற செயல்கள் அடங்குகிறது. சமூக நல்வாழ்வுக்கான கூட்டுப் பொறுப்பாக சொல்லலாம்.
உதாரணமாக நம் குப்பையை சாலைகளில் எறியாமல், நம் வீட்டுக் குப்பைக் கூடையிலேயே வைத்து, அதை மாநகாட்சி குப்பை வண்டி வரும்போது கொட்டுவது, பொது இடங்களில் பயணிக்கும்போது செல்போன் பாட்டை சத்தமாய் வைத்து மற்றவர்களுக்கு எரிச்சல் தராமல் ஹெட்போன் (headphone) பயன்படுத்துவது, சூப்பர் மார்க்கெட் மற்றும் பிற முக்கிய இடங்களில் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து முன்னால் செல்வது போன்றவைகள் இதில் அடங்கும். இப்படி அன்றாட வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் சந்தர்ப்பங்களில் Civic Sense தேவையானதாகிறது.
ஆனால் நன்றாக சிந்தித்துப்பாருங்கள். நம்மில் எத்தனை பேர் சாலைகளில் எச்சில் துப்பாமல் அல்லது சிறுநீர் கழிக்காமல் இருக்கிறோம்? போக்குவரத்து விதிகள் மற்றும் பயண ஒழுங்கு முறைகளை கடைபிடிக்கிறோம்? குறிப்பாக அட்லீஸ்ட் நமது வீட்டுக் குப்பைகளையாவது வெளியே போடாமல் இருக்கிறோமா?
சரி இதற்கு என்ன செய்வது? சிறு வயதிலிருந்தே குடிமக்களுக்கு சமூகத்தில் அவர்களின் பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்பித்தல் அவசியமாகும். அத்துடன் போதுமான உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவதன் மூலமும் அரசாங்கங்களும் அதிகாரிகளும் தங்கள் பங்கை அளிக்கவேண்டும்.
ஒட்டுமொத்த சமூகமே இப்படிதானே இருக்கிறது நான் மட்டுமா? என்பவர்களுக்கு ஒரு விஷயம் இப்போதும் நேரம் இருக்கிறது. மாற்றத்திற்கான முதல் அடியை வெற்றிக்குத் துடிக்கும் நாம் எடுத்து வைப்போம்.. அதுமட்டுமின்றி நமது ஓழுங்கீனங்களை மாற்றிக் கொண்டால் நம் மீதே நமக்கு நம்பிக்கை பிறக்கும். நேர மேலாண்மைக்கு உதவும் இந்த சென்ஸ் நமது வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் பணிக்கு நிச்சயம் ஏணியாகும்.