

நமது முன்னோர்கள் "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா" என்று கூறியது சக்தி வாய்ந்த சொற்றொடராகும். இன்று நவீன அறிவியலும் அதையேதான் சொல்கிறது. நமது மூளை என்பது வெறும் எலும்புக் கூட்டுக்குள் இருக்கும் ஒரு உறுப்பு மட்டுமல்ல; அது ஒரு 'சக்தி வாய்ந்த மின் நிலையம் என்கிறது. மூளையின் அபூர்வ ஆற்றலைத் தூண்டி வாழ்க்கையை மாற்றும் ரகசியம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
நமது எண்ணங்களே காந்தம்
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அணுக்களால் ஆனது. அணுக்களுக்குள் இருக்கும் துகள்கள் எப்போதும் ஒரு விதமான அதிர்வில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நமது எண்ணங்களும் ஒரு வகையான ஆற்றல் அலைகள் தான். இவை தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்ற கருவிகளாக செயல்படுகின்றன.
குவாண்டம் இயற்பியல் என்ன சொல்கிறது தெரியுமா? ஒரு பொருளை நாம் எப்படிப் பார்க்கிறோமோ, அப்படியே அது மாறுகிறது. அதாவது, உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ, அதுவாகவே அது உருமாறுகிறது. நீங்கள் "வாழ்க்கை கஷ்டம்" என்று நினைத்தால், மூளை கஷ்டங்களை மட்டுமே தேடிப் பிடிக்கும். "என்னால் முடியும்" என்று நம்பினால், வெற்றிக்கான வழிகளை மூளை காந்தம் போல ஈர்க்கும்.
ஒரே நேரத்தில் பல வாய்ப்புகள்!
நமது வாழ்க்கை ஒரு நேர்க்கோடு அல்ல. நம் முன்னே பல வழிகள் உள்ளன. மனிதன் விரும்பினால் வெற்றியாளராக மாறலாம், அல்லது சாதாரண மனிதராகவும் இருக்கலாம். அவர் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்’ என்பதை அவரது 'ஆழ்மனம்' தீர்மானிக்கிறது.
இதைத்தான் 'ஈர்ப்பு விதி' என்கிறோம். நமது மூளை ஒரு ரேடியோவைப் போன்றது. நீங்கள் சோகமான பாடல்களைக் கேட்க விரும்பினால், அந்த அலைவரிசையைத் திருப்புகிறீர்கள். அதேபோல, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டும் என்றால், உங்கள் எண்ணங்களின் அலைவரிசையை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டும்.
சித்தர்களும் நவீன அறிவியலும்
திபெத்தியத் துறவிகளும், இந்தியச் சித்தர்களும் கடும் குளிரிலும் தங்கள் உடல் வெப்பத்தை மன சக்தியால் சீராக வைத்திருப்பார்கள். இது ஏதோ மந்திரத்தால் நிகழ்வது அல்ல, மனக் கட்டுப்பாடே காரணம். அவர்கள் நீண்ட கால தியானம் மூலம் மூளையின் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கிறார்கள்.
சாதாரணமாக நமது மூளை இத்தகைய சக்திகளைப் பூட்டி வைத்திருக்கிறது. ஏன் தெரியுமா? ஒரே நேரத்தில் எல்லாச் சக்திகளும் கிடைத்தால் நம்மால் அதைத் தாங்க முடியாது. ஆனால், சரியான பயிற்சி இருந்தால் இந்த 'ரகசியக் கதவுகளை' மெதுவாகத் திறக்க முடியும்.
மூளையின் ரகசியக் கதவுகளை திறப்பது எப்படி?
நேர்மறைப் பேச்சு: "தெரியாது", "முடியாது" என்ற வார்த்தைகளைத் தவிர்த்து, "முயற்சி செய்கிறேன்", "கற்றுக்கொள்கிறேன்" என்று எண்ணவும், பேசவும் வேண்டும்.
காட்சிப்படுத்துதல் (Visualization): நீங்கள் அடைய விரும்பும் இலக்கை, ஏற்கனவே அடைந்துவிட்டது போல மனக்கண்ணில் கற்பனை செய்து பாருங்கள்.
அமைதி: தினமும் 10 நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருங்கள். இது உங்கள் மூளையின் தேவையற்ற இரைச்சலைக் குறைத்து, சக்தியை ஒருமுகப்படுத்தும்.
ஒரு சிற்பிக்குள்ளே ஒரு அழகான சிலை தூங்கிக் கொண்டிருப்பதைப் போல, உங்களுக்குள்ளும் ஒரு மாபெரும் வெற்றியாளன் ஒளிந்திருக்கிறான். உங்கள் மூளை என்பது அந்தச் சிலையினைச் செதுக்க உதவும் ஒரு மந்திரக் கருவி. பிரபஞ்சத்தின் ரகசிய ஆற்றலை உங்கள் எண்ணங்களோடு இணைக்கப் பழகிக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளும் அந்த வித்தை இப்போது உங்கள் வசம்.