பக்ரா அணைக்கட்டு உருவான கதை: ஹார்வி ஸ்லோகமின் நெஞ்சுறுதி!

Motivational articles
dam-maker harvey slocum
Published on

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரம்மாண்டமான 'பக்ரா' அணைக் கட்டைப் பார்க்கும்போது, அதனுடன் சம்பந்தப்பட்ட ஒரு மனிதரின் நினைவு கட்டாயம் தோன்றும். மனிதனின் கட்டுமானச் சாதனைகளில் ஒன்றான இந்த அணையை வடிவமைத்துக் கட்டுவதற்கு அரும்பாடுபட்டவர் அமெரிக்கப் பொறியியல் வல்லுனர் ஹார்வி ஸ்லோகம். முறையான கல்விப் பயிற்சி பெற்றிராத நிலையிலும் உலகின் மகத்தான அணைக்கட்டுப் பொறியாளர்களுள் ஒருவராக உயர்ந்தவர் ஹார்வி ஸ்லோகம்.

இந்தியாவின் வடபகுதியில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கும் குடும்பங்களுக்கும் பலனளித்துவரும் பக்ரா அணைக்கட்டு, அவர் மேற்கொண்ட மிகச்சிறப்பான கட்டுமானப் பணிகளில் ஒன்றாகும்.

அந்த அணைக்கட்டை வடிவமைப்பதில் உள்ள சிக்கலான பொறியியல் பிரச்னைகள், பிரம்மாண்டமான அளவில் அதைக் கட்ட வேண்டியிருப்பது ஆகியவை ஹார்வி ஸ்லோகத்திற்குப் பெரும் சவால்களாகத் தோன்றின. அந்தச் சவால்களை அவர் ஏற்றார்.

அபாரமான கற்பனைத் திறன், அறிவுக் கூர்மை, சளைக்காத உழைப்பு, ஊற்றெடுக்கும் ஆற்றல் இவற்றினால் ஹார்வி ஸ்லோகம் தனது தொழிலில் தனித்து விளங்கினார். பக்ரா அணைக்கட்டு உருவாகிக் கொண்டிருந்த நாள்களில் அதனைப் பட்டவர்த்தனமாகக் காணமுடிந்தது. பக்ரா அணைக்கட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அவரோடு நெருங்கிப் பழகிய இந்திய நண்பர்கள் அவரைத் திருவாளர் அணைக்கட்டு என்றுதான் அழைத்தனர்.

பக்ரா அணைக்கட்டு உருவாகிக் கொண்டிருந்தபோது, அணைக் கட்டுத் திட்டப்பகுதியில் பெரும் நெருக்கடியொன்று ஏற்பட்டது. ஆற்றின் இடக்கரைப்பக்கமாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த அணையின் உள்ளறைப் பகுதியில், திடீரென்று ஆற்று வெள்ளம் நிரம்பியது. ஹார்வி 80 ஆண்களை வைத்துக்கொண்டு நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்தார்.

குறைந்தபட்சம் 300 பேராவது இல்லாமல் அந்தப் பணியை நிறைவேற்ற முடியாது என்று பொறியாளர்கள் மதிப்பிட்டிருந் தனர், ஆனால், குறைந்த ஆட்களுடன் ஹார்வி அப்பிரச்னையைச் சமாளித்தார். பக்ரா அணைத்திட்டத்தையே கைவிட்டிருக்கக் கூடிய அபாயகரமானதொரு நெருக்கடியை அவர் தவிர்த்தார். இவரைப்போல் வேறு யாருமே இந்தக் காரியத்தைத் திறன்படச் செய்திருக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
எளிதில் யாரையும் நம்பாதே! - மன உளைச்சலைத் தவிர்க்கும் வழிகள்!
Motivational articles

பக்ரா அணைத்திட்டத்தின் இறுதிக்கட்டங்களில், ஹார்வி ஸ்லோகம் தனது உடல் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அடிக்கடி திட்டப்பகுதிகள் வந்து அங்கு நடக்கும் பணிகளை மேற்பார்வையிட்டார். அவ்வாறு வழக்கம் போலப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஸ்லோகமின் உயிர் பிரிந்தது.

பக்ரா அணையிலிருந்து அதன் ஆயக்கட்டுப் பகுதிகளுக்கும் பாய்கிற பாசன நீரும், சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கும் பக்ரா அணையின் மின்விசையும், இரும்புபோல வலிமையான நெஞ்சுறுதி படைத்த அந்த மாபெரும் மனிதனை நினைவு கூறும் சாட்சியங்களாக விளங்குகின்னறன.

ஒரு செயலைத்தொடங்கிவிட்டால் அதனை வெற்றியுடன் முடித்து வைப்பதே ஒருவனின் குறிக்கோளாக இருக்கவேண்டும். சாதனையை செய்து முடிப்பதென்பது, ஏதோ மலர்த்தோட்டத்தில் பூப்பறிப்பது போன்றதல்ல. அது அடர்ந்த காட்டில் அரிய மூலிகையைத்தேடி கண்டுபிடிப்பது போன்றதாகும். ஆகவே சோதனைகளை சாதனைகளை ஆக்குவதே மிகச்சிறந்த செயலாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com