

நம் வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு அதிகமாக பணம் மற்றும் நேரம் செலவழித்திருப்போம். இருப்பினும் அந்த விஷயம் நமக்கு சரியாக கைக்கூடாமல் போகலாம். ஆனால் பணம், நேரம் செலவழித்து விட்டோமே என்ற ஒரே காரணத்திற்காக அந்த விஷயத்தை தொடர்ந்து செய்துக் கொண்டிருப்போம். "இவ்வளவு தூரம் வந்துட்டோம், இனி பின்வாங்கக் கூடாது" என்று நினைப்பதே இந்தத் தவறுக்குக் காரணம்.
உதாரணத்திற்கு, ரிலேஷன்சிப்பில் இருக்கும் இருவருக்குள் எதுவுமே ஒத்துப் போகவில்லை என்று வைத்துக் கொள்வோம். எந்நேரமும் சண்டைப் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். "எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். பிரேக்கப் செய்துவிட்டு போக வேண்டியது தானே!" என்று கேட்டால், "நாங்கள் மூன்று, நான்கு வருடங்களாக ரிலேஷன்சிப்பில் இருக்கிறோம் அப்படியெல்லாம் போக முடியாது!" என்று சொல்வார்கள். சில குறிப்பிட்ட காலம் அந்த ரிலேஷன்சிப்பில் நேரத்தை செலவழித்துவிட்டோம் என்ற காரணத்திற்காக, என்ன தான் அவர்களுக்குள் எதுவுமே செட்டாகவில்லை என்றாலும், தொடர்ந்து அந்த ரிலேஷன்சிப்பில் இருக்க முயற்சிப்பார்கள்.
இதுப்போலவே சிலர் பிஸினஸ் செய்யும் போது கையில் இருக்கும் அனைத்து பணத்தையும் போட்டு, லோன் எடுத்து ஒரு பிஸினஸை உருவாக்க முயற்சிப்பார்கள். ஆனால் அது சரியாக போகவில்லை. அதில் அந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்தாலுமே அதை தொடர்ந்து செய்துக் கொண்டிருப்பார்கள், இதுவரை செலவழித்த நேரம், பணம் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக. இதை தான் "Sunk Cost Fallacy" என்று சொல்வார்கள்.
அதாவது ஒரு விஷயத்துக்காக குறிப்பிட்ட நேரம், பணம் செலவு செய்துவிட்டால் அதில் இருந்து எந்த லாபமும் கிடைக்காது என்று தெரிந்தாலுமே அதற்காக இவ்வளவு நேரம், பணம் செலவு செய்துவிட்டோமே அது வீணாகிவிடுமே என்ற எண்ணத்திலே அதை தொடர்ந்து செய்ய ஆரம்பிப்போம்.
ஐநூறு ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட்டை வாங்கிவிட்ட காரணத்தால் பிடிக்கவேயில்லை என்றாலும் அந்த படத்தை பார்த்துவிட்டு வருவோம், ஒரு முன்னூறு ரூபாய் செலவு செய்து பர்கர் வாங்கிவிட்டால் அது பிடிக்கவில்லை என்றாலும், காசு செலவு செய்துவிட்டோமே என்று அதை கஷ்டப்பட்டு சாப்பிடுவது போல. இங்கே நீங்கள் அதை சாப்பிட்டாலும், சாப்பிடவில்லை என்றாலும் பணம் வீணானது ஆனது தான்.
எனவே, நேரம் செலவு செய்துவிட்டோம், பணம் செலவு செய்துவிட்டோம் என்பதற்காக பிடிக்காத, எந்த எதிர்காலமுமே இல்லாத ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மேலும் நம் நேரத்தையும், பணத்தையும், மன அமைதியையுமே வீணாக்கும் செயலாக இருக்கும். நமக்கு என்னவென்றே தெரியாத புதுவிஷயத்தை ஆரம்பித்து அதை தொடர்ந்து செய்வது மட்டும் தைரியம் கிடையாது. அது வேலைக்காகவில்லை என்று தெரிந்ததும் அதை புரிந்துக் கொண்டு நிறுத்துவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.