

நேரம் என்பது இரக்கமற்றது விலைமதிப்பற்றது. இதை நாம் எவ்வளவு புத்திசாலித்தனமாக பயன் படுத்துகிறோம்? வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கத்தில் கழிகிறது. பத்தில் ஒரு பங்கு குளிப்பது அழகுபடுத்திக் கொள்வதில் செலவாகிறது. ஆறில் ஒரு பங்கை உறவினர் நண்பர்களுடன் பேசுவதில் கழிக்கிறோம். 70 சதவீதம் இப்படியே செலவழிகிறது. எஞ்சியிருப்பது 30 சதவீதம்தான். நேரத்தை திட்டமிட்டு செலவழித்தால் அதிகம் பலன்கள் பெறமுடியும். நாமறியாமலே வெட்டிப் பேச்சிலும், வம்பளப்பதிலும் அதிக நேரத்தை செலவழிக்கிறோம் இதை ஏன் குறைக்கக்கூடாது?.
நம்மால் உறங்காமல் இருக்கமுடியாது. ஆனால் உறங்கி எழுந்ததும் விரைவாக காரியங்களை செய்து முடிக்க வேண்டும் தினசரி பத்திரிகையை ஒருவரி விடாமல் படிக்கவேண்டிய அவசியம் இல்லை. வேகமாக படிக்க கற்றுக்கொள்ளலாம் காலை 9மணிக்கெல்லாம் வேலையை துவங்கி விடவேண்டும்.
ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் எட்டரை மணிநேரம் வேலை செய்யலாம். துடிப்பாகச் செயல் படுபவர்கள் ஒரு. நாளைக்கு 10 மணிநேரம் வேலை செய்தாலும் தீங்கு ஏற்படாது. அளவிற்கு மீறி நம்மை வறுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதற்கு அர்த்தமல்ல. அவ்வாறு செய்வது பிரயோசனம் தராது வேலை செய்வதற்கு உடல் நலம் சீராக இருக்கவேண்டும்.
எப்படி வேலை செய்வது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது போலவே எப்படி ஓய்வெடுப்பது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். நாகரீகம் வளர்ந்து பல ஆண்டுகள் ஆனாலும் ஆறில் ஒரு பங்கு மக்கள் எழுத்தறிவில்லாதவர்களாக உள்ளனர். உலக மக்களின் சராசரி கல்வி நடுத்தர பள்ளி அளவுக்கே உள்ளது. வாழ்நாள் குறுகியது அதேபோல் நேரமும் குறுகியது "இந்த உலகில் ஒருமுறைதான் வாழமுடியும் என நினைக்கிறேன். என்னால் என் இனத்தவர்க்கு ஏதாவது நன்மையைச் செய்ய முடியுமானால் அதை ஓத்திப்போடவோ, அலட்சியப்படுத்தவோ செய்யாமல் இருப்பேனாக, ஏனெனில் மீண்டும் உலகில் நான் வாழ முடியாமல் போகலாம்" என்று ஸ்டீபன் கிரெல்லட் கூறியதை நினைவில் கொள்வோம்.
இந்தியாவில் நாம் கடிகாரத்திற்கு மரியாதை கொடுப்பதில்லை. அதனால்தான் முன்னேற்றம் பின்னடைவில் உள்ளது. நேரத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட வேண்டும். அதன்மூலம் சுபிட்சம் அடைய இயலும் நம்முடைய குடும்பத்தினருடைய வாழ்வை மேலும் மகிழ்ச்சிகரமானதாக ஆக்க முடியும்.
தூக்கம் அடிப்படைத்தேவை. கடின உழைப்புக்கு இயற்கை தரும் போனஸ் உறக்கம். ஆனால் பைபிளில் உறக்கத்தை நேசிக்காதே. அது உன்னை வறுமையில் ஆழ்த்தும். கண் விழித்திரு. உனக்கு ஏராளமான உணவு கிடைக்கும் என்று பைபிள் கூறுகிறது. எறும்பை பார், தனக்கு கட்டளையிடுவதற்கு யாரும் இல்லாத போதே கோடையில் தனக்கு வேண்டிய உணவை சேர்த்து வைத்துக் கொள்கிறது. அதைப்போல் சுறுசுறுப்பாக இரு என பைபிள் கூறுகிறது.
நேரத்தை மிச்சப்படுத்துபவன் எல்லாவற்றையும் மி ச்சப் படுத்துகிறான் என்றார் பெஞ்சாமின் டிஸ்ரேலி. பிரான்சிஸ் பேகனும் நேரத்தின் முக்கியத்துவத்தை தமது நூல்களில் வலியுறுத்தியுள்ளார். வாங்கக் கூடிய பொருளுக்கு பணம் அளவு கோலாக இருப்பது போன்று வணிகத்துக்கு நேரம்தான் அளவுகோல் என்ற பெஞ்சாமின். நீங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்களா அப்படியானால் நேரத்தை வீணடிக்காதீர்கள் ஏனெனில் வாழ்க்கை என்பதே அதனால் ஆனதுதான் என்கிறார் அவர். நேரத்தை நன்கு நிர்வகிப்பவர்க்கு வெற்றி நிச்சயம்.